Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த அஞ்சு பேருக்கு நாம ஏன் நன்றி சொல்லணும் தெரியுமா?

ரசியல்வாதிங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்களா, ஊழல் பண்ணாதவங்களா, நேரத்துக்கு ஏரியை திறந்து விடுறவங்களா, அடிக்கடி வெளியூர் டூர் போகாம உள்ளூர்லயே இருந்து பிரச்னையை சமாளிக்கிறவங்களா, திறமைசாலிங்களா, நேர்மையானவங்களா இருந்திருந்தா 2015ஆம் வருஷம் நம்ம ஃபேஸ்புக் டைம்லைன் எப்படி இருந்திருக்கும்?

சினிமாக்காரங்க சண்டை போடாம தேர்தல் நடத்தியிருந்தா, பீப் பாட்டை சிம்பு பாடாம இருந்திருந்தா, லிங்கா படம் கொஞ்சமாச்சும் நல்லா இருந்திருந்தா போன வருஷம் முழுக்க ஃபேஸ்புக் எவ்வளவு வறட்சியா இருந்திருக்கும்?  நினைச்சுப் பாருங்க. கிடுகிடுனு இருக்கா!

சினிமாக்காரங்களும் அரசியல்வாதிகளும் அவுங்களுக்குள் ளேயே அடிச்சிகிட்டாலும், நமக்கு என்டர் டெய்ன்மென்ட் தருவதில் என்னைக்குமே குறைவச்சதே இல்ல. சினிமாக்காரங்க இல்லனா அரசியல்வாதிங்க, அரசியல்வாதிங்க இல்லன்னா சினிமாக்காரங்கனு யாராச்சும் ஒருத்தர்  டோக்கனே இல்லாம நமக்கு ஸ்டேட்டஸ் நிவாரணத்தை அள்ளிஅள்ளி தந்துகிட்டுதான் இருந்தாங்க. அதனால, அவங்களுக்கு நன்றியும், அடுத்த வர்ற வருஷத்துல இன்னும் பெட்டர் பர்ஃபாமென்ஸுக்கு வாழ்த்தும் சொல்வோமா?

ஃபேஸ்புக் டைம்லைனை வற்றாத ஜீவநதியா வச்சிருக்கிற எவர்க்ரீன் விஐபி-களான ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், வைகோ போன்ற விஐபிகளைப் பத்தி நாமே ஏற்கெனவே நிறைய தடவை வாரிக் குவித்துவிட்டதால், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மற்ற விஐபி-கள், 2015 ல் கடந்துவந்த மறக்க முடியாத சம்பவங்களைப் பார்க்கலாம்.

கமல்ஹாசன்

கமல் அட்வன்ஸ்டா சிந்திக்கிறவர்னு சொல்வாங்க. அப்பவெல்லாம் நான் நம்பலை. ஆனா சமீபத்துலதான் 'சலங்கை ஒலி' படம் பார்த்தேன். அந்தப் படத்துல வயசான ஜெயப்பிரதாவோட வீட்டுல வேலை செய்யுற வேலைக்காரர் ஒருத்தர் வருவாரு. ஜெயப்பிரதா என்ன கேட்டாலும் என்ன வேலை சொன்னாலும் 'அம்மா, அம்மா'ன்னு ரோபோட்டிக் டோன்லயே பதில் சொல்வாரு.

சுமார் 33 வருஷத்துக்கு முந்தியே தமிழ்நாடு இப்படித்தான் இருக்கும்கிறதை நுணுக்கமா கணிச்ச கமலை, தீர்க்கதரிசின்னு சொல்றதை தப்பே இல்லங்கிறேன். கட்சிக்காரங்களுக்கு அது அம்மா புகழ்பாடும் மந்திரமாக இருந்தாலும், அதை கேட்கும் நம‌க்குதான்  நலந்தானா பாட்டை தவில்ல வாசிக்கக் கேட்டமாதிரி 'டொட்டடட்டடோ டொட்டடட்டடோ, டொட்டட்டட்டோ'ன்னே கேட்டு தொலைக்குது!


தமிழக ஆளுநர் ரோசய்யா


இத்தனை வருட சுதந்திர இந்தியாவில் வேறு எந்த ஆளுநரும் இவ்வளவு கடினமான பணியை வேறு யாருமே செய்திருக்க முடியாது. ஒண்ணா ரெண்டா, எத்தனை மந்திரிசபை பதவியேற்பு விழாவுக்கு தலைமை தாங்கியிருப்பார். இப்படித்தான் ஒரு நாளு என்ன ஆச்சுன்னா, கோட்டையிலிருந்து ஆளுநர் அலுவலகத்திற்கு மதியம் 12 மணிவாக்கில் ஃபேக்ஸ் செய்தி ஒன்று வந்தது.

‘மந்திரி சபை மாற்றியமைக்கப்படுகிறது, புதிய மந்திரி ஒருவரின் பதவியேற்பு விழா சாய்ந்திரம் 5 மணிக்கு நடைபெறும், வந்து சேருங்க’ என்பதுதான் ஃபேக்ஸ் செய்தி. ரோசய்யா ரொம்ப அப்செட். காரணம்,  அன்னைக்கி காலையில்தான் புதுசா ஒரு மந்திரிக்கு பதவியேற்பு செஞ்சு வச்சுட்டு அப்பாடான்னு ரிலாக்ஸா வந்து ஈசிசேர்ல உட்கார்ந்தார், அதுக்குள்ள அடுத்த ரவுண்டு.

இதையெல்லாம்விட கொடுமையான விஷயம் ஒண்ணையும் அவர் கடந்து வந்துருக்கார். அழுதுகொண்டே முதல்வரா பதவியேத்துக்கிட்ட பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து சொல்றதா இல்ல ஆறுதல் சொல்றதான்னு தெரியாம ரோசய்யாவே ஒரு நொடி கலங்கிட்டார்னா பார்த்துக்கங்களேன்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது நியமனம் செய்யபட்ட பல காங்கிரஸ் ஆதரவு ஆளுநர்கள், பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் பதவி விலக நிர்பந்தம் ஏற்பட்டாலும், ரோசய்யா மட்டும் தப்பியதற்கு அவருடைய இந்த கடின உழைப்புதான் காரணம். கடைசியா ஒரு ஆறு மாசமாதான் கொஞ்சம் ரெஸ்ட்ல இருக்காரு.

பாவம்... ஆளுங்கட்சிக்காரங்களே டயர்ட் ஆகிட்டாங்க போல!


டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்


‘நம்மூர்ல ஆடு மாடெல்லாம் இனாமா தர்றாங்க, ஆனா இந்த அர்விந்த் கெஜ்ரிவாலு டெல்லில ஆட்டுக்கெல்லாம் நம்பர் போட்டு ரோட்டுக்கு வரக்கூடாது’ன்னு சொல்றாராமே என நண்பர் ஒருவருக்கு டவுட்டு.


"அடேய்... அடேய்... அது ஆட்டுக்கு நம்பர் இல்ல, Odd நம்பர், ஒத்தப் படை நம்பர் இருக்குற வண்டி எல்லாம் என்னைக்கு ரோட்ல ஓடணும் / ஓடக்கூடாது, ரெட்டைப் படை நம்பர் உள்ள வண்டி எல்லாம் என்னைக்கு ஓடணும்/ஓடக்கூடாதுன்னு ரூல் போட்டுருக்கார்"னு புரிய வைக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துவிட்டது.

"அது எப்படிண்ணே, இவுங்களே நம்பர் குடுப்பாங்களாம், அப்புறம் இவுங்களே வண்டியை ஓட்டகூடாதுன்னு சொல்வாங்களாம்"ன்ற அவருடைய அடுத்த கேள்விக்கு உங்களிடமாவது பதில் இருக்கிறதா?

இருந்தா உடனே எனக்கு கடுதாசி போடுங்க!அருண்ஜெட்லி


டெல்லி கிரிக்கெட் சங்கத்துல ஊழல் நடந்துருக்குன்னு இவரு பேரையும் இழுத்துவிட்டு உரண்டை பண்ணிகிட்டுருக்காரு பிஜேபி எம்.பி. கீர்த்தி ஆசாத்.

‘என் பேரை டேமேஜை ஆக்குற மாதிரி நடந்துக்குறாரு, நீங்க என்னாடான்னா கண்டுக்கவே மாட்டேங்குறீங்களே’ன்னு சுஷ்மா சுவராஜையும் அழைத்துக்கொண்டு மோடியிடம் சென்று ஜெட்லி கண்ணை கசக்க, மோடி சொன்ன பதில்தான் அல்டிமேட். "யாரும் போகாத ஊருக்கு ஒரு டூர் போகணும், மச்சி நீ ஒரு ஊர் சொல்லேன், சுஷ்மாஜி, நீங்க ஒரு ஊர் சொல்லுங்களேன்' என ரிப்பீட் மோட்லயே இருந்தார் மோடி.

வேறுவழி இல்லாமல், அமித்ஷாவிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, உடனே கீர்த்தி ஆசாத்தை கட்டம் கட்டி, உஸ்ஸாக்கிவிட்டார் அமித்ஷா. ஒருவேளை கீர்த்தி ஆசாத் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்னா திரும்பவும் இஸ்ஸுதான். நம்ம நாட்டு அரசியலே இம்புட்டுத்தான், உஸ்ஸு இஸ்ஸு என்பதை ஜெட்லி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

சென்னை மாநகரத் தந்தை மேயர் சைதை துரைசாமி


மேயரின் அதிகாரபூர்வ அலுவலகமான ரிப்பன் மாளிகையின் பின்புறமாக ஒரு நபர் சுவர் ஏறிக்குதித்து ஓடியதைப்  பார்த்த போலீசார் அவரை துரத்திப் பிடித்து அதிர்ச்சியானர்கள். பிடிபட்டவர் மேயர். 'ஏன் சார் இப்புடி சுவர் ஏறி குதிக்கிறீங்க'ன்னு கேட்டதுதான் தாமதம், மனிதர் கண்ல தண்ணி வச்சுட்டார்.

பின்ன என்னங்க, இந்த பத்திரிகைகாரங்களுக்கு கொஞ்சமாச்சும் இரக்கம் வேணாம்? எங்க போனாலும் மைக்கை  நீட்டிக்கிட்டு வந்து எதையாவது கேட்டுக்கிட்டே இருக்காங்க. எவ்வளவு  கேட்டாலும் அவர் பதில் சொல்ல மாட்டார்/சொல்ல முடியாது தெரிஞ்சுகிட்டே அவரை கலாய்க்கிறாங்க. அவிங்களால இவர் நிம்மதியே போச்சு. 

ஆஃபிஸ் வாசல்ல ரெண்டு பேரு, வீட்டுக்கு முன்னாடி மூணு பேரு, கார்கிட்ட ஒருத்தன்னு மூணு வேளைக்கும் ஷிஃப்ட் போட்டு வெயிட் பண்றானுங்க. முடியலை, அதான் சுவரு ஏறிக்குதிச்சு போய்கிட்டு வந்துகிட்டு இருக்காரு.

- சீலன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ