Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கட்டிக்கோ ஒட்டிக்கோ...!- சிறுவர்களின் வேட்டி மோகம்!

ஃபாரி, பெல்ஸ், பைஜாமா என்கிற ஜிப்பா மாடல் ஆடைகள், நேரோ, ஜீன்ஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழர் மரபாக, 'கல்யாண மாப்பிள்ளை 'வேட்டி' க்கு தான் என்றும் மவுசு.

அந்தவகையில் புத்தாண்டு, பிறந்தநாள், பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட முக்கியமான கொண்டாட்டங்களில் இப்போது கட்டாயம் இடம் பிடித்திருப்பது, "கட்டிக்கோ, ஒட்டிக்கோ" வேட்டிகள்தான். சென்னையின் பிரபல வேட்டி விற்பனைக் கடைகளில் பொங்கலுக்கு முந்தைய ஓரிரு நாட்களில் மட்டுமே பல லட்சக்கணக்கில் வேட்டிக்கான வியாபாரம் நடந்திருக்கிறது.

விற்பனை ஏரியாக்கள்

எம்.சி.ரோடு, ராயபுரம் சுழல் மெத்தை, புரசைவாக்கம், தி.நகர் பஜார்களில் அதிகம் விற்ற ஆடைகளில் சிறுவர் வேட்டி, முதல் ஐந்து இடத்தில் இருந்துள்ளது.

விளம்பர உத்திகள்

வேட்டிகளை தயாரிக்கும் பிரபல கம்பெனிகள், 'எங்கள் வேட்டிகளைக் கட்டினால், ஆண்மை மிளிரும், தமிழர் பெருமை உயரும்' என்றெல்லாம் சினிமா நடிகர்களை வைத்து கோடி கோடியாய் செலவிட்டு விளம்பரங்கள் செய்வது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. சபாரி, பெல்ஸ், பைஜாமா என்கிற ஜிப்பா மாடல் ஆடைகள், நேரோ, ஜீன்ஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழர் மரபாக, 'கல்யாண மாப்பிள்ளை 'வேட்டி' யை  உடுத்திக்கொள்வதைக் காண முடியும்.

வேட்டியின் வேறு பெயர்கள்

தமிழர்கள் பெருமிதமாக உடுத்தும்  வேட்டிக்கு சம்ஸ்க்ருத மொழியில் தவுத்தா என்று பெயர். குஜராத்தில் தோத்தியு, ஒரிய மொழியில் தோத்தி, வங்காளத்தில் தூட்டி, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாபி மொழியில் லாச்சா, உ.பி, பீகார்மாநிலங்களில் மந்தாணி, கன்னட மொழியில் கச்சே-பான்ச்சே, அசாமியில் சூர்யா, தமிழகத்தில் வேட்டி, வேஷ்டி.

ஐ.ஏ.எஸ். சகாயம் காட்டிய வழி

கோ-ஆப்டெக்ஸ் இயக்குநராக சகாயம் ஐ.ஏ.எஸ் இருந்தபோதுதான், "பொங்கல் திருநாளை நினைவுபடுத்தும் விதமாகவும், பண்பாட்டை போற்றும் விதமாகவும் அன்றைய தினத்தை 'வேட்டி உடுத்தும்' நாளாக கடை பிடிக்கலாமே என்று முதல் குரல் (வேண்டுகோள்) கொடுத்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் வேட்டிக்கு தமிழர்கள் மத்தியில்  வரவேற்பு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

'கிளப்' தடை உடைத்த வேட்டி

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் மரபான வேட்டியை அணிந்து கொண்டு நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடுத்து அந்த உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது. கடைசியில், 'வேட்டிக்கு தடை' போடும் கிளப், ஓட்டல்கள் உரிமம் ரத்து என்று சட்டம் போட்டு தமிழர் வேட்டியை காப்பாற்றிக் கொடுத்தது அரசு .

உளவியல் நிபுணர் அபிலாஷா என்ன சொல்கிறார்?

பிரபல உளவியல் நிபுணர் அபிலாஷாவிடம் வேட்டிக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து கேட்டபோது, "சிறுவர்கள் வேட்டி அணிவது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அவர்களின் எண்ணங்களில் கண் முன்னே தெரிகிற நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், உதயநிதி போன்ற இளையவர்கள் வேட்டியுடன் வந்து ஜொலிப்பதும் ஒரு காரணம். அதேபோல அப்பா, மாமா என்று கண்ணெதிரே இருக்கிற உறவு முறைகள் வேட்டியோடு இருப்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள், நாமும் அவர்களைப்போல பெரியவர்கள்தான் என்ற சின்னச் சின்ன ஆசைகள் சிறகடிக்கும் வயதும் ஒரு காரணம். மற்றபடி உளவியல் ரீதியாக பெரிய பிரச்னை எதுவும் இதில் இல்லை.

சினிமா, தொலைக்காட்சி போன்றவைகளில் அடிக்கடி வேட்டி அணிந்து வந்து போகும் பிரபலங்களும் அவர்களின் மனதில் நுழைந்திருக்க வாய்ப்பு அதிகம். மொத்தத்தில்  இது ஒரு கலாச்சார மீட்டெடுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். எப்படிப் பார்த்தாலும் சிறுவர்கள் வேட்டிக்கு மாறியிருப்பதை நாம் ஆர்ப்பரித்து வரவேற்க வேண்டியவர்களே " என்கிறார் உற்சாகமாக...

வேட்டி வாண்டுகள் சொல்வது என்ன?

மல்லு வேட்டி, பட்டு வேட்டி என்று பல ரகங்கள் மாப்பிள்ளை 'முறுக்கு' டன் அந்த ஒருநாள் மட்டும் ஜொலிக்கும். இப்போது அதே ஸ்டைலில் சிறுவர்கள், குறிப்பாய் பள்ளி மாணவர்கள் இறங்கியுள்ளனர். இது என்ன கலாட்டா ? என 'வாண்டு' களிடமே பேச்சுக் கொடுத்தோம்.

"எல்லாப் பசங்களும் பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு 'டாடி' மாதிரி வேட்டி கட்டிக்கணும்னு ஆசைப்பட்டோம். வீட்டில் இதை சொன்னால் கிண்டல் செய்வாங்களோன்னு நினைச்சோம்...ஆனால், வீட்டில் பேரன்ட்ஸ் இதை ஜாலியா எடுத்துக்கிட்டாங்க.

வழக்கமா, ஃபெஸ்டிவல்களில் பேன்ட்-சர்ட்ஸ் இரண்டு 'செட்' டை  கலர், கலரா எடுத்துப்போம், இல்லையா..? அதை இந்த முறை ஒரு 'செட்'டுன்னு மாத்திக்கிட்டு, வேட்டி, மேட்சிங் சர்ட்டுன்னு எடுத்துக்கிட்டோம்..." என்கின்றனர் கூலாக.

"ஆமாம், வேட்டியை, உங்களுக்கு யார் கட்டி விட்டாங்க?" என்றதும், "அதெல்லாம் யாரும் கட்டணும்னு அவசியமே கிடையாது. இடுப்பில் வேட்டியை அப்படியே சுத்திக்கிட்டு வேண்டும் அளவுக்கு டைட் பண்ணி  அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் எலாஸ்டிக் 'ஸ்பான்ச்' சில் ஒட்டி விட வேண்டியதுதான். வேட்டி அவிழவே செய்யாது. அது மட்டுமில்லே, இரண்டு பக்கமும் சைடு பாக்கெட்டை கொடுத்திருக்காங்களா, அதனால பேன்ட் போட்ட மாதிரிதான் இதுவும் இருக்கும். நடக்கும் போது, சர், சர்... னு வர்ற சத்தத்தை கேட்டு டாடி தான் வர்றாருன்னு அம்மா, எட்டிப் பாக்கறாங்க, ஜாலியா இருக்கு" என்கின்றனர்...

வாண்டுங்களா... இது வேறயா ?


- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close