Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான்

ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி, தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று.

மேற்கத்திய இசை, கர்நாடக சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதைதான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே...’ என்று உருகவைப்பார், ‘போறாளே பொன்னுத்தாயி..’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோஜாவே...’யென கலங்கடிப்பார். இவரது இசை வெறும் சப்தம் அல்ல. அது உணர்வுகளின் வேறொரு பரிணாமம். அது தென்றலோடு சேர்ந்து வரும் மலர் வாசம். எளிமையே இவருக்கு அடையாளம். இவரே தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளம்.

இசையை உண்டவர்

ரஹ்மான் இசையைப் பயிலவில்லை. சுவாசிக்கவில்லை. அவர் இசையைத்தான் உணவாய் உண்டார். இசையமைப்பாளரான தனது தந்தை முதல் படம் வெளியான நாளன்றே மறைந்துவிட, வறுமையின் பிடியில் வாடிய ரஹ்மானின் குடும்பம், அந்த இசைக்கருவிகளை விற்றே குடும்பம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இசை அவர் ரத்தத்திலேயே கலந்திருந்தது. ஆனால் அதை தனது ஒவ்வொரு செல்களுக்கும் பாய்ச்சியவர் ரஹ்மான். வறுமையில் வேலை செய்துகொண்டே தனது இசைஞானத்தை வளர்த்துக் கொண்டார். டிரினிடி கல்லூரியின் ஸ்காலர்சிப்பால் இசை பயின்ற ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி போன்ற முன்னனி இசையமைப்பாளர்களின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டிக்கொண்டிருந்த ரஹ்மானை, 1992ம் ஆண்டு தனது ரோஜா படம் மூலம்  திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். முதல் படமே மாபெரும் வெற்றி. பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகனை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டின. அதன் விளைவு – முதல் படத்திற்கே தேசிய விருது பெற்று பட்டையைக்கிளப்பினார் ரஹ்மான். பாம்பே படத்திற்கு அவர் போட்டிருந்த பின்னணி இசை வெகு பிரசித்தி. 120 லட்சம் பிரதிகள் விற்றது இப்படத்தின் பாடல் கேசட்டுகள். அவ்விசையை பாலஸ்தீனியத்தின் ‘டிவைன் இன்டர்சேஞ்ச்’ படத்திலும், ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் நிகோலஸ் கேஜின் ‘லார்ட் ஆஃப் வார்’ படத்திலும் பயன்படுத்த,  உலகின் பார்வையில் பட்டது இந்த சென்னைப் புயல்.

1992 முதல் 2000 வரை தொடர்ந்து தமிழின் சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார் (1998ல் அவர் எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இசையமிக்கவில்லை).


எல்லயைக் கடந்த புயல்

தமிழில் மட்டும் நிற்கவில்லை ரஹ்மானின் வெற்றி. மொழிகள் கடந்து, எல்லைகள் கடந்து, தேசங்கள் கடந்து அவர் இசை ஒலித்தது. உலகின் மிகப்பெரிய இசைத்துறையான ஹாலிவுட் பக்கமும் வீசியது இந்தப் புயல். உலகின் பல நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார் ரஹ்மான். பாப் உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து பிரபு தேவா, ஷோபனா ஆகியோரை கொண்டு மாபெரும் இசை நிகழ்வை ரஹ்மான் நிகழ்த்த ‘மெட்ராஸ் மொசார்ட்’ என்று ரஹ்மானை அழைத்தது இசையுலகம். இசைத்துறையின் ஆஸ்கர் எனப்படும் கிராமி விருதையும் இரண்டு முறை கைப்பற்றி, அளப்பரிய சாதனை படைத்தார் ரஹ்மான்.


ஆஸ்கர் நாயகன்

கடைக்கோடி ஏழை இந்தியச் சிறுவனைப் பற்றிய ஹாலிவுட் படம் ‘ஸ்லம்டாக் மில்லியினர்’. படமே நம் நெஞ்சைக் கரைக்க,  அதன் உணர்வுப்பூர்வமான இசையால் உருக்கினார் ரஹ்மான். பல ஆண்டுகளாய் இந்தியன் ஏங்கிக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை இரு கைகளிலும் ஒவ்வொன்றாய்ப் பிடித்து “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிய அக்கணம் ஒவ்வொரு இந்தியனும் உச்சி முகர்ந்து போனான். திரைத்துரையின் மிகப்பெரிய மணிமகுடத்தைச் சூடிய முதல் தமிழனானார் ரஹ்மான். அதுமட்டுமின்றி கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் வெல்ல, ஹாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநரானார் ஏ.ஆர்.ஆர்.

 

இன்று இந்தியாவைப் பற்றிப் பேசும்போது பின்னணியில் 'ஜன கன மன...' ஒலிக்கிறதோ இல்லையோ ‘ஜெய் ஹோ’வும், வந்தே மாதரமும் நிச்சயமும் ஒலிக்கும். அந்த அளவிற்கு அப்பாடல்களில் உயிர்ப்பைக் கூட்டியிருப்பார் ரஹ்மான். 2010ல் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான பாடலை இசையமைக்கும் பொறுப்பை தமிழக அரசு இவரிடம் கொடுத்தது. இவரது ஆளுமையைப் பயன்படுத்தி,  தனியாக அந்தப் பாடலை அவர் பதிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடகர்கள் மட்டுமின்றி,  சக இசையமைப்பாளர்களையும் அதில் ஈடுபடுத்தி மாபெரும் மனிதனாய் நின்றார். திரைப்படப் பாடல் செல்போனில் ரிங்டோனாக வைக்கப்படுவது சாதாரணம். ஆனால் அந்த செம்மொழிப் பாடலே பலரது செல்போனில் ரிங்டோனாய் ஒலிக்கிறது என்றால் அதுதான் ரஹ்மானின் மேஜிக்கல் டச். 

எளிமையின் சிகரம்:

எப்பேர்ப்பட்ட வெற்றியானாலும் அதை தன் கரங்கள் தாண்டி,  சிரம் செல்ல அனுமதிப்பதில்லை இவர். ஆஸ்கர் விழாவின் போது கூட “எனக்கு விருது கிடைக்காமலிருந்தாலும், என் தாயின் அன்பு குறையாது. எனக்கு அதுவே போதும்” என்று கூறியவர் ரஹ்மான். சிறிதும் நகைகள் அணிய விரும்பாதவர். தனது இசை சிறகுகள் விரித்துப் பறக்க வேண்டுமென்று இலவச இசைப் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். குடும்பத்திற்காக அதிக நேரம் செலவழிப்பவர்.

ரஹ்மான் மிகவும் மெதுவாக இசையமைக்கும் பழக்கம் உடையவர். அதனால் சில இயக்குநர்கள் சங்கடப்பட்டதுண்டு. “நான் ஒவ்வொரு பாடலையும் ரசித்துதான் இசையமைப்பேன். அப்போதுதான் அதை சிறப்பாகக் கொடுக்கமுடியும்” என்று வெளிப்படையாகக் கூறியவர். மிகவும் இளகிய மனசுக்காரர் இவர்.  சமீபத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நல உதவிக்காக பல்வேறு நகரங்களில் இசைக்கச்சேரி செய்து, அதில் வசூலிக்கப்படும் பணத்தில் ஒரு பகுதியை அம்மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளார் ரஹ்மான்.

ரஹ்மானின் வெற்றிகள் எளிதில் கிடைத்தவையல்ல. அவை வறுமையை வென்ற வெற்றிகள். காலத்தை வென்ற காவியங்கள். ஒருமுறை பாடகர் ஜேசுதாசிடம் ரஹ்மான் பற்றிக் கேட்டபோது, “அவர் மௌனத்திலிருந்து கூட இசையை உருவாக்குவார் என்றார்”. அதுதான் இசை உலகில் ரஹ்மானின் அடையாளம். யாரும் நிணைத்துப்பார்க்காத ஒன்றை முடித்துக் காண்பிப்பார் இந்த இசைப்புயல்.

 உலக மேடையில் இந்தியாவையும் தமிழையும் பெருமைப்படுத்தி,  சாதனைகளைத் தன் பின்னே காத்திருக்க வைத்திருக்கும் இந்த இசைப்புயல்,  தன் வலுவை இழக்காமல் உலகெங்கும் வீசிக்கொண்டேயிருக்கும்... வெற்றிகள் குவிந்த வண்ணம் இருக்கும்...!


மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ