Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை அனுபவம்!

ழை..
மழை என்பது யாதெனில்
அது ஊற்றெடுக்கும் கவிதை..
மண்ணில் விழும் திரவ சொர்க்கம்.
உயிர்ப்பசிக்கு உணவளிக்கும் அமுத சுரபி..
காதல் நிறைக்கும் இயற்கையின் வரம்.

இப்படித்தான் இருந்தது மழை குறித்த எனது பார்வை நான்கு நாட்கள் முன்பு வரை.இப்போது மழை என்றால் பயம் என்பது மட்டுமே என்னிடம் எஞ்சி நிற்கிறது.நேற்று வரை வாகனங்களும் மக்களும் கடந்து போன என் தெருவில் இன்று படகும்,பரிசிலும் கூடவே சில பிணங்களும் மிதந்து போவதை பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.வேலை நிமித்தமாக சொந்த ஊரான வேலுரில் இருந்து சென்னையில் தங்கி அலுவலகம் செல்லும் பெண் நான். இந்த நான்கு நாட்களில் நகர்ந்து போன ஒவ்வொரு நொடியுமே எனக்கு அமாஷ்ய நொடிகளே!

முதல் நாள் செவ்வாய்:

திங்கள் இரவில் இருந்தே பலமான கன மழை.காலையில் கொஞ்சம் மழை விட்ட மாதிரி இருக்கவே அலுவலகத்துக்கு கிளம்பினேன்.போகும் வழியிலேயே மழை பின்னி எடுக்க வண்டியில் இருந்த ரெயின் கோட்டை போட்டுக்கொண்டு பயணிக்க ஆரம்பித்தால் கண்கள் தெரியாத அளவுக்கு நீர் அம்புகளால் குத்தியது மழை.சாட்டையால் அடிப்பது போல சுளீர் சுளீர் என அடிக்க ஆரம்பித்தது.

வீட்டின் சன்னல் வழியே கையை விட்டு மழையை நிரப்பி பூப்போல் தெளித்து விளையாடுவதுமாய் காகிதம் கிழித்து கப்பல் விடுவதுமாய் என் பால்யங்களில் மழை என் செல்லத் தோழி.மழை நாட்களில் மட்டுமே அரிசியை வறுத்துக் கொடுப்பார் அம்மா.இதற்காகவே மழை வராதா என ஏங்கிய நாட்கள் ஏராளம் ஏராளம்.அவ்வப்போது பள்ளிக்கு விடுமுறை அளிப்பதாலும் இந்த மழை மீது எனக்கு அத்தனைப் பிரியம்.காதலும் காதல் நிமித்தமான காலங்களில் கூட மழையில் நனைந்த ஒற்றை முத்தத்துக்காக மனசு ஏங்கி தவிக்கும்.இப்படி எப்போதும் என்னோடு இறுக்கமாய் இருக்கும் மழையில்,அளவுக்கு அதிகமாய் நனைந்து அலுவலகம் வந்த போது லேசாகவே நடுக்கம் இருந்தது.

நான் அன்று அணிந்திருந்த நீல நிற டாப்ஸின் சாயம் கரைந்து வெள்ளை நிற லெகிங்ஸில் கலந்து அலுவலகம் எங்கும் சொட்ட ஆரம்பித்தது.இரண்டு மணிநேரம் மட்டுமே அன்று வேலை பார்த்திருப்பேன்.அவசரச் செய்தியாக எல்லோரையும் மதியம் வீட்டிற்கு கிளம்ப அறிவுறுத்தினார்கள்.வானம் முழுக்க இருள்...வண்டியை எடுத்துக் கொண்டு அந்த கனமழையில் கிளம்பினேன்.வழி எங்கும் சாலைகள் மழைவெள்ளத்தால் நிரம்பி இருந்தது.

அன்றைய பயணம் சாகசப் பயணமாகவே இருந்தது.வழியில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கிக் கொண்டு எப்படியோ வீடு போய் சேர்ந்தேன்.சமைக்க ஆரம்பிக்கும் முன் மின்சாரம் தடை செய்யப் பட்டுவிட்டது.வீட்டில் கேஸ் அடுப்பும் இல்லை.வெளியில் எட்டிப் பார்த்தால் என் இருசக்கர வாகனம் பாதி அளவுக்கும் மூழ்கி இருந்தது.மின்சாரம் இல்லாத கனமழை நேரத்தில் இடுப்பளவு தண்ணீரில் ஹோட்டலை தேடும் தைரியம் எனக்கு இல்லை.வீட்டில் சாப்பிட எதுவும் இல்லை.அக்கம்பக்கத்து வீடுகளும் எனக்கு பழக்கமில்லை.வீட்டில் இருந்த மெழுகுவர்த்தியை ஏற்றினேன்.மின்சாரம் தடைபடாத சென்னையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சம் வேறொரு அமைதியை அன்று என்னுள் கடத்தியது.

மதியமும் சாப்பிடாமல் கிளம்பியதால் பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.எனக்கு முன்னால் மெழுகுவர்த்தி மட்டுமே எரிந்து கொண்டிருக்கிறது.என் ஒளியும், தீயும் இப்போதைக்கு அது மட்டும் தான்.
டிஸ்கவரி சேனலில் வரும் பியர் கிரில்ஸ் போல தனியே இருந்தாலும் எனக்கு நானே வாய்விட்டு பேச ஆரம்பித்துக் கொண்டேன்.


’’இப்ப நாம வெள்ளக்காடா சிக்கியிருக்குற சென்னை மாநகரத்துல வசிக்கிறோம்..நான் இப்ப உயிர் வாழ தேவையான உணவுப் பொருளாக 4 முட்டைகள் எனக்கு இப்ப கிடைச்சிருக்கு.முட்டையில இருக்குற புரதச்சத்து நாளைக்கு வரைக்கும் என்னை உயிர் பிழைக்க வைக்கும்..’’
இப்படி சொல்லிக் கொண்டே ஒரு கரண்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதை மெழுகுவர்த்தியில் காட்டினேன்.எண்ணெய் சூடானதும் அதில் முட்டை மிளகு தூள் உப்பு இதெல்லாம் சேர்த்து ஸ்பூனால் கிளறி விட்டு அன்றைய இரவை கேண்டில் லைட் ஆம்லெட் டின்னராக முடித்துக் கொண்டேன்.

இவ்வளவு செய்யும் போது அதை ஃபேஸ்புக்கில் போஸ்ட் போடாவிட்டால் எப்படி? போட்ட சில நிமிடங்களிலேயே லைக்ஸ் அள்ளியது.ஆனால் அதுதான் நான் போடும் கடைசி ஸ்டேட்டஸ் என்பது அப்போது எனக்கு தெரியாது.மின்சாரம் வரவே இல்லை.அப்படியே தூங்கிவிட்டேன்.

இரண்டாம் நாள் புதன்:

விடிந்ததும் எழுந்து வெளியே வந்தால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் மட்டும் தான்.கீழ்தளம் முழுக்க முக்கால் பாகம் மூழ்கி இருந்தது.காம்பவுண்டுக்குள் விட்ட என் இரு சக்கர வாகனம் முழுவதுமாய்  மூழ்கி இருந்தது.நான் முதல் தளத்தில் இருந்ததால் வீட்டுக்குள் தண்ணீர் போகவில்லை என்றாலும் என் வீட்டின் உரிமையாளர் எல்லாப் பொருட்களையும் இழந்துவிட்டு பக்கத்து குடியிருப்பில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் எல்லோரும் டைட்டானிக் படத்தில் வருவது போல மேல் தளங்களுக்கு இடம் மாறிக் கொண்டிருந்தார்கள்.நான் இருந்த வீட்டுக்குப் பின் வீட்டில் இருந்தவர்கள் காம்பவுண்ட் சுவர்களில் ஏறி அக்கம் பக்கம் வீடுகளின் மேல் மாடிகளுக்கு ஏறிக்கொண்டிருந்தார்கள்.

வயதான ஒரு பாட்டிக்கு 70 வயதிருக்கும்.எப்படியும் 100 கிலோவுக்கு அதிகமான எடையோடு நடக்க முடியாமல் வெறும் இருக்கையிலேயே இருக்கும் அந்த பாட்டியின் கழுத்து வரை தண்ணீர் சூழ்ந்து கொண்டது.அந்த வீட்டில் இருந்த பெண்களால் அந்த பாட்டியை தூக்கமுடியவில்லை கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி பக்கத்து வீடுகளில் இருந்த ஆண்கள் அந்த பாட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு வந்தது மனிதம் வாழ்வதற்கான சாட்சி.பாட்டி,பாட்டியின் மருமகள்,இரண்டு பெண் பிள்ளைகள் என என்னால் முடிந்தவரை அந்த குடும்பத்தில் இருந்த 4 பேருக்கும் இடம் கொடுத்தேன்.அதுவரை பழக்கமில்லாத அக்கம் பக்கத்தினர் எல்லோரும் ஒரே குடும்பமாக ஒன்றானோம்.

என் வீட்டில் இருந்த மளிகைப் பொருட்கள் காய்கறிகளை பக்கத்து குடியிருப்பில் இருந்தவர்களுக்கு கொடுத்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சமைத்தோம்.எப்படியும் இன்றிரவுக்குள் தண்ணீர் வடியும் என்ற நம்பிக்கையில் காத்துக்கிடந்தோம் கொஞ்சமும் வடிந்தபாடில்லை.மாலை நேரம் முடிந்து மெதுவாய் இருட்ட ஆரம்பித்தது.வீட்டில் மின்சாரம் இல்லாததால் டேங்க்கில் இருந்த தண்ணீர் தீர்ந்து போனது.குடிநீரும் போதுமானதாக இல்லை.இருட்ட ஆரம்பித்தது.என்னுடைய செல்போனில் இருந்த சார்ஜ் கடைசி நிலைக்கு வந்தது.ஊரில் இருக்கும் என் குடும்பத்தாரோடு பேசவும் முடியவில்லை.என் கைப்பேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாய் காட்டியது.அன்றைய இரவு நாங்கள் யாரும் சாப்பிடவில்லை.

என் வீட்டில் தங்கியிருந்த அந்த வயதான பாட்டி எழுந்திருக்க முடியாமல் இருந்த இடத்திலேயே மலம் கழித்துவிட்டு பதறிக் கொண்டிருந்தார்.இருப்பில் கொஞ்சமாய் இருந்த மினரல் வாட்டரை கொண்டு பாட்டியை சுத்தம் செய்தோம்.காக்கையின் எச்சத்தைப் பார்த்தால் கூட முகம் சுளிக்கும் நான் பாட்டியின் ஆடையை அவிழ்த்து சுத்தம் செய்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது என் மீதே நான் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.நாளை எப்படி விடியும் என்ற பயத்தோடு அன்றும் நாங்கள் தூங்க போனோம்.பேய் மழை அடித்துப் பெய்து ஓய்ந்திருந்தது.

வேலூரில் வெயிலுக்குப் பழக்கப்பட்ட எனக்கு இந்த மழை மரண பீதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.என் தோழிகள் பலரும் அவரவர் சொந்த ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.என்னால் நீரில் மூழ்கி வேறெங்கும் கடந்து போகவும் இயலவில்லை.அன்று இரவு 2 மணி இருக்கும்.தண்ணீர் வற்றிப் போயிருக்கும் என்கிற நம்பிக்கையில் வெளியே வந்து எட்டிப் பார்த்தால் சாக்கடையோடு கலந்து ஓடும் மழை வெள்ளம் கறுப்பு ஆறாக சாலையை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு அலட்டிக் கொள்ளாமல் மெதுவாக கடந்து போகிறது.மயான அமைதி...மனிதகுரல் எதுவுமே கேட்கவில்லை.

தூரத்தில் ஒரு நாய் மட்டும் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.சாவு விழப்போகிறது என்றால் தான் இப்படி நாய்கள் ஓலமிடும் என்று பாட்டி சொன்ன ஞாபகம் என்னை அப்போது பாடாய் படுத்தியது.உள்ளுக்குள் அழுகிறேன்.இதுதான் என் கடைசி நாளோ என மனசுக்குள் பீதி கிளம்புகிறது.பயத்தில் படுத்துக் கொண்டேன்.தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது.ஆனால் சிறுநீர் கழித்தால்கூட சுத்தம் செய்ய  தண்ணீர் வேண்டுமே...அடக்கிக் கொண்டு உறங்கப் போனேன்.

மூன்றாம் நாள் வியாழன்:

விடிந்தால் விடியும் என்று நம்பினால் இன்று எங்களுக்கு விடியவே இல்லை.என் வீட்டில் இருந்த குடும்பம் வேறு இடத்துக்கு போய் விடலாம் என முடிவு செய்துவிட பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஒரு மீன்பாடி வண்டியை ஏற்பாடு செய்து சாலைக்கு கொண்டு வந்தார்கள்.மீன்பாடி வண்டியை தள்ளிக் கொண்டு வந்தவர்கள் கழுத்தளவுக்கு மூழ்கி இருந்தார்கள் காம்பவுண்ட் சுவர் அருகே வண்டி வந்து நின்றதும் பாட்டியும் அந்த குடும்பமும் அவர்களின் உறவினர் வீட்டுக்கு பயணமானார்கள்.

இப்போது சொல்ல முடியாத அவசரம்.நான் சிறுநீர் கழித்து 12 மணி நேரத்துக்கும் மேல ஆகிறது.தண்ணீர் இல்லை..வேறு வழியில்லாமல் சாலையில் போன நீரையே பக்கெட்டில் பிடித்து சென்ற பரிதாபம் எனக்கு.எனக்கு மட்டுமல்ல...எல்லோருக்கும் அதே நிலைதான்.11 மணிக்கு மேல் சாலையில் படகுகள் வர ஆரம்பித்தன.மீட்புக்குழுவின் கண்களுக்கு இன்று தான் நாங்கள் தெரிய ஆரம்பித்தோம்.உணவு,குடிநீர்,பிஸ்கட் பாக்கெட்டுகள் என தாராளமாகவே கொடுத்தார்கள்.ஆனால் சாப்பிடத்தான் யாருக்கும் தெம்பில்லை.சிறுநீர் மலம் கழிக்க இருக்கும் சிக்கலால் உயிர் வாழ மட்டுமே கொஞ்சமாய் சாப்பிட்டுக் கொண்டோம்.எங்களுக்காவது பரவாயில்லை...பல பேர் விமானப் படை மேலிருந்து கொடுக்கும் உணவுகளை நம்பி மழையில் மொட்டை மாடியில் நின்று காத்துக்கிடந்தார்கள்.

கார்கள்,இரு சக்கர வாகனங்கள்,வீட்டில் இருந்த பொருட்கள் என பலவும் அடித்து செல்லப்பட்டன.உச்சக்கட்டமாய் இறந்து போன கோழி,நாய்,பன்றி இதெல்லாம் வயிறு உப்பி மிதந்து கொண்டிருந்தன.அதற்கும் மேலாக மனித உடல் ஒன்று தெருவின் முக்கில் கரை ஒதுங்கியது.

என் மொபைலுக்கு எப்போதாவது ஒருதரம் தான் சிக்னல் கிடைக்கும்..அப்படி கிடைக்கும் போது மொட்டை மாடிக்கு ஓடி வந்து ஹலோ...ஹலோ என்று கத்திப் பேசினால தான் எதிர் தரப்புக்கு நான் பேசுவது புரியும்.இருக்கும் கொஞ்சமான சார்ஜில் ஊரில் இருக்கும் அம்மாவுக்கு போன் செய்தால்..’’நான் தவமா தவமிருந்து பெத்த புள்ளயை இப்டி தண்ணி வந்து அடிச்சுட்டுப் போகும்னு விதி வந்துச்சோ’’ன்னு ஒப்பாரி வைத்து தீர்த்து இன்னும் கொஞ்சம் பீதியை கிளப்புவார்.எங்க ஏரியாவுல சுத்தமா தண்ணியில்லை என்று சொல்லிவிட்டு சமாதானம் செய்வதற்குள் படாதபாடு பட்டுவிட்டேன்.

பக்கத்து வீட்டின் கர்ப்பிணி பெண் ஒருவரை நடக்க முடியாமல் நடக்க வைத்து அவர் கணவர் படகில் ஏற்றும் போது கணவன் மனைவி இருவருமாக தண்ணீரில் வழுக்கி விழ, அத்தனை ஆண்களுமாய் சேர்ந்து அவர்களை மீட்டெடுத்தது மனிதாபிமானத்தின் உச்சம்.ஊருக்கு போவதற்கு பேருந்து இல்லாமல் ரயில் இல்லாமல் விமானம் இல்லாமல் சென்னை தனித்தீவாய் தவித்து நின்றது.

நான்காம் நாள் வெள்ளி:

இன்றும் படகிலும் வண்டியிலும் போதுமான உணவுகளை கொண்டு வந்து கொடுத்தார்கள்.பசியிருந்தாலும் சாப்பிட முடியவில்லை.தண்ணீர் வடியுமா என மேல்தளத்தில் இருந்து பார்த்துப் பார்த்து கால்கள் வலித்ததோடு சேற்றுப் புண் வேறு வந்துவிட்டது.இன்று வீட்டில் சுத்தமாய் மெழுகுவர்த்தி இல்லை.மொபைலும் ஸ்விட்ச் ஆஃப் ஆனது.இன்று நாள் எப்படி கழியுமோ என்று பயந்த வேளையில் நண்பர் ஒருவர் கழுத்தளவு சாக்கடை நீரில் மெதுவாய் நடந்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.இப்படி சாலையில் நடப்பது சாதாரண விஷயமல்ல.மலத்தில் ஆரம்பித்து பிணங்கள் வரை அந்த நீரில் மிதக்கும்.

காலுக்கு அடியில் பாதாள சாக்கடை எங்கு வேண்டுமானாலும் திறந்து இருக்கலாம்.உயிரைப் பணயம் வைத்துதான் சாலையில் நடந்து வர வேண்டும்.பாதுகாப்பான இடத்தில் இருக்கும் அந்த நண்பர் எங்கள் காம்பவுண்டில் இருக்கும் அத்தனைப் பேருக்கும் ஸ்னாக்ஸ்,மெழுகுவர்த்தி குடிநீர் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு தலையில் மூட்டையாக வைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.அவர் கொண்டு வந்த மேகி பாக்கெட்டுகள் இப்போதைக்கு அவசர சமையலுக்கும் உதவியது.

பிரட் துண்டுகளும் மெழுகு வர்த்தியும் எங்குமே கிடக்காத நிலையில் போராடி பல இடங்கள் சுற்றித் திரிந்த அந்த நண்பரை நாங்கள் எல்லோரும் மனம் விட்டு பாராட்டினோம்.வாட்ஸ் அப் ஃபேஸ்புக் மூலம் பல தன்னார்வலர்களை இணைத்து அரசாங்கத்தை எதிர்ப்பார்க்காமல் களத்தில் பல இளைஞர்கள் குதித்தார்கள்.அவர்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் எப்படியாவது இந்த சாலையை கடக்கவே தோன்றினாலும் நான் உயரம் குறைவாக இருப்பதால் மூழ்கிவிடுவேன் என்று என்னை கீழே இறங்க வேண்டாம் என வலியுறுத்தியிருந்தார்கள்.

ஆனால் இன்று என் வாழ்வில் விதி வலியது.நான் இன்று மாதவிடாயில் இருக்கிறேன்.அடுத்த வாரம் எதிர்ப்பார்த்த மாதவிடாய் பயத்தில் இந்த வாரமே வந்துவிட்டதை என்னால் உணரமுடிகிறது.கையிருப்பில் இருந்த நாப்கினும் இன்று ஒருநாளைக்கு மட்டுமே இருப்பு இருக்கிறது.நாளைக்குள் நீர் வற்றும் என்கிற நம்பிக்கை சுத்தமாய் இல்லை.கால் கழுவ தண்ணீர் இல்லாத இந்த நேரத்தில் மாதவிடாயை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.நடுவில் அடுக்கடி பெய்து விட்டுப் போகும் மழை நீரை ஒரு வாளியில் சேர்த்து வைத்திருக்கிறேன்.இது தான் இன்றைய இரவுக்கு என் ஜீவ நாடி.

ஐந்தாம் நாள் சனி:

குளித்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகிறது.விடிந்ததும் தண்ணீர் வற்றியிருந்ததை பார்த்த போதுதான் என் உயிரில் மெல்ல மெல்ல நீர் சுரந்து கொண்டிருந்தது.இன்றும் மின்சாரம் இல்லை.பரவாயில்லை.அலுவலகம் இருக்கும் ஏரியாவில் மின்சாரம் இருப்பதாய் கேள்விப்பட்டேன்.வாகனங்கள் அனைத்தும்  பலத்த சேதம்.இப்போதைக்கு சேறும் சகதியுமாய் இருக்கும் என் இரு சக்கர வாகனம் இயங்குவதற்கான அறிகுறியே இல்லை.

நான் அலுவலகம் செல்ல நாப்கின் தேவைப்படுகிறது.வேறு வழியில்லை புறப்பட  வேண்டும்.அந்த காலத்தில் பயன்படுத்தியது போல காட்டன் துணியை தயார் செய்து கொண்டு கிளம்பி விட்டேன்.அலுவலகம் வந்து நுழைந்த பிறகே என் மொபைல் இணையத்தில் நுழைகிறது.

நான் பாதுகாப்பாய் இருக்கிறேனா என கேட்டு ஆயிரத்துக்கும் அதிகமான விசாரிப்புகள் வாட்ஸ் அப்பில் குவிந்து இருப்பதை பார்க்கிறேன்.4 நாட்களாய் மின்சாரம் இல்லாமல் 5 ஆம் நாளான இன்று தொலைக்காட்சி செய்திகளையும் வீடியோக்களையும் சேகரித்துப் பார்த்து கண்ணீர் வடிக்கிறேன்.நான் கடைசியாய் போட்ட மெழுகுவர்த்தி ஆம்லெட் போஸ்டுக்கு அதிக அளவில் லைக்ஸ் கிடைத்திருக்கிறது.

குளிக்காததை மறைக்க இன்று நான் அடித்த பாடி ஸ்ப்ரே கொஞ்சம் தூக்கலாகவே இருக்கக் கூடும்.எப்படியோ...வேறொரு கிரகத்தில் பயணித்து விட்டு இப்போதுதான் என் சொந்த மண்ணை மிதித்தது போல மிதப்பில் இருக்கிறேன்.அலுவலக கணினியில் இந்த என் அனுபவத்தை டைப் செய்து கொண்டிருக்கும் இந்த தருணம் என் வாழ்வில் மீண்டும் வரக் கூடாது என்று மட்டும் மனசுக்குள் பிராத்திக்கிறேன்.

பொன்.விமலா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close