Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆடுறாங்களாம்... ஓடுறாங்களாம்...கத்துறாங்களாம்... தனியார் கம்பெனியில் அலறல்!

ரே நேரத்தில் சுமார் 60 பேர் ஒரு கம்பெனிக்குள் பேய்பிடித்தது போன்று அலறிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருந்தால் எப்படி இருக்கும்? பணியாளர்களில் பலபேர் மயங்கி விழ, சிலர் அங்கும் இங்கும் ஓட, சத்தமிட்டு சிலர் கர்ஜிக்க,  செய்வது தெரியாமல் நடுக்கத்தில் உள்ளது குருவன்மேடு கிராமத்தில் உள்ள ஒரு கம்பெனி.

காஞ்சிபுரம் மாவட்டம், பாலூர் அடுத்த குருவன்மேடு கிராமத்தில் அமைந்துள்ளது மதர்சன் சுமி சிஸ்டம் பி.லிட் என்ற நிறுவனம். இங்கு ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு தேவைப்படும் உதிரிப்பாகமான கேபிள் தயாரித்து வருகின்றனர். குருவன்மேடு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் மலை மற்றும் வயல்வெளி பகுதியில் இந்த கம்பெனி இயங்கி வருகின்றது.

கம்பெனியை சுற்றி எந்த குடியிருப்பும் இல்லை. தெருவிளக்குகளும் கம்பெனிக்கு வரும் சாலைகளில் இல்லை. இருள் சூழ்ந்த இந்த கம்பெனியில்,  24 மணிநேரமும் 3 ஷிப்ட்டுகளாக, சுமார் 400 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

வழக்கம் போல இயங்கி வந்த இந்த கம்பெனியில், சுமார் 60 பேர் பேய் பிடித்ததை போன்று அலறுவதாகவும், அங்கும் இங்கும் ஓடுவதாகவும், பெண்களும் இதே நிலையில் இருப்பதாகவும் நமக்கு வந்த தகவலால் அங்கே நேரடியாக சென்று விசாரித்தோம்.

அப்பகுதியை சேர்ந்த பாலா என்பவர், “கடந்த ஆறு வருடமாக இந்த கம்பெனி செயல்பட்டு வருகின்றது. நேற்று மதியம் சில பணியாளர்கள் திடீரென சத்தம் போட்டுக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினார்கள். பெண் பணியாளர்களும் இதேபோல ஓடி மயங்கி விழுந்தனர். சுமார் 60 பேர் இது போன்று பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கூச்சலிட்டதால் வயல்வெளிகளில் வேலை செய்தவர்கள் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தார்கள். ஆனால், அவர்களை காவலாளிகள் கம்பெனிக்குள் நுழையவிடவில்லை.

மயங்கி விழுந்தவர்களை பேருந்தில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டார்கள். அன்று இரவே பாதிக்கப்பட்ட சிலரை கோவிலுக்கு கொண்டு சென்று கோழி அறுத்து பலியிட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், மறுபடியும் இன்றைக்கு வேலைக்கு வந்த சிலர் இதேபோல மயங்கி விழுந்திருக்கிறார்கள். கம்பெனிக்குள்ள என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருக்கின்றது. இதனால், கிராம மக்கள் அனைவரும் பயந்துபோய் உள்ளனர். இருட்டிய பின்னர்  தங்களது வீடுகளை விட்டு யாரும் வெளியே வருவது கிடையாது. வெளியே வேலைக்கு செல்பவர்களும் இந்த சம்பவத்துக்கு பின் ராத்திரி வீடு திரும்ப ரொம்பவே பயந்து போய் உள்ளனர்” என்றார் பதட்டமாக.

அந்தப்பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர் ஜெயா என்பவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டு அவரது வீட்டிற்கு சென்றோம்.

'நடந்ததை நான் சொல்றேங்க...!' என நம்மை பார்த்த உடன் எழுந்து வந்தார் ஜெயா. நம் கேமரா முன்பு வந்ததுமே, திடீரென பல்லை கடித்தபடி, மயங்கி விழுந்தார். மூச்சிரைக்க உறுமிக் கொண்டு பேசமுடியாமல் ஆக்ரோஷமாக அலறினார்.

தொடர்ந்து பேசிய அவரது உறவினர், ''நேற்று அலற ஆரம்பித்தவர், கம்பெனியை பற்றி பேசினாலே இதுபோல அடிக்கடி மயங்கி விழுகின்றார். கம்பெனியில பசங்க, பொண்ணுங்க எல்லாருமே சேர்ந்து ஆடினாங்க. இவங்களும் அப்போது மயங்கி விழுந்தாங்க. நாங்கதான் வீட்டிற்கு தூக்கிக் கொண்டு வந்தோம். ரெண்டு நாளா அவங்க இதே மாதிரி அடிக்கடி மயங்கி விழுந்திடறாங்க.

கம்பெனி இருக்கும் இடத்தில் எங்க ஊர் எல்லைச்சாமியான தடிகாரன் கோவில் இருக்கின்றது. நள்ளிரவில் ஊரை வலம் வந்து தடிகாரன் காத்துவந்தான். அந்த கோவிலை இடித்து இப்போது கம்பெனி கட்டிவிட்டார்கள். அங்கு நாங்கள் பாரம்பரியமாக வணங்கி வந்த பனைமரத்தையும் அவர்கள் வெட்டிவிட்டார்கள்.

இதனால், இந்த கம்பெனி ஆரம்பித்ததிலிருந்து தினமும் பூஜை செய்து வருகின்றார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகும் பூஜைகளையும், யாகங்களையும் கம்பெனிக்குள் நடத்தினார்கள். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி தடிகாரனுக்கு படைக்கப் போவதாக கம்பெனிகாரங்க சொல்றாங்க” என்றார் பீதியுடன்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பாக நம்மிடம் பேசிய சில ஊழியர்கள், ''இந்த பகுதியில் எல்லையை காக்கும் தடிகாரன் சாமிக்கு பூஜை செய்ய வேண்டும். அதனால்தான் இது போன்று நடக்கிறது. சில வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என தடிகாரன் சொன்னதாக கிராமத்தினர் சொன்னார்கள். நாங்களும் ஒப்புக்கொண்டுள்ளோம். வேறு எதுவும் கம்பெனியில் பிரச்னை இல்லை” என்கிறார்கள்.

அந்த பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளதால், பாலூர் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் விரைந்து வந்து அந்த கம்பெனியில் விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேலும், கம்பெனிக்கு ஆம்புலென்ஸ் அடிக்கடி வந்து போவதும் அப்பகுதி கிராம மக்களை அச்சுறுத்தி வருகின்றது. கம்பெனியும் வெளியாட்களை உள்ளே அனுமதிக்காததால், திக்.. திக்... என பதட்டமாகவே இருக்கின்றது குருவன்மேடு கிராமம்.

உண்மையை சொல்லி, கிராம மக்களின் பயத்தை அந்த கம்பெனியும், போலீசாரும்தான் போக்க வேண்டும்!

செய்தி படங்கள் : பா.ஜெயவேல்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close