Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேரிடர் சமயங்களில் அலைபேசியை பயன்படுத்துவது எப்படி? - அண்டன் பிரகாஷ்

த்தாண்டுகளுக்குப் பின்னரும் கட்ரீனா இன்னும் நினைவில் இருக்கிறது. அட்லாண்டிக் கடலில் உருவாகிய இந்தப் புயல்,  கொடும் மழையை கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் கொட்டித்தீர்த்தது. பாதிக்கப்பட்ட கடலை ஒட்டியிருக்கும் பல மாகாணங்களில் மிகப் பேரழிவைச் சந்தித்தது லூசியானாவின் நியூ ஆர்லின்ஸ். முக்கிய காரணம் - அந்நகரை அடுத்து இருக்கும் நீர்பாதுகாப்பு சுவர் (Levee) மழையின் காரணமாக இடிந்து, அந்த நீரும் நகருக்குள் புகுந்தது. கட்ரீனா விளைவித்த சேதம் நூறு பில்லியன் டாலர்களுக்கும் மேல்.

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரழிவுகளுக்கு பொதுவாகத் தயாராக இருக்கும் அமெரிக்க அரசு இயந்திரம்,  கட்ரீனா சமயத்தில் நியூ ஆர்லின்ஸ் நகரில் விரைவில் செயல்பட முடியவில்லை. கட்ரீனா கற்றுக்கொடுத்த பாடங்களின் பட்டியலை அப்போதிருந்த அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையேற்ற வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதில் முக்கிய இடம் - தொலைத் தொடர்பு கட்டமைப்பும், கருவிகளும் பழுதாகிப்போனது.

கட்ரீனாவிற்குப் பின்னர் பல்வேறு வகையான திட்டங்கள் அமெரிக்கா முழுவதும் முடுக்கிவிடப்பட்டன. உதாரணத்திற்கு, நிலநடுக்க சாத்தியம் கொண்ட கலிபோர்னியாவில் பேரிடருக்கு தயாராக இருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் வாக்கி-டாக்கி, ரேடியோ மற்றும் அலைபேசி கருவிகளின் பராமரிப்பு முக்கியமான டாப்பிக்காக இருந்தது எனது தனிப்பட்ட அனுபவம்.

சென்னை நகரை வானிலிருந்து எடுத்திருக்கும் ஏரியல் புகைப்படங்களை பார்க்கும்போது கட்ரீனாவுக்குப் பின்னான நியூ ஆர்லின்ஸை அப்படியே பார்ப்பது போல இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் இன்னபிற சமூக ஊடக தளங்களில் மழை நின்றுபோய், வெள்ளம் வடிய ஆரம்பித்த பின்னர் இடப்படும் பதிவுகளையும், வீடியோக்களையும் பார்க்கும்போது தொலைத்தொடர்பு வசதிகள் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. மின்சார வசதியில்லாததால் அலைபேசி சாதனங்களை சார்ஜ் செய்யமுடியாமல் அவை செயலிழந்து போனதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஐபோன், ஆண்ட்ராயிட் அலைபேசி சாதனங்களின் பலன்களை விளக்கத்தேவையில்லை. ஆனால், இந்த ஸ்மார்ட் அலைபேசிகளின் எனர்ஜி தேவை அதிகம். நாளொன்றிற்கு ஒருமுறையாவது முழுக்க சார்ஜ் செய்ய வேண்டிய நிலையில்தான் இன்றைய பேட்டரி தொழில்நுட்பம் இருக்கிறது. இப்படியான சூழ்நிலைகளில் னர்ஜி நுகர்வைக் குறைக்க சில ஆலோசனைகள்....

 

* மின்சாரம் இல்லாது போகும் என்ற நிலை வருமென தெரிந்தவுடன் திரையின் ஒளிர்வை (brightness) குறைத்து விடுங்கள்.

* தேவைப்படும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் வைஃபை, ப்ளூடூத் ஆகியவற்றை அணைத்து விடுங்கள்.

* முடிந்தால், Airplane Mode க்கு மாற்றிக் கொள்வது சிறந்தது.

* ஸ்மார்ட் அல்லாத சாதாரண அலைபேசி சாதனம் ஒன்றை முழுக்க பேட்டரி சார்ஜ் ஏற்றி பேக்கப்பாக வைத்துக் கொள்வதும் நன்று.

பவர் பேங்க் எனப்படும் பெரிய அளவு பேட்டரி சாதனத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கும் பொருட்களுக்கான பட்டியல்களில் பார்க்கிறேன். குறிப்பிட்ட அளவேயான எனர்ஜியை இந்த சாதனங்கள் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்பதால், மீண்டும் மின்சாரத்தால் ரீ-சார்ஜ் செய்தாக வேண்டும். மின்சாரம் இல்லையெனில் இந்த சாதனங்களால் பயனில்லை. மாறாக, கீழ்கண்டவற்றை முயற்சிக்கலாம்.

* சூரிய ஒளி:  சோலார் பேனலுடன் பேட்டரி பேங்கை இணைத்துவிட்டால், சூரிய வெளிச்சம் இருக்கும்போதல்லாம் சார்ஜ் செய்து கொள்ளமுடியும்.

* சுடுநீர்: கொதிக்கும் நீரை பயன்படுத்தி சார்ஜ் செய்ய இயலும். பவர்பாட் என்ற பாத்திரத்தை பவர்ப்ராக்டிக்கல் ( www.powerpractical.com ) என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அப்படி தயாரிக்கப்பட்ட சாதனம் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது விலை அதிகமாக இருக்கிறது என்று கருதினாலோ, நீங்களே செய்து உபயோகிப்படுத்திக் கொள்ள உதவும் வீடியோக்கள் யூடியூபில் இருக்கின்றன.

* சூரிய ஒளி, தண்ணீரை சூடாக்க வேண்டிய எரிபொருள் என எந்த தேவையும் இல்லாததால், என்னுடைய தனிப்பட்ட பேஃவரிட் - கையால் சுழற்றி சார்ஜ் செய்ய உதவும் சாதனம்.

NOTE : மேற்கண்டவை இன்றைய நாளில் இந்திய நேரடி அல்லது ஆன்லைன் சந்தைகளில் கிடைக்காமலிருந்தால் இவற்றை தயாரித்து விநியோகிக்கும் தொழில்முனைவு  வாய்ப்பு இருக்கிறது.

சென்னை வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் பெரிதும் உதவும் வகையில் சில தொழில்நுட்ப வசதி மேம்பாடுகள் தயாராகி வருவது சற்றே ஆறுதல் அளிக்கலாம்.
அதில் குறிப்பிட்டு சொல்லும் ஒன்று -  சன்னமான கண்ணிப் பிணையம் (Mesh Network)

இன்றிருக்கும் அலைபேசி தொழில்நுட்ப வசதி, உங்களது அலைபேசியை உங்களது அலை சேவை நிறுவனத்தின் நெட்வொர்க்குடன் இணைத்து நீங்கள் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர்களுடன் இணைக்கிறது. பேரிடர் தருணங்களில் அலைசேவை நிறுவனங்களின் கட்டமைப்பு பெரிதும் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். மழை காரணமாக சில அலைபேசி இணைப்பு டவர்கள் செயல் இழந்திருந்தால், பாதிக்கப்படாத டவர்களின் அதிக இணைப்புகளை செயல்படுத்தும் நிலை வரும். இதனால் அலைபேசி இணைப்புகளின் தரம் மிகவும் குறையும். சென்னை வெள்ளத்தின் போதும் இது நடந்தது.

கண்ணிப் பிணையம் இதை செம ஸ்மார்ட்டாக தீர்க்கிறது. ஒவ்வொரு அலைபேசியும், ப்ளூடூத் இணைப்பு மூலமாக தனக்கு அடுத்திருக்கும் அலைபேசியுடன் நேரடியாக இணைந்து கண்ணிப் பிணையம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக தொலைதொடர்பை ஏற்படுத்த முடியும். கண்ணிப் பிணையத்தின் வெற்றி, அலைபேசி சாதனங்கள் எவ்வளவு அருகில் இருக்கின்றன என்பதில் இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் நெருக்கமான மக்கள் தொகை, கண்ணிப் பிணையம் சார்ந்த தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த உதவும் என நம்புகிறேன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close