Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனைவருக்கும் நாயகன்... மார்டின் லூதர் கிங் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு!

1963-லிங்கன் சதுக்கம்…ஒரு உரை…ஒட்டுமொத்த நீக்ரோக்களின் ரத்தத்தில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் பாய்ச்சியது. தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடத் தூண்டியது. தங்கள் விடுதலைக்காகக் கனவு கானச் சொன்னது. அமெரிக்காவில் நடந்த இனப்போராட்டத்தின் முடிவைத் தொடங்கிவைத்ததில் அவ்வுரைக்கும் அதைப் பேசிய அம்மனிதனுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அதைத் தேடிச் சென்று தனது போராட்டத்தில் வெற்றி கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதன் மார்டின் லூதர் கிங்கின் பிறந்த தினம் இன்று.

ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு அடிமைகைளாக இருந்த கருப்பர் இனத்தவரின் விடிவெள்ளியாய், நம்பிக்கை நாயகனாய் திகழ்ந்தவர் மார்டின் லூதர் கிங் (ஜனவரி 15,1929–ஏப்ரல் 4,1968). அவரிடம் இருந்து வெளிப்பட்டவையெல்லாம் வெறும் சொற்கள் அல்ல. அவை பிரம்மாஸ்தரத்தை ஏவும் வில்கள். உரையும் குளிரில் ரத்ததைக் கொதிக்க வைக்கும் தீப்பிழம்புகள் அவை. ஆனால் அமைதியை மட்டுமே வலியுறித்தியவை. இன்றும் உலக வரலாற்றின் தலைசிறந்த பேச்சுகளில் அவர் பேசிய ‘ஐ ஹேவ் எ டிரீம்’ (எனக்கொரு கனவுண்டு) உரை தலையாயதாகக் கருதுப்படுகிறது. ஒவ்வொரு கருப்பு அமெரிக்கனையையும் தனது சுதந்திரத்திற்காகப் போராட வைத்த அவ்வுரையின் சாராம்சம் இங்கே…

திருப்தியடையப் போவதில்லை

 “100 ஆண்டுகள் ஆனபின்னும் நீக்ரோக்கள் இங்கு அடிமையாகவே உள்ளோம். நியாயம் என்னும் கஜானா இங்கு காலியாக இருக்கிறது. நமக்கு இங்கு சமத்துவம் கிடைக்காமல் ஓயப்போவதுமில்லை அமைதியடையப் போவதுமில்லை. இந்தப் போராட்டம் தீவிரவாதமாக மாறப் போவதில்லை. இந்தப் போராட்டம் வெறும் தொடக்கம் தான். நீக்ரோக்களுக்கு எதிரான வன்முறைகள் அடங்கும் வரை, போராடி சளைத்த நமது தேகம் ஓய்வெடுக்க நகரத்தின் ஹோட்டல்களில் இடம் கிடைக்கும் வரை, மிசிசிப்பியின் மூளையில் இருக்கும் ஒரு நீக்ரோவிற்கு ஓட்டுப்போடும் உரிமை கிடைக்கும் வரை நாம் திருப்தி அடையப்போவதில்லை” என்றார் மார்டின். அவருடைய பேச்சின் ஒவ்வொரு வரிக்கும் இடையே எழுந்த கரகோஷமும் ஆரவாரமுமே அந்த வார்த்தைகளின் பலத்தை எடுத்துக்காட்டின. இவரது பேச்சு கருப்பர்களை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வெள்ளையர்களையும் ஈர்த்தது. அவர்களும் நீக்ரோக்களின் வாழ்வாதாராத்திற்காகப் போராட முன்வந்தனர். அதுதான் மார்டின் பேச்சின் ஜாலம்.எனக்கொரு கனவுண்டு

இதுதான் அவ்வுரையின் சிறப்பான அத்தியாயம். தான் கானும் கனவுகளாக, மார்டின் பேச அங்கு கூடியிருந்த ஒவ்வொரு நீக்ரோவின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. “ஒருநாள் ஜார்ஜியாவில் முன்னாள் அடிமைகளும், அவர்களை அடிமைப்படுத்தியவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் வேறுபாடு காட்டாத ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்ற கனவு எனக்குள்ளது. ஆம். எனக்கொரு கனவுண்டு.ஒருநாள் பள்ளத்தாக்குகள் மேன்மையடையும். மலைச்சிகரங்கள் உயரம் தாழும். சமத்துவம் நிச்சயம் தலைத்தோங்கும்” என்று அவர் சொல்லி முடிக்கையில் அத்தனை நீக்ரோக்களின் மனதிலும் அசைக்க முடியாத ஒரு கனவு நாயகனாக மாறிப்போனார் மார்டின் லூதர் கிங். அவரது மனம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நீக்ரோக்களின் உரிமைகளுக்காவவே துடித்தது. 1968ல் அவர் சுடப்பட்ட போது, அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், “அவருக்கு வயது 39 தான் என்றாலும், இதயம் ஒரு 60 வயதுடையவரைப் போன்றதாகவே இருந்தது” என்று கூறினர். சுமார் 18 வருடங்கள் கருப்பர்களின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டே இருந்ததால் தான் அவரது இதயம் பலவீனமடைந்தது. தான் கடைசியாக மிசிசிப்பியில் உரையாற்ற வருகையில், அவரக்கு கொலைமிரட்டல் இருந்தது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் அங்கு பங்கேற்றார். “வெள்ளைக்கார சகோதரர்களால் எனக்கு என்ன வந்துவிடப்போகிறது. கடவுளின் ஆனைக்கினங்க என் பயணம் தொடரும். நான் மலையின் உச்சியை நோக்கிப் பயணிக்கிறேன். நான் எதற்கும் பயப்படவில்லை. நடப்பது நடக்கும்” என்று தைரியாமாக அக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் மார்டின். ஆனால் அதுவே அவரது கடைசி உரையானது தான் பெரும் சோகம். அவர் வெரும் பேச்சாளர் மட்டுமல்ல. மாபெரும் செயல் வீரர். நீக்ரோக்களின் உரிமைக்காகவே மூச்சையும் விட்டவர். கருப்பர்களின் மனதில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவின் வரலாற்றிலும் இவரது பெயர் அழிக்க முடியாத ஒன்று.

அமைதிக்கான நோபல் பரிசை இம்மனிதன் வென்றது வெற்றியல்ல. அவர் கண்ட கனவைப் போல அந்நாடு இன்றொரு கருப்பர் இனத்தைச் சார்ந்தவரால் ஆளப்படும் மாற்றத்தைச் சந்தித்திருக்கிறதே, அதுதான் மார்டின் லூதர் கிங்கின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.


மார்டின் லூதர் கிங்கின் ‘ஐ ஹேவ் எ டிரீம்’ வீடியோவைக் காண
மு.பிரதீப் கிருஷ்ணா

மாணவர் பத்திரிகையாளர்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close