Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு தலைவன் இப்படிதான் பேச வேண்டும்! - மோடி முதல்... தோனி வரை நமக்கு கற்று தரும் பாடம்

ஒருவரது குணத்தை பெரிதும் வெளிப்படுத்துவது அவரது பேச்சாகதான் இருக்கும். ஒருவேளை நீங்கள் அதிகம் பேசுபவராக இருக்கலாம் அல்லது குறைவாக பேசுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும் இடம் எது என்பது மிகவும் முக்கியம்.

ஒரு கட்சியின் பொதுக்கூட்டம் துவங்கி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் பரிசளிப்பு விழா வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுபவரை பார்த்திருப்போம். வழக்கமான டெம்ளேட் வார்த்தைகளை பயன்படுத்துபவர்கள் துவங்கி,  சர்ச்சையை ஏற்படுத்தும் செய்தி வரை வெவ்வேறு விதமாக பேசுபவர்களை பார்த்திருப்போம். அதிலும் ஒரு தலைவன் என்பவர் எப்படி பேச வேண்டும் என்பது முகவும் முக்கியம். என்ன பேச வேண்டும் என்பதை காட்டிலும், எப்படி பேச வேண்டும் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது. உலகின் சிறந்த தலைவர்களின் பேச்சில் என்ன இல்லை, என்ன இருந்துள்ளது என்பது குறித்த சிறந்த உதாரணங்கள் இதோ ....

எக்ஸாம்பிள் மோடி!


மோடி பேச்சில் எப்போதுமே மேற்கோள்களுக்கு பஞ்சமிருக்காது. உலகில் எந்த ஊருக்கு சென்றாலும் அதோடு இந்தியர்களை தொடர்புபடுத்தி பேசுவது, விநாயகர்தான் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி என தொழில்நுட்பத்துக்கு உதாரணம் கூறுவது என துவங்கி பார்ப்பவர்களை வசீகரப்படுத்திவிடும் திறமை கொண்ட தலைவராக விளங்குபவர். இவரது பேச்சுக்கள் கேட்பவரை போரடிக்காமல் உள்ளது எனக் கூற வைக்கிறது. உலகின் பல பிரதமர்/ அதிபர்கள் இதே பார்முலாவைதான் ஃபாலோ செய்கிறார்கள்.


எமோஷனல் மார்க்!

 


ஒரு தலைவனின் பேச்சு எமோஷனலாக இருக்கக்கூடாதுதான். ஆனால் பாசிட்டிவான விஷயத்தில் எமோஷனலாக பேசி சூழ்நிலையை மாற்றுபவர்தான்  சிறந்த தலைவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது பேச்சுகளில், ஏதாவது ஒரு எமோஷனலான விஷயத்தை நுழைத்து விடுகிறார். அமெரிக்காவில் மோடியுடனான உரையாடலின் போது 'இந்திய கோயில்கள்தான் மக்களின் இணைப்பை உணர்த்தியது. ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரைதான் என்னை இந்தியாவுக்கு அனுப்பியது எனப் பேசியது அனைத்து இந்தியர்களையும் கவர்ந்தது. எமோஷனலை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு மார்க் மிகப்பெரிய உதாரணம்.

இன்ட்ரஸ்டிங்க் சுந்தர் பிச்சை!


கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, தமிழகத்தை சேர்ந்தவர் . இவரது தலைமை பண்பு கூகுளின் பல திட்டங்களுக்கு உதவியாக இருந்துள்ளது. கூகுள் சிஇஓவாக பதவியேற்ற பின்,  முதல் முறையாக இந்தியா வந்த போது ஆன்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் பெயர் என்ன என்ற கேள்விக்கு பால்பாயாசம், பால்கோவா என இந்திய உணவுகளின் பெயராக கூட இருக்கலாம் என்ற அசால்ட்டான பதில் மூலம்,  இந்தியர்களை தன் வசப்படுத்தியவர் சுந்தர் பிச்சை. ஒரு தலைவனின் பேச்சு எவ்வளவு பயனுள்ளதாக இருக்க வேண்டுமோ அதே அளவு இன்ட்ரஸ்டிங்க்காகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் தலைவர்கள் போரடிக்கும் டேப் ரெக்கார்டர்கள் போல் மாறிவிடுவார்கள்.

ஃப்ளுயன்ட் கருணாநிதி!

பேசும் போது தடங்கல் இல்லாமல் பேசுவது ஒரு கலை. சிலருக்கு என்ன பேச வந்தோம் என்பதே மறந்துவிடும். ஆனால்  சரியான வார்த்தைகளுடன், தெளிவாகவும், சாதுர்யமாகவும் பேசும் தலைவர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அவரைப் பற்றிய விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவே ஒரு கூட்டம் கூடும். இந்த ரகத்தை சேர்ந்தவர்தான் கருணாநிதி. அவரது பேச்சுகளில் பெரும்பாலானவை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாகவும், நுட்பமான வார்த்தை பிரயோகம் நிறைந்ததாகவும் இருக்கும். இதுபோன்ற சாதுர்யமான பேச்சுக்கள் மூலமாக ஒரு தலைவனால் நீண்ட நாட்கள் தலைவன் என்ற இடத்தில் நீடிக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.

கான்ஃபிடென்ட் ஒபாமா!


ஒரு தலைவரின் பேச்சில் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயம் தன்னம்பிக்கை. ஒரு நாட்டை, ஒரு கால்பந்து அணியை, அலுவலகத்தில் ஒரு குழுவை நிர்வகிக்கும் ஒரு தலைவர் என்பவர்,  தன்னம்பிக்கை நிறைந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு அணி துவண்டு இருக்கும் நேரத்தில் அந்த அணியை தன்னம்பிக்கையாக பேசி,  வெற்றி பாதைக்கு மாற்றுவது துவங்கி, ஒரு நாட்டின் பிரச்னையை முன்னின்று சமாளிக்கும்போது மக்களுக்கு பிரச்னை தீர்ந்துவிடும் என்ற தன்னம்பிக்கையை கொண்டு வருவது வரை ஒரு தலைவனின் முக்கிய பண்பாகும். ஒபாமாவின் பெரும்பாலான பேச்சுக்கள் இதனையே பிரதிபலிக்கின்றன. அவரது முதல் பிரச்சாரமான 'ஹோப்' துவங்கி அவரது அனைத்து பேச்சுக்களிலுமே. தன்னம்பிக்கைக்கு பஞ்சமிருக்காது.

ரெஸ்பான்சிபிள் தோனி!


ஒரு தலைவனுக்கு முக்கியமாக இருக்க வேண்டிய பண்பு பொறுப்பேற்பது. வெற்றி பெறும் போது அதற்கு காரணமாக நபரை கைகாட்டி பாராட்டுவதும், தோல்விகளுக்கு மற்றவர்களை கைகாட்டாமல் தானே பொறுப்பேற்பதும் தலைவனின் தலைமை பண்பை மேலும் ஒரு படி உயர்த்தும் கருவிகள். இதற்கு சரியான உதாரணம் இந்திய கேப்டன் தோனி மட்டுமே. இந்தியா அபாரமாக வென்ற போட்டிகளில் அவரது பேச்சில் 'நான்' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கமாட்டார். அப்போது அளிக்கும் பேட்டிகளிலும் ஒட்டு மொத்த அணியை குறிக்கும் 'பாய்ஸ்' என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதேசமயம் தோல்விகளுக்கு மீடியாக்கள் முன்பாக தனி நபரை குறை கூறியதே  இல்லை. கடைசியாக தற்போது ஆஸ்திரேலியாவில் தோற்ற 4வது போட்டியிலும் எனது இன்னிங்க்ஸ்தான் தோல்விக்கு காரணம் என தோனி கூறியது அவரது தலைமை பண்பை உணர்த்துகிறது. எப்படி வெற்றிகளில் நான் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டாரோ அதேபோல் தோல்விகளில் நான் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்.

ஒரு தலைவன்தான் இதுபோன்று பேச வேண்டும் என்பதில்லை. ஆளுமை திறன் கொண்ட,  தன்னை தலைவனாக உயர்த்திக்கொள்ள விரும்பும் அனைவருமே இது போன்ற பேச்சுத்திறனை வளர்த்துக் கொண்டால் ஒரு சாதாரண அணி அமர்விலோ அல்லது குழு சந்திப்பிலோ உங்கள் ஆளுமை நிறைந்த பேச்சு உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் கருவியாக அமையும். உங்களுக்குள் இருக்கும் தலைவனை உங்கள் பேச்சின் மூலம் வெளிக்கொண்டு வந்தால் நீங்கள்தான் நாளைய தலைமுறைக்கு உதாரணமாக இருப்பீர்கள்.

-ச.ஸ்ரீராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close