Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுயமரியாதை திருமணம் சட்டம் - ஓர் பார்வை!

ந்தியாவில் சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்த, முன்னெடுக்கும் மாநிலங்களில் என்றுமே தமிழகம் முன்னணியில் இருக்கிறது. அதில் முக்கியமான விஷயம் சுயமரியாதைத் திருமணச் சட்டம். தன் சொந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தால் கூட, தான் திருமணம் செய்யப்போகும் நபரை, தான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழப்போகும் நபரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டவர்கள் இன்று, ஜாதி மறுத்து காதல் திருமணம் செய்ய முடிகிறது என்றால் அதற்கு காரணம் இந்த சுயமரியாதைத் திருமணச் சட்டம் தான்.

சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலகட்டத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள சுக்கிலாநத்தம் என்ற ஊரில் சண்முகம் மற்றும் மஞ்சுளா என்ற இணையர்களுக்கு, 1928-ம் ஆண்டு முதல் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் நடத்தி வைத்தார். அதில் முக்கியமான விஷயம், மணமகள் மஞ்சுளா ஒரு விதவை. அப்போது நடைபெற்ற சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி அங்கீகாரம் பெறாதவையாகவே இருந்தன. இதனால் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வோர் பல இன்னல்களுக்கு உள்ளாகினர். ‘கலப்பு திருமணம்’ செய்வது ‘தெய்வக்குத்தம்’ என்று 'குய்யோ முய்யோ'வென கத்தியவர்களுக்கு, ‘மனித ஜாதியில் பிறந்த ஆணுக்கும், மனித ஜாதியில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது எப்படி கலப்பு திருமணம் ஆகும்? நான் என்ன மனிதனுக்கும், மாட்டுக்குமா திருமணம் செய்து வைத்தேன்’ என்று ‘தடியால்’ அடித்தது போல் ஒரு போடு போட்டார் பெரியார்.

1954-லிலேயே ஸ்பெஷல் திருமணச் சட்டம் ஏற்கப்பட்டு, வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் சட்டம், ஜனவரி 1, 1955-லேயே நடைமுறைப்படுத்த தொடங்கி இருந்தாலும், 1947 தொடங்கி, இந்து மதத்தில் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும், இந்து மதச் சீர்திருத்தச் சட்டத்தை ஜவஹர்லால் நேருவால் 1955-ம் ஆண்டு தான் நிறைவேற்ற முடிந்தது.

1947-ல் அம்பேத்கர் இந்து மதச் சீர்திருத்த சட்டத்தின் முன் வரைவை வாசிக்கையில், பலரும் முகம் சுழித்தனர். அதில் ஒன்று தான் திருமணச் சட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1951-ல் பல எதிர்ப்புகளுடன் நாடாளுமன்ற விவாதத்திற்கு வர, சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அம்பேத்கர் தன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். ஒரு வழியாக 1955-ல் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்து மத திருமணச் சட்டத்தில், என்னதான் எந்த ஜாதியை சேர்ந்தவரானாலும் (இந்து மதத்திற்குள்) அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தாலும், அதில் சாஸ்திரங்கள் இருத்தல் வேண்டும். ஆனால், சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற ஜாதியின் அடிப்படையான எல்லாவற்றையும் உடைக்கவேண்டும் என்பது தான் பெரியாரின் லட்சியம். அதற்கான செயல் வடிவமே சுயமரியாதைத் திருமணச் சட்டம். புரோகிதர் வேண்டாம், தாலி வேண்டாம், இருமனம் இணையும் திருமணத்தை அங்கீகரிப்பதே சுயமரியாதை திருமணச் சட்டம்.

1967-ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதை திருமணச் சட்டம், அண்ணாவால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அன்று நடந்த குறிப்பிட வேண்டிய நிகழ்வு, மசோதா சட்டமாகும் முன், அதன் வரைவு நகலை தந்தை பெரியாருக்கு அனுப்பி வைத்தார் அண்ணா. அதில், ‘மாலை மற்றும் தாலி’ என்று குறிப்பிட்டு தாலி என்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்ததை கவனித்த பெரியார், தாலியை கட்டாயமாக்க வேண்டாம், ‘மாலை அல்லது மாலையும் தாலியும்’ என்பதாக ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பின்னே, அதில் திருத்தம் மேற்கொண்டு அதனை சட்டமாக்கினார் அண்ணா.

முன்பெல்லாம், திருமணம் செய்து கொள்பவர்களுக்கே ஒருவரை ஒருவர் முன்பின் தெரியாமல், திருமணம் முடிந்தவுடன் அவர் எப்படிப்பட்டவரானாலும் சேர்ந்து வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. மேலும் மனைவி இறந்து விட்டால் மட்டும் கணவனானவன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்ததை சுட்டிக்காட்டி, இந்த புரோகிதர் தேவை இல்லாத இந்த சுயமரியாதைத் திருமணச் சட்டம், நன்கு அறிமுகமான தனக்கு பிடித்த ஒருவரை மணம் முடிக்கவும், பிடிக்கவில்லை என்றால் மணம்முறிவு செய்து கொள்ளவும், மறுமணம் செய்து கொள்ளவும் வழிவகை செய்வதாக ஒரு சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைக்கையில் குறிப்பிட்டார்!

ஜாதிக்கான வேர், சுய ஜாதி திருமண முறை என்பதைக் கண்டறிந்த தந்தை பெரியார், அந்த நச்சுச் செடியை வேரறுக்க கண்டுபிடித்த ரம்பம் தான் ஜாதி மறுப்பு திருமணம். அதற்கான சட்ட வடிவம் தான் சுயமரியாதைத் திருமணச் சட்டம்!

சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் 28-11-1967 !

-ரமணி மோகனகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ