Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஷ்வந்த் சிங்... அவர் அப்படி தான்!

குஷ்வந்த சிங், வயதில் முதுமையை கூட்டிக்கொண்டு எழுத்தில் இறுதிவரை இளமையை படரவிட்ட மாபெரும் எழுத்தாளர். இங்கு ஒரு எழுத்தாளனுக்கென்று ஒரு பிரத்யேக அடையாளம் இருக்கும் அல்லவா... அவர் நகைச்சுவையாக எழுதுவார், இவருக்கு அரசியல் கட்டுரைகள் எழுத நன்கு வரும், அதிதீவிர எழுத்துகளுக்கு அவர் சொந்தக்காரர் என இங்கு ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துநடையும் அது சார்ந்த அடையாளமும் இருக்கும்.

ஆனால், இவருக்கு அப்படிப்பட்ட எந்த அடையாளும் இருந்ததில்லை. ஒரு நாள் தீவிரமாக நெருக்கடி நிலையை ஆதரித்து எழுதுவார், மறுநாள் முத்தத்தை பற்றி எழுதுவார், மற்றொரு நாள் குளித்தல் ஆன்மாவை குளிர்விக்கிறது என்று அடர்த்தியாக ஒரு கட்டுரை எழுதுவார். ஆம். குஷ்வந்த் சிங் அப்படி தான். இவரின் எழுத்துகள் நிர்வாணமானது, எந்த ஒரு அரிதாரமும் பூசாமல், மனதிலிருந்து பேசக்கூடிய இவரது எழுத்துகள், வாசகர்களுக்கு நெருக்கமானது.

பிரிவினை துவங்கி இந்தியாவின் அனைத்து முக்கிய நிகழ்விற்கும் சாட்சியாக இருந்தவர் குஷ்வந்த். அவரே பிரிவினையால் பாதிக்கப்பட்டவரும் கூட. வழக்கறிஞராக தன் வாழக்கையை இன்றைய பாகிஸ்தானில் துவங்கி, பிரிவினைக்கு பின் கனடா, லண்டனில் இந்தியாவின் உயர் தூதர அதிகாரியாக பெரும் பொறுப்பிலிருந்து, பின்பு ஆல் இந்திய ரேடியோவில் பத்திரிக்கையாளனாக பணியில் சேர்ந்து என இவரது எழுத்துகளை போல இவர் வாழ்க்கையும் சுவாரஸ்யமானது.

என் நடுத்தர வயது வட இந்திய நண்பர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன், இவர் ஆசிரியராக இருந்த Illustrated weekly இல் இவரது எழுத்துகளை படிக்க, மொத்த குடும்பமும் காத்து இருக்குமாம். ஆம். அறுபதாயிரம் பிரதிகள் மட்டுமே விற்ற அந்த பத்திரிக்கை, இவரது வருகைக்கு பின்பே நான்கு இலட்சப் பிரதிகளை தாண்டியது.

இவரது எழுத்தாளுமையை முழுவதுமாக உணர வேண்டுமானால் 'Train to Pakistan' படியுங்கள். இந்திய பிரிவனையை ரத்தமும் சதையுமாக எழுதி இருப்பார். நிறுவனமயப்பட்ட மதங்களை எதிர்த்தார். சொர்க்கம், நரகம் வெறும் புனைவு என்றார். மனிதர்களின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கும் தட்டை பார்வை இவருடையதல்ல, மனிதர்களை அனைத்து பரிமாணங்களிலும் பார்த்து புரிந்து கொண்டு எழுதியவர். இவரது எழுதுக்களில், காந்தி, ஜின்னா, அத்வானி வேறு வடிவத்தில் நமக்கு தெரிவார்கள்.

யாரும் எதிர்பாராத வண்ணம், இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலையை ஆதரித்தார். அப்போது அவசர நிலைக்கு எதிராக தீவிரமாக போராடி கொண்டிருந்த ஜெயபிரகாஷ் நாராயணனின் நிலைப்பாட்டை எதிர்த்து ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அவசர நிலை கொண்டுவரவில்லை என்றால் இந்தியா சிதைந்திருக்கும் என்றார். அதே நேரம், பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து, பத்திரிக்கைகளை தணிக்கை செய்ய கூடாது என்று தைரியமாக வாதிட்டார்.

தீவிர புத்தக வாசிப்பாளர், நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இது குறித்து அவரே கூறியது, நான் வாசிக்க விரும்புகிறேன். என் விழிகள் என்னை கைவிடும் வரை, அனைத்து விதமான புத்தகங்களையும் வாசிக்க விரும்புகிறேன். என் பேனா என் கைகளிலிருந்து சரியும் வரை எழுத விரும்புகிறேன். நான் தொடர்ந்து எழுத விரும்புகிறேன். ஆம். அப்படி தான் எழுதவும் செய்தார். இவர் எழுதுவதற்கு எந்த பெரிய விஷயமும் தேவைப்படவில்லை. இவர் எழுதிய பின் தானாக அந்த விஷயம் பெரிய விஷயமானது.

ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். எழுத்தில் மட்டுமல்ல, விருதுகளை திருப்பி தருவதிலும் இவரே முன்னோடி. 1974-ல் பத்ம பூஷண் விருது பெற்ற இவர், 1984ல் பொற்கோவில் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதை திருப்பி கொடுத்தார். மீண்டும் 2007ல் இந்திய அரசாங்க பத்ம விபூஷண் விருது அளித்தது. 

நாட்டின் அனைத்து முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தும், இவர் மிக எளிமையானவராகவே இருந்திருக்கிறார். இவரது எழுத்துகளை தொகுத்த ஊடகவியலாளர் ஷீலா ரெட்டி, “இவரது வீட்டில் இரவு ஏழு மணிக்கு நடக்கும் பார்ட்டி அவ்வளவு பிரபலம். அனைத்து முக்கிய தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், நடிகைகள் என பலரை காணலாம். ஆனால், அவர் அப்போதும் கரைப்படிந்த சல்வாரில் தான் இருப்பார்.”

ஆம், அவர் அப்படி தான்.

(பிப்ரவரி 2, குஷ்வந்த் சிங் பிறந்த நாள்)


- மு. நியாஸ் அகமது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close