Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

களங்களின் டைம்லைன் : இன்று அரசியல் சட்ட எரிப்பு நாள்!

ஜாதிக்கு எதிராக தொடர்ந்து கடுமையாக போராடி வந்த தந்தை பெரியார், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் உருவான அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். சுவாமிமலை கூட்டத்தில் பேசிய அவர், 'பிராமணன் என்றொரு சாதி இல்லை' என்று அறிவிக்காவிட்டால் நங்கள் சட்ட புத்தகத்தை கொளுத்தப் போகிறோம் என்று அறிவித்தார்.


3.11.1957 ல் தஞ்சாவூரில் பெரியார் சாதி ஒழிப்பு மாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் அரசியல் சட்டத்தில் உள்ள மதப்பாதுகாப்பு, மத உரிமை என்பதில், பார்ப்பன ஜாதியை எவ்வாறெல்லாம் காப்பாற்றும்படி சட்டம் உள்ளது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி எல்லாம் ஒடுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதையும் விளக்கிப் பேசினார். அக்கூட்டத்தில் பெரியார், " இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்பது சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை"  என்பதை கூறியபோதுதான் ஆட்சியாளர்களுக்கே அது தெரிந்தது. உடனடியாக அவசர அவசரமாக, 'அரசியல் சட்டத்தை எரித்தால் மூன்றாண்டுகள் வரை சிறை' என்ற சட்டத்தை அன்றைய மாநில அரசு நிறைவேற்றியது.

பெரியார் கொடுத்த கெடுவுக்குள் அவர் கூறியவை செயற்படுத்தப்படவில்லை. ‘அய்யயோ எனக்கும் அதுக்கும் சமந்தம் இல்லை’ என்று தற்போது சிலர் போலீசுக்கு, வழக்குக்கு பயந்து ஓடுவது போல் அல்லாமல்,  சட்ட எரிப்பினால் கைதாகும்போது கூற வேண்டியவை என்று பெரியார் ஒன்றை வெளியிட்டார். அதில், 'ஜாதியை பாதுகாக்கும் சட்டத்தை எதிர்க்கவே சட்டத்தை எரித்ததாகவும்,  அதில் தவறில்லை என்று  எதிர்வாதாட  விரும்பவில்லை எனவும், மேலும் என்ன தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியாய் ஏற்றுகொள்வதாகவும்' நீதிமன்றத்தில் அறிவிக்கும்படி கூறி இருந்தார்.

சட்ட எரிப்பு நாளுக்கு முன்னதாக தந்தை பெரியார் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட, பெரியார் இல்லாமலே, அவர் அறிவித்த நாளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 10,000 பேர் திரள, திக்குமுக்காடிப் போனது அரசாங்கமும் போலீசும். வெறும் 3000 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். விடுப்பிலோ, பிணையிலோ யாரும் செல்லவில்லை. பதினான்கு வயது சிறுவனை நீதிபதி மன்னிப்பதாய் முடிவு செய்ய, அச்சிறுவன் சண்டையிட்டு தனக்கான தண்டனையை வாங்கிக்கொண்டான். சிறையில் பட்டுக்கோட்டை ராமசாமி மற்றும் மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் இறந்தனர். அவர்களின் உடல்,  மணியம்மையார் கடுமையாக போராடியப் பின் ஊர்வலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இவ்விருவரையும் சேர்த்து மொத்தம் பதினெட்டு பேர், சிறையிலும் வெளியில் வந்த பின்னும் இறந்தனர்.

ஜாதிக்கு எதிராய் இத்தனை பெரிய போராட்டம் வெடித்து,  இந்திய சட்டம் கொளுத்தப்பட்டது ஜாதிக்கெதிரான பெரிய மரண அடி. இன்று இந்திய அரசியல் சட்டம் கொளுத்தப்பட்ட நாள்.

-ரமணி மோகனகிருஷ்ணன்

(மாணவப்பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்