Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டைரி வரலாற்றின் தந்தை ஆனந்தரங்கம் நினைவு தின சிறப்புக் கட்டுரை!

மிழிலக்கிய வரலாறில் ஆனந்தரங்கம் பிள்ளைத் தமிழ், ஆனந்தரங்கக் கோவை, ஆனந்தரங்கன் தனிப்பாடல் என்ற ஆனந்தரங்க வரிசைகளை அறியாதவர் வெகுகுறைவே எனலாம். ஆனந்தரங்கன் யார், என்ற கேள்விக்கு விடை எதுவென்றால்  நாட்குறிப்பு எழுதப்படும் ஒரு டைரிதான் பதிலாக இருக்கிறது.

ஆம். 18-ம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு காலத்திய ஆளுமை நிலவரம், சமூக மாற்றம், போர்த்தந்திரம், வணிகம், அரசியல் சூட்சுமம், மக்கள் கலாச்சாரம், அரசு தண்டனைகள், சட்ட நுணுக்கங்கள், தொழில் முறைகள் இன்னும் என்னென்ன அந்தக் காலக்கட்டத்தில் நடைமுறையில் வெளிப்படையாக இருந்தனவோ, அதையும், மறைபொருளாக இருந்தவையையும் அடுத்த நூற்றாண்டுக்கான ஆராய்ச்சிப் பொக்கிஷமாக தன்னுடைய 25 ஆண்டுகால இடைவிடாத டைரி குறிப்பால் நாட்டுக்கு அளித்த பெருந்தகைதான் ஆனந்தரங்கம் பிள்ளை.

மார்ச், 30, 1709-ல் சென்னை பெரம்பூரில் பிறப்பு. ஜனவரி 16, 1761-ல் புதுவையில் இறப்பு. இதுதான் ஆனந்தரங்கம் பிள்ளையின் வாழ்நாள் காலம். ஆனால், மூன்று நூற்றாண்டுகள் கழிந்தும் அவர் புகழ் நம் மண்ணை விட்டு போகாமல் இருக்க காரணமாக அமைந்தது, அவருடைய தன்னலமற்ற குறிப்பெழுதி வைக்கும் பணியே...

துய்ப்ளெக்ஸ் எனும் பிரெஞ்சு ஆளுநரின் மொழி பெயர்ப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கிய ஆனந்தரங்கம் பிள்ளை அந்தக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் உள்பட ஏராளமான பதிவுகளை நமக்கு அவருடைய டைரி மூலமாக வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்.

உலகளவில் 'நாட்குறிப்பின் தந்தை' என்று போற்றப்படுகிறவர் சாமுவேல் பெப்பீஸ். அதை நினைவூட்டும் விதமாக, 'இந்தியாவின் பெப்பீஸ்' என்று அழைக்கப்படுகிறார் ஆனந்தரங்கம் பிள்ளை. 1736 முதல் 1761 வரை 25 ஆண்டு காலங்கள் இடைவிடாது தொடர்ந்தது இவருடைய குறிப்பெழுதும் பணி.

ஆனந்தரங்கம் பிள்ளை அன்றைய மெட்றாஸ் பட்டணத்திலிருந்து புதுவைக்கு சென்று அரசுப் பணியில் உதவியாளராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் படிப்படியாக உயர்ந்து அந்த நாட்டின் திவான்  ஆக பதவி உயர்வையும் எட்டினார். அதன் பின்னரும் விடாது டைரி எழுதும் பணியை முழுமைப்படுத்தினார். அங்கே இருந்தபடியே ஆனந்தப் புரவி எனும் பேரில் சொந்தமாக பாய்மரக் கப்பல் மூலம் வணிகத்தையும் தொடர்ந்திருக்கிறார். அன்றாட நிகழ்வுகளோடு தான் கேள்விப்பட்ட சம்பவங்களையும் சரிதானா, என்று உறுதி செய்து கொண்டு அவற்றையும் தன்னுடைய டைரியில் ஆவணப் படுத்தியிருக்கிறார்.

1749-ல் முசபர்சஸ் என்ற இந்திய மன்னர், ஆனந்தரங்கன் பிள்ளைக்கு 'மன்சுபேதார்' என்ற கவுரவ பட்டம் அளித்து அவரை செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாக்கினார். தளபதி ஆனபின், அவருக்கென 3 ஆயிரம் குதிரைகளையும் வழங்கினார். ஆளுநர் மாளிகைக்குள் எளிதில் யாரும் நுழைய முடியாத காலக்கட்டத்தில் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு என்று ஆளுநர் தனி அங்கீகாரம் கொடுத்திருந்தார். அதன்படி ஆளுநர் மாளிகைக்குள் செருப்பணிந்தபடி, பல்லக்கில் உள்ளே சென்று வர ஆனந்தரங்கத்துக்கு ஆளுநர் அனுமதி கொடுத்திருந்தார். மேலும், பொதுமக்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரமும் அதில் ஒன்று.

ஆனந்தரங்கம் மறைவுக்குப் பின்னர் அவருடைய நாட்குறிப்புகள் 85 ஆண்டுகள் கழித்தே நாட்டுக்கு கிடைத்தது. கவிஞர் அரிமதி தென்னகன் உள்ளிட்ட பலர் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை போற்றும் விதமாக பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் படைத்துள்ளனர். புதுவை அரசு, அவருடைய ஆற்றலை போற்றும் விதமாக, குறைந்த விலைக்கு அவருடைய நாட்குறிப்பை அரசு வெளியீடாக கொண்டு வந்திருக்கிறது. பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் வானம் வசப்படும் (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) நூலானது, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பைக் குறித்ததுதான்.

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டாலே, தெரிந்தவர்களிடம் டைரி கேட்டு வாங்கிக் கொள்ளும் பழக்கமுள்ள எத்தனை பேருக்கு அதை அன்றாடம் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.

டைரியில் அன்றாடம் எழுதும் பழக்கம் இருப்பது நல்ல விஷயம். ஆனந்தரங்கம் பிள்ளை போல நம்முடைய குறிப்பானது அடுத்த தலைமுறைக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணம் அப்போது  நமக்குள் தானாக வந்து விடும், சுயநலம் ஒழியும்... பரந்த மனப்பான்மை வளரும்...

ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close