Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடியரசு தலைவரின் விருந்தில் கலந்துகொண்ட தமிழக பெண்!

த்திய அரசின்,  'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்' எனும் திட்டத்தின் முதலாமாண்டு நிறைவு விழாவையொட்டி பல்வேறு துறைகளில், சமூகத்திற்காக, ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு, அதில் சாதித்தும் காட்டிய, நூறு பெண் சாதனையாளர்களுக்கு, குடியரசு தலைவர் ராஷ்ட்ரபதி பவனில் விருந்தளித்தார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால், இருநூறு பெண்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அவர்களில் நூறு பேர், முகநூல் வாயிலாக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த நூறு பெண்களில் எட்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர்தான் மரியஜீனா ஜான்சன்.

சென்னையில் உள்ள சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் இயக்குநரான இவர், 'கல்வி'  பிரிவுக்கான சாதனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐந்து அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அப்பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல் படுத்தியுள்ள மரியஜீனா, நலம்பாக்கம் எனும் கிராமத்தையும் தத்தெடுத்துள்ளார்.

அவரிடம் பேசினோம்.

"நூறு பேரில் நானும் ஒரு சாதனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அனைவருக்குமே இதுதான் தொடக்கப்புள்ளி. சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட, மிகப்பெரிய ஊக்கத்தை இந்த விருது எங்களுக்கு அளித்துள்ளது. 2008-ம் ஆண்டு, முதல் முறையாக, "வேர்ல்ட் விஷன் இந்தியா" எனும் நிறுவனத்தின் மூலமாக இருபது குழந்தைகளை தத்தெடுத்தேன்.

அன்று முதல், குழந்தைகள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல வகைகளில் உதவி வருகிறேன். எங்கள் பல்கலைகழகத்திலேயே, ராணுவ வீரர்களின் பிள்ளைகள், மலைவாழ் மாணவர்கள், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் என ஐநூறு பேருக்கு இலவசமாக கல்வி வழங்குகிறோம்.

மூன்றாண்டுகளுக்கு முன், 'வேர்ல்ட் விஷன் இந்தியா' நிறுவனத்தின், 'சப்போர்ட் மை ஸ்கூல்'  எனும் திட்டத்தின் கீழ், மூன்று அரசு பள்ளிகளை தத்தெடுத்தோம். அதன்பின் இரண்டு அரசு பள்ளிகளையும், நலம்பாக்கம் எனும் கிராமத்தையும் தத்தெடுத்தோம். இந்த ஐந்து பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் நேரில் சென்று பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகின்றனர். பயிற்சி வகுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

எங்களுடைய இந்த செயல்பாட்டினால், சென்னை மாநகராட்சி, இரண்டு சேரிகளை எங்களுக்கு ஒதுக்கி, அங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு, இரவு நேர பயிற்சி வகுப்புகள் எடுக்க வாய்ப்பும், இடமும் அளித்துள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும், 'என் சனிக்கிழமை பல்கலைக்கழகம்' எனும் திட்டத்தின் மூலமாக, பல்வேறு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, எங்கள் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவந்து கணினிப் பயிற்சி, திறன் வளர் பயிற்சி போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

அதுமட்டுமில்லாமல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பல கிராமங்களில், மகளிருக்கு கடற் பாசி வளர்ப்பது, காளான் வளர்ப்பது, சூரியசக்தி விளக்குகளை உருவாக்குவது போன்ற சுயதொழில் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறோம். எங்களுடைய அடுத்த இலக்கு, நாங்கள் தத்தெடுத்த நலம்பாக்கம் கிராமத்தை நோக்கிதான்.

கிராமத்தை தத்தெடுத்தவுடன், அப்பகுதி மக்கள் என்னிடம் வைத்த முதல் கோரிக்கை, 'விவசாயத்தை திரும்பக் கொண்டுவர வேண்டும்' என்பதுதான். தற்போது, எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள், அந்த கிராமத்திற்கு சென்று, இயற்க்கை விவசாயம் செய்வதிலும், பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு சாலைகள் அமைப்பதிலும் பிராஜக்ட் செய்து வருகின்றனர்.

இவ்விருதை பெற்ற பின், முதல் செயலாக 'ஹெச். ஐ. வி' யால் பாதிக்கப்பட்ட அறுபது குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு சுய தொழில் செய்வதற்கான பயிற்சியும் வழங்கி வருகிறோம். விருது வாங்கிய எங்கள் நூறு பேரைக் காட்டிலும் திறமை மிகுந்த பெண்கள் நம் கிராமங்களில் இருக்கின்றனர். ஆனால், அரசின் மகளிருக்கான திட்டங்களும், கடன் பெறும் வசதிகளும் அவர்களை சரியாக சென்றடைவதில்லை" என்றார் வருத்தத்துடன்.

தாம் தத்தெடுத்த ஐந்து பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதிகள், கணினி வசதிகள், மாணவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் இலவச உடல் பரிசோதனை போன்றவற்றை செயல்படுத்தியுள்ள மரியஜீனா, சுப தினங்களின் போது, அங்கு, போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் தம் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் நடத்தி வருகிறார்.

விருது பெற்ற நூறு பெண்களும் ஒரு வாட்ஸ் அப் குரூப்பினைத் தொடங்கி, தினமும், ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவிக்கொள்வது என்று கலந்து ஆலோசித்து வருவதாகவும், இது போன்ற விருதுகள், பெண்களை இந்த சமூக முன்னேற்றத்திற்காக உழைக்க ஓர் தூண்டு கோலாக அமையும் எனவும் நம்பிக்கையுடன் முடித்தார்.

-ஜெ. விக்னேஷ்
(மாணவ பத்திரிக்கையாளர்)     

எடிட்டர் சாய்ஸ்

MUST READ