Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெல்ஜியம் ஜேக்கப் ஏன் மதுரை ஒச்சப்பன் ஆனார்? - இது மதுரை ‘நண்பேண்டா’ கதை

ன்னது ஹென்க் ஒச்சப்பனா? பேரே வித்யாசமா இருக்கே... என்று உங்களுக்கு தோன்றும் சந்தேகம் சரியானதுதான். ஏனென்றால் இந்தப் பேருக்கு பின் இருக்கும் பயணம்.... அவ்வளவு சுவாரஸ்யம்!

பொதுவாக இந்தியாவுக்கு வரும் பல வெளிநாட்டவர்கள், ஓரிரு மாதங்கள் இங்கு தங்கி, இட்லி, சாம்பார், ஜிகர்தண்டா என சுவைத்து மதுரை மீனாட்சி அம்மன், தஞ்சாவூர் பெரிய கோவில் என ரசித்து, ஜல்லிக்கட்டு நடந்தால் அதையும் ஒரு எட்டு பார்த்து மிரண்டு, இறுதியில் "Incredible India" என்று பாராட்டி நமக்கு பை சொல்லி அவரவர் நாடுகளுக்கு திரும்பிவிடுவர். ஆனால் இங்கு ஒருவரோ, தமிழ் கலாச்சாரத்தை தனக்கு விளக்கிய ட்ரை சைக்கிள்காரரான ஒச்சப்பனுடன் தனக்கு ஏற்பட்ட நட்பால் ஹென்றி ஜேகப் என்ற தன் பெயரையே ஹென்க் ஒச்சப்பனாக மாற்றி இருக்கிறார். மதுரைக்கு வந்திருந்த பெல்ஜியம் சுற்றுலா பயணி ஹென்க் ஒச்சப்பனை சந்தித்தோம்.


"இப்போ எனக்கும் ஒச்சப்பனுக்கு ஒரு குட்டி சண்டை. அதுவும் போக அவர் இப்போலாம் ரொம்ப பிஸி. சீக்கிரமே போய் அவனைப் பார்க்கணும்!’’ எனத் தொடங்கிய ஹென்க், சுமார் 25 வருடங்களுக்கு முந்தைய நினைவுகளுக்கு ஃப்ளாஷ் கட் அடித்தார். "எனக்கு பெல்ஜியம்.  முதல் தடவை தமிழ்நாடு வந்தேன். அப்போ மதுரைல இருந்து கொடைக்கானல் போன ஒரு கூட்டமான பஸ்ல நின்னுட்டே போனேன். அந்தளவுக்கு கூட்டமான பஸ்ல எல்லாம் நான் போனதில்லையா... தள்ளாடிட்டே இருந்தேன். அதைப் பார்த்து ஒருத்தர் எனக்கு தன் சீட்டை விட்டுக் கொடுத்தார். அவர்தான் ஒச்சப்பன். love at first sight-னு சொல்ற மாதிரி எங்களுக்குள்ள பார்த்த நிமிஷமே ஃப்ரெண்ட்ஷிப் பத்திக்கிச்சு. இப்போ வரைக்கும் அது தொடருது.

அப்புறம் மதுரை வர்றப்பலாம் ஒச்சப்பன் வீட்டுக்குப் போயிருவேன். அவர் குடும்பத்துலயும் என் மேல பாசத்தைக் கொட்டுவாங்க. நானும் ஒச்சப்பனை என் கூட பிறக்காத சகோதரனா நினைக்க ஆரம்பிச்சுட்டேன். மதுரைல வழக்கமா டூரிஸ்ட் போற இடங்களுக்கே போயிட்டு இருந்தேன். ஆனா, ’I show you real India’-னு கூட்டிட்டுப் போயி அரைகுறை ஆங்கிலத்துல பேசிப் பேசி உண்மையான மதுரையை, தமிழர்களின் கலாசாரத்தை எனக்குப் புரிய வைச்சான் ஒச்சப்பன். அப்படியே மதுரை தாண்டி தமிழ்நாடு முழுக்க சுத்த ஆரம்பிச்சோம். எங்க புல்லட் பைக் சென்னைல ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரை போகாத இடமில்லை. பல ஊர், பல கலாசார மக்கள், பல கோயில்கள், பல பழக்கவழக்கங்கள்னு பார்த்திருக்கேன். ஆனா, எனக்குப் பிடிச்ச ஊர் மதுரைதான்!’’

ஆம்! இவருக்கு மதுரை என்றால் கொள்ளைப் பிரியம். கடந்த 20 வருடங்களாக, ஒவ்வொரு ஆண்டும்  மதுரையில் 3 மாதங்களேனும் தாங்காமல் இருந்ததில்லை. கிட்டதட்ட மதுரைக்காரனாகவே மாறிவிட்ட இவருக்குதான் காணும் அனைத்து மக்களையும் அவர்களது வாழ்க்கைமுறையும் படம் பிடிப்பதே விருப்பம். குறைந்தது 4,000 படங்களாவது  எடுத்திருப்பார். அவை எதையும் விற்றதில்லை. அப்படியே ஆசைப்பட்டு யாரும் விலைக்கு கேட்டால், அந்தக் காசை யாரேனும் உதவி தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.
 


"என் நாட்டில் நான் இருக்கும் 9 மாதத்தை ஓய்வில்தான் கழிப்பேன். அப்போது நான் புகைப்படமாக சேகரித்த நினைவுகளை பார்த்து ரசித்து மற்றவர்களுக்கும் காண்பிப்பேன், 'பாருங்கள் இந்தியாவை ! பாருங்கள் என் மதுரையை' என்று பெருமிதத்தோடு சொல்வதில் எனக்கு அவ்வளவு பெருமை. ஏனென்றால், மூன்று மாதங்கள் மதுரையில் இருக்கும்போது அப்படி ஒரு மனநிம்மதி கிடைக்கும். ஆனால், பெல்ஜியம் அப்படி இல்லை. இயந்திர வாழ்க்கை. மதுரையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள் வருசநாடு, மேலக்கால், உசிலம்பட்டி. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி என் சொர்க்க பூமி 'மாங்குளம்'. இயற்கையோடு பின்னிப் பிணைந்து இருக்கும் அந்த கிராமமே சொர்க்கம்தான்!’’

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க

மதுரையை இவ்வளவு சிலாகிக்கும் இவருக்கு இப்போது ஒரே ஒரு வருத்தம்தான். முன்பைப் போல் தன் நண்பர் ஒச்சப்பனால் தம்மோடு நேரம் செலவிட முடியாததுதான். விவசாயம் பார்க்க அவர் ஊரரான கொப்பிளிபட்டி சென்றுவிட்டாராம் ஒச்சப்பன். நண்பனை மிஸ் செய்யும் ஹென்க் ஒச்சப்பன் பெல்ஜியத்தில் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா? சிறைச்சாலையில் சீனியர் கறார் அதிகாரியாம்!

"நான் என் வேலையைப் பற்றி யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் சில நேரங்களில் என்னிடம் 'உங்களுக்கு போதை பொருள் வேண்டுமா' எனக் கேட்பார்கள். அப்போது என்னைப் பற்றிச் சொல்வதை தவிர்த்து வேற வழியே இல்லை. அவ்வாறு நான் சொன்னவுடன் பயந்து ஓடி விடுவார்கள்!’’ என்று சிரிக்கிறார் ஹென்க்.
 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க


பல வருடங்களாக மதுரை வந்து பழகிவிட்டதால், ஜல்லிக்கட்டு பற்றியெல்லாம் ஹென்க்குக்கு அத்துபடி! ஜல்லிக்கட்டு தடை பற்றி அவரிடம் கேட்டபோது, ’’என்னதான் தமிழ்நாடு எனக்கு நெருக்கமானதாக இருந்தாலும், நான் வெளிநாட்டுக்காரன்தான். இந்த ஊர் அரசியலை நான் விமர்சிக்க மாட்டேன். ஆனால் ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். அதை எந்தவொரு லாபி குழுவால் தடை செய்ய முடியாது. தமிழ்நாடு மக்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காப்பாற்ற பொங்கியெழ வேண்டும்!’’ என நாசூக்காகக் கூறுகிறார்.

ஹும்... பெல்ஜியம் நாட்டுக்காரருக்குத் தெரியுது!    

- அ.பார்வதி

ஹென்க் ஒச்சப்பனின் அசத்தல் க்ளிக்ஸ் நிரம்பிய ஆல்பத்தை காண இந்த இணைப்பை க்ளிக்கவும்!

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ