Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பின்லேடனுடன் பறக்கிறேன்...!' - விஷமத்தனமான வீடியோ கிளப்பிய பரபரப்பு

வாஷிங்டன்:  சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற மனிதர்கள் உலாவருவதும், அவர்களால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதும் அதிகரித்துள்ளது.

அப்படியான ஒரு நபர்,  தன் விமான பயணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை யூ-ட்யூபில் பதிவு செய்ய,  அந்த வீடியோ ஏற்படுத்திய பரபரப்பினால் இப்போது நாடு கடந்து அனலடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து கலிஃபோர் னியா சென்றுகொண்டிருந்த ஜெட் ப்ளூ விமானத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சியில்,  வயதான சீக்கியர் ஒருவர் களைப்பில் ஆழந்த உறக்கத்தில் இருக்க அருகிலிருந்த சக பயணியான அந்த நபர் இதை படம்பிடித்திருக்கிறார்.

படம் எடுத்த அந்த அந்த நபர்,  அதை தான் ரசித்ததோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். அதை விடுத்து  இந்த வீடியோவை யூ-ட்யூபில் அப்லோட் செய்ததோடு "நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்களா?" என்ற தலைப்பிட்டு,
"பின்லேடனுடன் பறக்கிறேன்" என்று விளக்கமும் கொடுத்துள்ளார்.

டிசம்பர் 9 அன்று அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோ,  39 வினாடி ஓடுகிறது. இதுவரை 1,14,000 தடவை பார்க்கப்பட்டுள்ளது. பரிதாபத்துக்குரிய அந்த சீக்கியருக்கு ஆதரவாகவும்,  பொறுப்பற்று ஒரு வீடியோவை பதிவிட்டு தன் விஷமத்தனமாக வெளிப்படுத்திய அந்த நபரை கண்டித்தும் கமெண்ட்டுகள் தெறித்துவருகின்றன இப்போது.

"தர்ஷன் சிங் என்ற அந்த சீக்கியர், கடந்த நவம்பர் மாதம் ஜெட் ப்ளூ விமானத்தில் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியா சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் தன் அருகில் இருந்தவர் முகத்தைக் கூட பார்க்கவில்லை. தன்னை யூ-ட்யூப் வீடியோவில் கண்ட அவர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினார்" என்று சீக்கியர்கள் தொடர்பான ஒரு குழுமம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான பேர் இந்த வீடியோவில் தங்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வீடியோ எடுத்தவரை வன்மையாக கண்டித்தே பேசியுள்ளனர். 2822 பேர் டிஸ்-லைக் செய்துள்ளனர்.

அதில் ஒருவர், "சீக்கியர்கள் பயமறியா போராளிகள். மற்றவர்களின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள்" எனக் கூறியுள்ளார்.

சீக்கியக் குழுமமும் இந்த வீடியோவை அகற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

"இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. இதற்காக எந்த ஒரு சீக்கியரும், முஸ்லிமும் பயணம் செய்ய பயப்படக்கூடாது. இது போன்ற சம்பவங்கள் நம் நாட்டின் கட்டமைப்பையே உலுக்குவதாக உள்ளது. இது போன்ற அறிவின்மைச் செயல்கள் நம்மைச் சுற்றி நிறைந்துள்ளன” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சமூக வலைதளங்களில் பொறுப்பாக பதிவிடுவது அவசியம்.
.

மு.சித்தார்த்
(மாணவ பத்திரிக்கையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ