Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைந்த விலையில் ரோபோட்டிக் செயற்கை கை: தமிழனின் அசத்தல் சாதனை!

னித உடலில் ஏற்படும் எத்தனையோ, குறைபாடுகளுக்கும், நோய்களுக்கும் தீர்வாக இருப்பது மருத்துவத்துறையின் முன்னேற்றமும், அறிவியலின் வளர்ச்சியும்தான். இரண்டும் பெரிதும் வளர்ந்துவிட்ட, இந்த 20 ம் நூற்றாண்டிலும் கூட, இவை எல்லோரையும் சென்றடைவதில்லை. அதற்கு முக்கியக்காரணமாக இருப்பது, பணம்.

இதனால் பல உயர் சிகிச்சைகளும், கருவிகளும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. குறிப்பாக விபத்தில் கை, கால்களை இழந்தவர்கள் நம்பியிருப்பது செயற்கை உறுப்புகளைத்தான். செயற்கை கை, செயற்கை கால் போன்றவைதான் இவர்களுக்கான விலை குறைந்த தீர்வு. செயற்கை கை பொருத்துபவர்களால் அதனை இயக்க முடியாது. அழகுக்காக மட்டுமே அந்தப்பகுதி இருக்கும். இயங்கும் தன்மையுடைய செயற்கை கைகளைப்பொருத்த வேண்டுமானால் அதன் விலை மிக அதிகம்.

இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு, மிக விலை குறைவான, இயங்கும் செயற்கை கை ஒன்றை வடிவமைத்திருக்கிறார் கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் ஆண்டனி எடிசன்.

“ தஞ்சாவூர்தான் என் சொந்த ஊர். சிறிய வயதில் இருந்தே, ரோபோட்டிக்ஸ் மீது மிகுந்த ஆர்வம்  உண்டு. அதனால்தான் பொறியியலில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவை எடுத்தேன். ஒருமுறை கோவாவிற்கு ஒரு அறிவியல் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அப்போது இது போன்ற செயற்கை கை ஒன்று ஜெர்மனி விஞ்ஞானி ஒருவரால் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதைப்பார்த்து ஆர்வத்துடன் சென்று விசாரித்தேன். “அதன் விலை 35,000 முதல் 50,000 வரை ஆகும்” எனக்கூறினார். அது நமது நாட்டிற்கு ஒத்துவராது என்பதால், இந்த விஷயத்தையே ஏன் குறைந்த விலையில் செய்யக்கூடாது என யோசித்தேன்.

தற்போது வெளிநாடுகளில் ரோபோட்டிக்ஸ் மூலம், மனிதனின் உணர்வை உணர்ந்து செயல்படும் செயற்கை கைகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் விலை 20 லட்சத்திற்கும் மேல் இருக்கிறது. விலைகுறைவாக ,நம் நாட்டில் இருக்கும் செயற்கை கைகள் அழகுக்காக இருக்குமே, தவிர அவற்றைப்  பயன்படுத்த முடியாது. இந்த இரண்டையும் மனதில் வைத்துத்தான் என்னுடைய வேலைய தொடங்கினேன்” என நிறுத்திய ஆண்டனி இதனை கண்டுபிடித்த கதையைக் கூறுகிறார்.

“ முழங்கைக்கும் கீழே, இருக்கும் பாகங்களை இழந்தவர்கள்தான் இந்த கைகளைப் பொருத்திக்கொள்ள  முடியும். இதற்கு முன்பு, இது போன்ற கைகளில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை எல்லாம் தேடித்தேடி படித்தேன். ஆனால் எதுவுமே நம் நாட்டில் கிடைக்காது. பாகங்கள் எல்லாமே, வெளிநாட்டு பாகங்கள்தான் கிடைத்தன. அதைப்பயன்படுத்தினால் மீண்டும் விலை ஏறி விடும். நோக்கம் நிறைவேறாது என்பதால், நம் நாட்டில் கிடைக்கும் ஃபோம் ஷீட், மோட்டார், சென்சார்கள் போன்றவற்றை வைத்தே தயாரிக்க முடிவு செய்தேன்.

செயற்கை கைகளை பொருத்துபவர்களுக்கு தேவைப்படும் அடிப்படையான செயல்பாடு ஒரு பொருளைப்பிடித்து எடுத்து, இன்னொரு இடத்தில் வைப்பதாகத்தான் இருக்கும். இதன் மூலமே நிறைய சின்ன சின்ன வேலைகளை அவர்களால் செய்ய முடியும். கையைக்கட்டுப்படுத்த குரல் மூலம் சமிக்கைகள் கொடுக்கலாம். இது பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் ஒரு முறை. இது இல்லாமல் வேறு முறையில் செய்யலாம் என நினைத்து கண் அசைவுகள் மூலம், கையைக் கட்டுபடுத்தும் முறையைத்தேர்ந்தேடுத்தேன்.

இந்த கையை இயக்குவதற்கு பிரத்யேகக் கண்ணாடி ஒன்றை அணிந்து கொள்ள வேண்டும். அவர்களின் இடது கண்ணின் அசைவுகளை வைத்து கை இயங்கும். இந்தக்  கையின் மொத்த எடை 700 கிராம்கள்தான் என்பது இன்னொரு சிறப்பு. இதில் A,B,C என மூன்று மாடல்கள் இருக்கின்றன. பயன்பாட்டையும், விலையையும் பொருத்து இப்படி பிரித்திருக்கிறேன். ” என்றவர் அதன் செயல்பாட்டை விளக்குகிறார்.

“ இந்தக் கண்ணாடியில் இருக்கும் சென்சார் ஆனது இடது கண்ணைக் கண்காணித்துக் கொண்டு இருக்கும். நாம்  கையை இயக்க வேண்டுமானால், நமது கண்ணை மூன்று நொடிகள் மூடினால் போதும், கையானது பொருளைப் பிடித்துக் கொள்ளும்.

அதனை அப்படியே எடுத்து இன்னொரு இடத்தில் வைத்து, கையை விடுவிக்க மீண்டும் மூன்று நொடிகள் கண்ணை மூட வேண்டும். கையை ரீ-சார்ஜபிள் பேட்டரி மூலம் இயக்குகிறோம். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், ஒருவாரத்திற்கு பயன்படுத்தலாம். கண்ணாடியின் பேட்டரியை தினமும் சார்ஜ் செய்ய வேண்டும்.

தற்போது இதனை கைகளாலேயே செய்திருக்கிறேன். எனவே உள்ளே இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்கியூட்கள் , பாகங்கள் எல்லாம் கைகளாலேயே இணைக்கப்பட்டுள்ளது. இதனை பெரிய அளவில் தயாரிக்கும் போது, இன்னும் எளிமையான அமைப்பில் , அழகாக செய்யலாம். இப்போது இந்தக்  கையைத்  தயாரிக்க 12 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. இன்னும் இதனை மேம்படுத்தி 7000 ரூபாயில் இதனைத் தயாரிக்கத்திட்டமிட்டிருக்கிறேன்.  இதன் மூலம் மிகவும் விலைகுறைவான செயற்கை கையாக இது இருக்கும்.

இதைத் தயாரித்ததும், மும்பையில் நடந்தக்  கல்லூரி கண்காட்சி ஒன்றில் காட்சிக்கு வைத்தேன். மூன்று நாட்கள் நடந்த அந்தக் கண்காட்சியில் முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் செலவு 10 ஆயிரத்துக்கும் கீழ்தான் என்பதை பலரால் நம்பவே முடியவில்லை. மும்பை உள்ளூர் பத்திரிக்கைகள் எல்லாம் வியப்புடன் இதைப் பற்றி விசாரித்து செய்திகள் வெளியிட்டன.

அதனைப்பார்த்து இரண்டாம் நாள் இன்னும் நிறைய பேர் விசாரித்தனர். பின்னர் சில நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு தங்களுக்கும் இதே போல செய்து தரமுடியுமா என்றும் கேட்டனர்.எப்படி செயல்படுகிறது என்றெல்லாம் விசாரித்தன. அந்தக்  கண்காட்சியில் எனது கண்டுபிடிப்பு இரண்டாம் பரிசு வென்றது. தற்போது இதற்கு காப்புரிமை வாங்கவேண்டும் என்பதுதான் எனது முதல் நோக்கம். அதற்கு விண்ணப்பிக்க ஆகும் செலவுக்காக , பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். பணம் சேர்ந்தவுடன் காப்புரிமைக்கு விண்ணப்பித்து விடுவேன். இதனை இன்னும் மேம்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை. அடுத்து ரோபோட்டிக்ஸ் பிரிவில் வெளிநாடுகளில் உயர்படிப்புப் படிக்க வேண்டும் என்பதுதான் எதிர்காலத்திட்டம்” என்கிறார் ஆண்டனி எடிசன்.

வாழ்த்துக்கள் எடிசன்!

- ஞா.சுதாகர்

படங்கள் : மு.குகன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close