Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாழ்வாங்கு வாழ்ந்த சுப்பிரமணிய பாரதி! - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

1882 -ல் இதே டிசம்பர் மாதம் 11-ல் பிறந்து 1921-செப்டம்பர் 11-ல் காலமானது இந்த கவிதாக்னி.. தன் உயரத்தை தாண்டி அடுக்கி வைத்திடும் அளவிற்கு எழுதி எழுதி மை தீர்த்தவர்களின் மத்தியில்,  பாரதி   வையம்  புகழ இயற்றியது கையடக்க அளவிற்கே. முப்பத்தியெட்டை முடிப்பதற்குள்  வாழ்ந்தும் எழுதியும் வாழ்வாங்கு வாழ்ந்து விட்டு சென்று விட்டான் மாக்கவி..
                             
பாரதி  பிறந்த தேதி 11. இறந்த தேதி 11 "இனி நீ சுப்பையா அல்ல... பாரதி... பாரதி ...!'  என்று நெல்லைச் சீமையின் எட்டயபுரத்து புலவர்கள் சுப்பையாவுக்கு பட்டம் சூட்டிய போது அவனுக்கு  வயது 11.
                                     
பதினைந்து வயதில் செல்லம்மாளை மணமுடித்த பாரதி,  தன்னுடைய இருபதாவது வயதில் (1902) எட்டயபுரத்து ஜமீனிடம் பார்த்து வந்த வேலையை உதறியெறிந்து விட்டு, அதன்பின் தமிழாசிரியர் பணி என்று தன் எண்ணச் சிறகை  விரிக்கத்  தொடங்கினான்.

அந்த  ஜீவ நதியின் ஓட்டம் பல திசைகளாக பிரிந்தோடினாலும் எண்ணமெல்லாம் எழுத்து,  பாடல், சுதந்திர வேட்கை என்றே தகித்துக் கொண்டிருந்தது.

அதன் அடுத்தகட்ட நகர்வாக, சுதந்திர எண்ணங்களை வெளிப்படுத்தும் வடிகாலாக பத்திரிகைப் பணியை திட்டமிட்டே தெரிவு செய்து கொண்டது அந்த சுதேசிக்குயில் .
 
அன்பு மகள் தங்கம்மாள் பிறத்தலும், சுதேசமித்திரன் ஏட்டில் துணையாசிரியர் பணியில் அமர்தலும், சென்னைக்கு வருகையும் ஒரே ஆண்டில் (1904) நடந்தது. அதற்கடுத்த ஆண்டே , பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் என்ற அறைகூவலுடன் வெளி வந்த "சக்ரவர்த்தினி" பாரதியின் எண்ணவோட்டத்துக்கு ஏதுவாக இருக்க, தேடிவந்த ஆசிரியப் பொறுப்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.     

இதைத்  தொடர்ந்து, தேடி வந்தது  "இந்தியா" ஏட்டின் ஆசிரியர் பொறுப்பு. இந்த ஏட்டின் மூலமாகவே சுதந்திர எண்ணத்தை வெளிப்படுத்தும் கனல் வரிகளை தீயாய் கொட்டித் தீர்த்தான்  பாரதி. இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய தாதாபாய் நௌரோஜி தலைமையிலான காங்கிரசில் இணைந்து செயலாற்றியதும் இதே கால கட்டத்தில்தான். சுயராஜ்யம் என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டதும் இந்த தருணத்தில்தான்.

பாலபாரத் என்ற ஆங்கில ஏடு துவக்கல்,  சூரத் காங்கிரசில் சேரல், பிரிதல் பின் பாலகங்காதர திலகர் தலைமையில் சர்க்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, வ.உ.சி. ஆகியோருடன் கைகோர்த்து சுதந்திரம் வேண்டும் தீவிரவாத குழுவில் ஒருவரானது என  பாரதியின் பொது  வாழ்வில் 1907- என்பது உச்சக்கட்ட உஷ்ணத்தை தக்க வைத்துக் கொண்ட ஆண்டாகவே அமைந்து விட்டது.

இதன் பின்னரே  மிதவாதக்குழு,  தீவிரவாதக்குழு என்று குழுக்கள் பலவாறு கிளை பரப்பின.  சென்னையிலிருந்து பாரதியின் புதுவை பயணமும், அரவிந்தர், வ.வே.சு.அய்யர், பரலி சு.நெல்லையப்பர், ஸ்ரீ நிவாசச்சாரியார், பொன்னு முருகேச பிள்ளை, வ.ரா., பாரதிதாசன், தோத்தாத்ரி, குவளைக் கண்ணன், ஹரிஹரசர்மா, சங்கர கிருஷ்ணன் என்று விடுதலை வேள்வியில் பூத்த ஒருசேர் கருத்தாளர்கள் ஒன்று சேர்ந்த  தருணமும் "புதுவை -   குயில் தோப்பு "ஆனது.

வாஞ்சிநாதனால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆஷ் துரை (1911)யின் மரணத்தால்  பாரதி இயற்றிய 'கனவு' மற்றும்   'ஆறிலொரு பங்கு'  ஆகிய நூல்களை தடை செய்து ஆங்கிலேய அரசு உத்தரவிட, பாரதியின் புதுவை வாழ்க்கை  போர்க்களமானது.

பாரதியின்  பத்திரிகைப் பணிகள் முடங்கத் தொடங்கின.  'வெள்ளை கொக்கொன்று பறக்குதடா'  என்றே, எழுதிவிட்டு பிரெஞ்சு பார்வையில் இருந்து தப்பிக்க பல்வேறு வேடங்களை போட்டு திரிந்தபடி மீண்டும் மீண்டும் கனல் பாடல்களை வடிக்க தொடங்கினான் மாக்கவி பாரதி.

தொடர்ந்து நெருக்கடிகளும் அடக்குமுறைகளும் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலும் பாரதியை  அடுத்த கட்டமாக பறவையைப் போல இடங்களை மாற்றி மாற்றி பறக்கச் செய்து விட்டது.

சென்னைக்கு வந்தான்.. திருவல்லிக்கேணி  தோழர்கள் அரவணைத்தனர். அங்கிருந்தபடி மீண்டும் தொடங்கினான் எழுத்துப் புரட்சியை. அதற்கு கை கொடுத்தன பல இதழ்கள். ஆனால் சுதந்திர சுவாசக் காற்றை சுவாசிப்பதற்குள்ளாகவே தன்னுடைய முப்பத்தெட்டாவது வயதிலேயே பாரதியின் உயிர் பிரிந்தது.
                          
 -(ந.பா.சேதுராமன்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ