Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்லூரியில் களை கட்டும் மாடித்தோட்டம்!

ஞ்சு இல்லாத இயற்கை உரங்கள் இடப்பட்டு  பயிரிடப்பட்ட காய்கறிகளை,  கல்லூரியில் மாடித்தோட்டம் அமைத்து எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார்.

இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில் சுமார் 2400 சதுர அடியில் 75க்கும் மேற்பட்ட செடிகளை மாடியில் தோட்டமாக பயிரிட்டுள்ளார்.

'ராகா பசுமை' மாடி தோட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இங்கு பல்வேறு விதமான காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு 'ராகா பசுமை' திட்டத்தின் கீழ் ஆர்வமுடன் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

”நான் பசுமை விகடனின் தீவிரமான வாசகன். எங்களுக்கு விவசாயக் குடும்ப பின்னணி இருந்தாலும், இயற்கை விவசாயம், மாடித்தோட்டம் இது பற்றிய விழிப்புணர்வு எல்லாம் பசுமை விகடன் மூலமாதான் தெரிய வந்தது. ’பசுமை ஒலி’ பகுதி எங்களைப் போல் விவசாய ஆர்வம் உள்ளவர்களுக்கு நிச்சயம் ஒரு பயனுள்ள பகுதி” என்றார் விஜயகுமார்.


மாடித்தோட்டம் குறித்த நன்மைகளுடன் மேலும் பேச ஆரம்பித்த அவர், “எந்த ஒரு விஷயத்தையும் தியரியாக செய்யாமல் நடைமுறைப்படுத்தும்போதுதான் அது இன்னும் ஆழமாக பதியும். அதுபோல மாடித்தோட்டமும். மாணவர்களுக்கு இது குறித்த புரிதல் வர வேண்டும் என்றால் அவர்களை நேரடியாக களத்தில் இறக்குவது தான் சரியானது. எனவேதான் எங்கள் கல்லூரி மாணவர்களை செடிகளை பராமரிப்பதில் ஈடுபடுத்தியுள்ளோம். தினசரி மாலை ஒரு மணி நேரம் நீர் விடுதல், களை சுத்தம் செய்தல் போன்றவற்றில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் ஆர்வமுடன் வருவார்கள்.

மாணவர்கள் எந்நேரமும் படித்துக் கொண்டே இருக்காமல் இது போன்ற செயல்களில் தங்கள் நேரத்தை செலவிடுவதால் அவர்களுக்கு நல்ல மாறுதல்  தெரியும்.இங்கு நாங்கள் கத்திரிக்காய், மிளகாய், வாழை, சோளம், கீரை வகைகள், புடலங்காய், பூசணி, பீர்க்கங்காய், பாகற்காய், காலிஃப்ளவர், கொத்தமல்லி, வேர்க்கடலை, ரோஜா செடி, தக்காளி, அலங்கார செடிகள், துளசி, கற்றாழை, பிரண்டை, பப்பாளி முதலான செடி, கொடி வகைகள் எல்லாவற்றையும் இங்கு பயிரிட்டுள்ளோம்” என்றார் ஆர்வமுடன்.  


பயன்கள் அதிகம்:

மேலும், “மாடித்தோட்டம் என்பது நம் அன்றாடம் செய்யும் காய்கறி செலவுகளை குறைக்க உதவும். நாம் மாடித்தோட்டம் அமைப்பதால் அதிலிருந்து வரும் காய்கறிகளை உபயோகிக்கலாம். அடுத்தவர்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நம் மேற்பார்வையிலே வளருவதால் தேவையில்லாத செயற்கை உரங்கள் இல்லாமல் இயற்கை உரங்கள் இட்டு பெறுவதால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.நம்மிடம் இருப்பதயே உபயோகிக்கலாம்:

மாடித்தோட்டம் அமைக்க பெரிய அளவில் செலவு செய்யலை. எங்ககிட்ட இருந்த பழைய பெயிண்ட் டப்பாக்களைத்தான் மாடித்தோட்டம் அமைக்க பயன்படுத்தினோம். செடிகளுக்கு தேவையான மண் வகைகள் எல்லாம் வெளியே வாங்கிக்கிட்டோம். அப்புறம் தோட்டத்திற்கு தேவையான நிழல் வலை,  மூங்கில் குச்சி எல்லாம் நாங்களே அமைச்சோம். தரையில் செடி வைக்கும் போது நாம நீர் விடும்போது கீழே போனாலும் அதை மண் ஈர்த்துக்கும். ஆனா தொட்டிச் செடிகளுக்கு நீர் விடும்போது அப்படி இல்லை. கீழே உபரி நீர் வழிந்தால் அதை சேகரம் செய்து மீண்டும் உபயோகிக்க ஒரு தட்டு வைத்துள்ளோம்.

அதே போல் மண்ணில் தேங்காய் நார் கலந்து போடுவோம். அப்போது தான் வேருக்கு ஏர் சர்குலேஷன் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் இங்கே வரும் காய்கறிகளை எங்களுக்குள்ளே பகிர்ந்துப்போம். அப்போதுதான் அவர்கள் மூலமாக விரைவில் பரவி, மற்றவர்களுக்கும் ஒரு ஆர்வம் பிறக்கும்” என்றார் மகிழ்ச்சியாக.

 


உரங்கள்:

இதைத் தொடர்ந்து செடிகளுக்குத் தேவையான உரங்கள் பற்றி கூறிய அவர், “இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செடிகளுக்குத் தேவையான சாணிக் கரைசலை தருவோம். பூச்சிவிரட்டிக்கு பால் உள்ள இலைகளை மாட்டு கோமியத்துடன் கலந்து செக்கில் இடித்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் நிழலில் வைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்ப்ரே கன்னில் வைத்து தெளிப்போம். இதுமட்டுமல்லாமல் பசுமாட்டுச்சாணம், நெய், பால், தயிர், மோர், வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி ஆகியவை கலந்த ஜீவாமிர்தம், மீன் அமிலம், பஞ்சகாவ்யம் ஆகியவற்றையும் வாரம் ஒரு சுழற்சியில் செடிகள் வாடும்போதும், அவை வளரும் பருவத்திலும் கொடுத்தால் நல்ல பலன் தரும்” என்றார்.

மாடித்தோட்டத்தில் செய்யக் கூடாத தவறுகள்:

புதிதாக மாடித்தோட்டம் போடுபவர்கள் ஆரம்பத்தில் சில தவறுகள் செய்வது உண்டு. அப்படி செய்யக் கூடாத தவறுகள் குறித்து கூறிய விஜயகுமார், “நாங்கள் புதிதாக மாடித்தோட்டம் போடும் போது நிழல் வலையை கவனத்தில் கொள்ளவே இல்லை. அதனால் அதிக சூரிய வெளிச்சம் மற்றும் தரை சூட்டினால் நிறைய செடிகள் கருகி போச்சு. அதே மாதிரி தேங்காய் நார் கலக்காமல் வெறும் மண் மட்டும் போட்டதினால் இறுகி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகள் வளரவே இல்லை. அதன் பிறகுதான் ஒரு பக்கெட் மண்ணுக்கு ஒரு பக்கெட் தேங்காய் நாரு என சரிவிகிதமாக கலந்து செடிகள் நட்டோம். அதன் பிறகு செடிகளின் தொட்டியைச் சுற்றி சிறு சிறு துளைகளும் இட்டு பராமரித்து வருகிறோம். எனவே இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார். 

ச. ஆனந்தப்பிரியா
படங்கள்: க. சத்தியமூர்த்தி

(மாணவப்பத்திரிக்கையாளர்கள்)

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close