Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனோவா போச்சே!

சீரியஸ் கட்டுரை எழுதினாலும், சிரிப்பு கட்டுரை எழுதினாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஃபேக் ஐடியில் ஃப்ரீ ரீசார்ஜ் கமென்ட் போடுகிறவர்கள்கூட தங்கள் வேலையை நிறுத்திவைத்துவிட்டு நாசாவின் பதவிநீக்கத்தைக் குறித்து கமென்ட் போட்டுவருகிறார்கள்.

ஃபேஸ்புக்கில் நேரம் செலவிடுவோரில் பாதிபேரின் பாதி நேரத்தை பங்குப்போட்டுக் கொண்ட நாசாவின் நீக்கத்தை நினைத்து 'மீம் கிரியேட்டர்கள் நலச்சங்கம்' தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, தங்கள் புரொஃபைல் போட்டோவை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டிருக்கிறார்கள்.

அதிமுகவிற்கு மக்களிடம் இருந்த ஒரே என்டர்டெய்ன்மென்ட்டான நாசாவின் நீக்கத்தின் வீக்கம், அடுத்த தேர்தலில்தான் தெரியும். து.கொ.ப.செ.வாக இருந்து அவர் பரப்பிய ஒரே கொள்கை அம்மா அம்மா அம்மா மட்டும்தானே!. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் இனோவா பிடுங்கப் பட்டு என்றல்லவா எதிர்கட்சியினர் கொக்கரிப்பர். 

அய்யகோ, கிரேக்க சாம்ராஜ்யத்தையும் ஏதென்ஸ் நகரத்தையும் தன் சொல்லாடலில் எடுத்தாள்வதை இனி வைகோ மட்டுமே சொந்தமாக்கிக்கொள்வாரே! இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா அம்மா'ன்னு வாயாலயே எட்டுப்போட்டு ஆர்.டி,ஓ. ஆஃபிஸ்ல லைசென்ஸ் வாங்கி ஓட்டுன இனோவா போச்சே. இந்த சமூக அவலத்தை, களங்கத்தை எந்த புதுக்காரை கொண்டு துடைக்க முடியும்? தேர்தலுக்கு வேறு நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதுவரைக்கும் ஷேர்ஆட்டோவுக்கு காசு கொடுத்து கட்டுப்படியாகுமா?

ஜெயலலிதாவைத் தவிர்த்து வேறு யாரேனும் முதலமைச்சராக இருந்தால் என்ன மரியாதை கிடைக்கும் என்பதை ஓ.பி.எஸ்ஸை கேட்டால் வாயைத் திறக்காமல் மாசக்கணக்கில் கண்ணாலயே பேசுவாரே. அப்படி இருக்கும்போது, பதவி இல்லாவிட்டால் நாசா எப்படி நடத்தப்படுவார் என்பதை நினைத்துதன மனம் களங்குகிறது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே தெரியவில்லைன்னு கொக்கரித்த புரட்சித்தலைவையின் அடியோற்றி நடந்த நாசாவை வீழ்த்திய எதிரிகள் புதிய தலைமுறையினரா அல்லது இந்த வெற்றியை த‌ந்தி அடித்து கொண்டாடும் மீம்ஸ் கிரியேட்டர் நலச்சங்க எதிரிகளா?

தன்னை நோக்கி வீசப்பட்ட ஃபேஸ்புக் அவதூறுகளுக்காக எந்த அவதூறு வழக்கும் தொட்டுக்காமல், நாளொரு மேனியும்  பொழுதொரு மீம்ஸுமாக வாழ்வாங்கு வாழ்ந்த அந்த செம்மலின் குடியே முழுகிவிட்டதே!

அந்தப் பேட்டியை பார்த்து கீழே விழுந்து புரண்டு சிரித்ததில் எங்களுக்கே நல்லி எலும்பெல்லாம் நழுவிவிட்டது, பேட்டி எடுத்தவங்க என்ன பாடுபட்டாங்களோ? எடிட்டிங்ல எவ்வளவு போச்சோ தெரியலையே. பதவி போனபிறகு அந்த இனோவா காரை ஓ.எல்.எக்ஸ்.ல விக்கிறதா இல்ல குயிக்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ல விக்கிறாதான்னுகூட தெரியாத அப்பாவியை கழற்றிவிட எப்படி மனது வந்தது இவர்க‌ளுக்கு?

என்ன குற்றம் செய்தார் எங்கள் கட்சிக்காரர்? பேட்டியின்போது வழக்கமாக உச்சரிக்கப்படும் 'அம்மா மந்திர'த்தின் எண்ணிக்கை இந்த தடவை நூறு தடவைக்கும் கீழே இருந்ததாலா? 'பத்திரிக்கைகாராங்க அடிச்சும் கேட்ப்பாங்க, அப்பவும் எதுவும் சொல்லக்கூடாது, கேமராவுக்கு முதுகுகாட்டி கெஞ்சி கூத்தாடியாவது எஸ்கேப்பாகவேண்டும்' என்ற அதிமுக பாலபாடத்தை மறந்து ஒரே நாளில் இரண்டு முக்கிய தொலைகாட்சிகளில் அருள்பாலித்ததுதான் காரணமா? கூட்டணிபத்தி பேசக்கூடாததை எல்லாம் பேசியதுதான் காரணமா?

யாருக்கும் அஞ்சாமல், இதுநாள்வரை 'பணங்காட்டு' நரியாக உலவியவரின் பல்லைப் பிடுங்கிவிட்டு விடுவித்துவிட்டீர்களே! விடுவிக்கப்பட்டது நாசா போன்ற உருவஒற்றுமை கொண்ட பத்திரிக்கையாளர் ஒருவர் என்ற உண்மை தெரிய வந்த காரணத்தால் திரும்பவும் பதவி கிடைத்துவிடாதா என்று வேண்டாத தெய்வமில்லையே.

நீக்கியதற்கான காரணம், திரும்ப சேர்த்துக்கொள்வதற்கான காரணம் என எதையுமே சொல்லாமல், அம்மா திருப்பித் தருவாங்கன்னு காத்துக்கிட்டுருக்கோம்.

தந்துடுவாங்கல்ல?

சீலன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close