Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊனமென்பது ஒரு குறையல்ல!

1981 ஆம் ஆண்டை `சர்வதேச மாற்றுத் திறனாளிகள் ஆண்டாக’ கொண்டாட வேண்டும் என 1976 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் பின் மாற்றுத் திறனாளிகளும் மற்ற சாதாரண மனிதர்கள் போல அனைத்து உரிமைகளுடனும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி `சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாளாக’ கொண்டாடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுசபை முடிவெடுக்க, 1992 ஆம் ஆண்டு முதல் உலகமெங்கிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை மையக்கருத்தாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான குறிக்கோள் – Inclusion Matters: Access & Empowerment for People of All Abilities - என்பதாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்றவர்கள் போல சம உரிமையும் அதிகாரமும் வழங்க வேண்டும் என இப்போது அனைவரும் பேசி வந்தாலும், இதை 14 வருடங்களுக்கு முன்பே அறிந்த நடாத்தூர் சாரங்கபாணி ராகவன் (சுருக்கமாக, என்.எஸ்.ஆர்), ஃபேம் இண்டியா (Foundation for Action, Motivation and Empowerment, India, சுருக்கமாக FAME INDIA) என்கிற அமைப்பை தனது மனைவி ஜமுனாவுடன் சேர்ந்து தொடங்கினார். ஆரம்பத்தில் ஐந்து குழந்தைகள், ஒரு சிறப்பு பயிற்றுனர், ஒரு துணைப் பணியாளருடன் ஆரம்பித்தார். இந்த அமைப்பு பல மாற்றுத் திறனாளிகளுக்கு பலவிதமான பயிற்சிகளை அளித்து அவர்களை சொந்தக் காலில் நிற்க வைத்திருக்கிறது.

என்.எஸ்.ராகவன், இன்ஃபோஷிஸ் நிறுவனத்தை நிறுவிய ஏழு நிறுவனர்களில் ஒருவர். அந்த நிறுவனத்திலிருந்து 2000-வது ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப்பின் தொழில்முனைவோராக விரும்புவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு என்.எஸ்.ராகவன் தொழில்முனைவர் கற்றல் மையம் (N.S.Raghavan Centre for Entrepreneurial Learning) ஒன்றை ஆரம்பித்தார். இது ஐ.ஐ.எம் பெங்களூர் வளாகத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. அதோடு சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்கிற உந்துதலில் `'ஃபேம் இண்டியா’ என்கிற தன்னார்வ, அரசு சார்பற்ற அமைப்பையும் ஆரம்பித்து அதைத் திறம்பட வழிநடத்தி வருகிறார்.

ஃபேம் இண்டியா அறிவுத்திறனில் குறையுள்ளவர்களுக்கு பலவிதமான விஷயங்களை நவீன முறையில் கற்பித்து வருகிறது. இதில் பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி, மனவியல் ரீதியான ஆலோசனை, மருத்துவ சமூக வேலை, பிரத்யேகக் கல்வி, செயல்பாடு ரீதியிலான கல்வி என ஒவ்வொரு குழந்தையின் குறை அறிந்து, அதை முழுவதுமாக அல்லது ஓரளவுக்காவது தீர்க்கும் பொருட்டு அந்தந்தத் துறையில் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகும்போது அடுத்தவர்களை நம்பியிருக்கத் தேவைப்படாத அளவுக்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

2001-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'ஃபேம் இண்டியா’ கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வர 2009-ம் ஆண்டு அதன் புரவலர்கள் 'யஷஸ்வினி ஸ்வாவலம்பானா ட்ரஸ்ட் (Yashaswini Swavalambana Trust - YST)’ என்கிற பெயரில் ஒரு துணை அமைப்பை ஆரம்பித்தார்கள். ஃபேம் இந்தியா மூலம் நன்கு பயிற்சி பெற்றவர்கள் இதே அமைப்பைச் சேர்ந்த ஒய்.எஸ்.டி.க்கு அனுப்பப்பட்டு, அங்கு தொழிற்கல்வியில் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இதில் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பேப்பர் கப், பேப்பர் பேக், டஸ்ட்பின், டெரக்கோட்டா நகைகள், தீபங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் 'குட்டித் தொழிற்சாலை’ ஒன்று சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பொருட்கள் பல தனியார் நிறுவனங்களுக்கும், ஹாப்ஸ்காம் போன்ற அரசு கூட்டுறவு அமைப்புகளுக்கும் விற்கப்படுகின்றன.

இந்த அமைப்போடு சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்களில் உள்ள வசதி அனைத்தும் சர்வதேச தரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு செளகரியமாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு பயிற்சிக்கு வரும் சிறுவர், சிறுமியரின் உடல்வாகு அறிந்து அதற்கேற்றாற் போல நாற்காலிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாற்காலி போல இன்னொரு நாற்காலியை பார்க்க முடியவில்லை.

பெரும்பாலும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த மாதிரியான பிரத்யேகப் பள்ளிகள் தங்களிடம் வைத்துக் கொள்வதில்லை. குழந்தைகளுக்கு வயதாகும்போது பெற்றோருக்கும் வயதாகிவரும். அதனால், வயது சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களுக்கும் வருவதுண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களையும் கவனித்துக் கொண்டு, வயதான மாற்றுத் திறன் கொண்ட குழந்தையை கவனித்துக் கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியம். இதைக் கருத்தில் கொண்டு இந்த அமைப்பு 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வேண்டிய பயிற்சி அளித்து, தங்களது தொழிற்கூடத்தில் வேலையும் கொடுத்து, வேலைக்கேற்ப ஊதியமும் கொடுத்து வருகிறது. இது வளர்ந்துவிட்ட குழந்தைகளின் பெற்றோரிடையே இருக்கும் கேள்வியான 'அடுத்து என்ன?' என்கிற கேள்விக்கும், கவலைக்கும் ஆறுதலாக அமைகிறது.

பொருளாதாரத் துறையில் 'தனியார் துறை – பொதுத் துறைக் கூட்டுறவு’ (Private Public Partnership) போல, ஃபேம் இண்டியாவில் உள்ள குழந்தைகளின் பெற்றோர் பலர் தன்னார்வலர்களாகப் பணிபுரிந்து வருவது மிகவும் குறிப்பிடத்தக்க, பாரட்டத்தக்க விஷயமாகும். இது குறித்து இந்த அமைப்பின் துணை நிறுவனரான ஜானகி விஸ்வநாத், 'இந்த அமைப்பு இந்த அளவுக்கு வளர்ந்து வந்திருப்பதற்குக் காரணம், இந்த அமைப்போடு சம்பந்தப்பட்ட அனைவரின் அர்பணிப்பும், கடமை உணர்ச்சியும்தான். குறிப்பாக, தங்களை இந்த அமைப்போடு இணத்துக் கொண்டு பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பெற்றோர்களைக் குறிப்பிட வேண்டும். ஒரு குழந்தையின் பெற்றோர் சில மாதங்களுக்கு முன்பு ஃபேம் இண்டியாவுக்கு அவர்களது நிலத்தை நன்கொடையாகக் கொடுத்தனர். அங்குதான் குட்டித் தொழிற்சாலையும், ஆர்கானிக் ஃபார்மிங்கும் செயல்பட்டு வருகிறது’ என மிகவும் பெருமிதத்துடன் கூறினார்.

நகரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுந்தான் இந்த குறைபாடு இருக்குமா? கிராமத்தில் இந்த குறைபாடுடன் இருக்கும் (அறிவுத்திறன் குறைவாக) குழந்தைகளின் நிலைமை என்ன என ஃபேம் இண்டியாவைச் சேர்ந்த இயக்குநர் வாணியும் மற்றவர்களும் யோசிக்க உதயமானதுதான் 'அவுட்ரீச்’ திட்டம். இதன்படி கனகபுரா தாலுகாவைச் சேர்ந்த சில பகுதிகளில் இந்தக் குறைபாடுடையக் குழந்தைகள் முப்பது பேரை கண்டறிந்து, அவர்களுக்கும் அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள அங்கன்வாடியில் வாரம் ஒருமுறை பயிற்சி தரப்பட்டு வருகிறது. இந்த அனுபவம் குறித்து இயக்குநரான வாணி, 'ஒவ்வொரு வாரமும் எப்போது வியாழக்கிழமை வரும் என நாங்கள் காத்திருப்பது உண்டு. பல ஆண்டுகளாக எதுவுமே பேசாத ஒரு சிறுவன் நாங்கள் கொடுத்த பயிற்சியின் மூலம் மூன்று சொற்கள் தொடர்ந்து பேசினான். அதைக் கேட்டபோது அந்தச் சிறுவனின் தாயைவிட எங்கள் குழுவினர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடுஇணை எதுவும் இருக்க முடியாது’ என மிகவும் பூரிப்புடனும், உற்சாகத்துடனும் கூறினார். இந்த உற்சாகத்தை அங்கிருக்கக்கூடிய அனைவரிடமும் பார்க்க முடிந்தது.

இந்த அமைப்பின் செயல்பாட்டை அறிந்து 'ரீஹாபிலிடேஷன் கவுன்சில் ஆஃப் இண்டியா’, 'பிரத்யேகக் கல்வி’க்கான டிப்ளமா பயிற்சி அளிக்க அங்கீகாரம் அளித்திருக்கிறது. ஃபேம் இண்டியாவின் ஒய்.எஸ்.டி-யைச் சேர்ந்த இருவர் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியொன்றில் பங்கெடுக்கச் சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்த அமைப்பைச் சேர்ந்த சிறுவர்களும், சிறுமிகளும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றிருக்கின்றனர். அங்குள்ள சிறியவர், பெரியவர்கள் அனைவரும் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 'இண்டர் ஸ்கூல்’ விளையாட்டுப் போட்டியை எதிர்நோக்கி ஆவலுடனும் உற்சாகத்துடனும் காத்திருக்கிறார்கள்.

ஆக, மாற்றுத் திறானிகளை அணுக வேண்டிய விதத்தில் அணுகினால் அவர்களும் சாதிப்பார்கள்! ஊனம் என்பது குறையல்ல என்பதை இந்த நாளில் சிந்தித்து அவர்களையும் அரவணைப்போம்.  

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்...!

1981-ம் ஆண்டை 'சர்வதேச மாற்றுத் திறனாளிகள் ஆண்டாக’ கொண்டாட வேண்டும் என 1976-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன்படி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்பின் மாற்றுத் திறனாளிகளும் மற்ற சாதாரண மனிதர்கள் போல அனைத்து உரிமைகளுடனும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி 'சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாளாக’ கொண்டாடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுசபை முடிவெடுக்க, 1992-ம் ஆண்டு முதல் உலகமெங்கிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு பில்லியன் மாற்றுத் திறனாளிகள்!

உலக மக்கள் தொகையில் சுமார் 15 சதவிகித மக்கள் (ஒரு பில்லியன்) ஏதாவது ஒரு குறைபாட்டுடன் இருப்பதாக ஐக்கிய நாட்டு சபையின் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்திய மக்கள் தொகையில் சுமாராக 2.98 கோடி பேர் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தெரியவந்திருக்கிறது. இது 2001-ம் ஆண்டு இருந்த எண்ணிக்கையைவிட 22.4% அதிகம். இதில் 5.6 சதவிகித மக்கள் மனநல (mentally challenged) குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக் கூறுகிறது. 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில்தான் முதன்முறையாக இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தனியாக கணக்கிடப்பட்டு இருக்கிறார்கள்.

-சித்தார்த்தன் சுந்தரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close