Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க வாட்ஸ் அப்பை விரட்டி மிரட்டும் இந்திய ஹைக்!

லக அளவில் வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை 100 கோடியைத்தாண்டி விட்டதாக நேற்று அறிவித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

2010 ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட வாட்ஸ் அப்,  இன்றைய ஆன்ட்ராய்ட் உலகில் தவிர்க்க முடியாததாகி விட்டது. இப்படி இன்றைக்கு நாம் இணையத்தில் பயன்படுத்தும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எல்லாமே வெளிநாட்டு நிறுவனங்களே. இந்தியாவின் மிகப்பெரிய இணைய சந்தையை இந்த நிறுவனங்களே இதுவரைக்கும் பயன்படுத்தி வருகின்றன.

தற்போது முதல்முறையாக ‘மேட் இன் இந்தியா’ என்னும் பெருமையோடு  வெற்றி பெற்றிருக்கிறது ஹைக் நிறுவனம். 2012 ல் தொடங்கப்பட்ட ஹைக்கின் பயனாளர்கள் எண்ணிக்கை சமீபத்தில் 10 கோடியைத் தாண்டி விட்டது. வாட்ஸ் அப் போலவே இளைஞர்களிடம், தற்போது மிகவும் பிரபலமாகி வரும், இந்த ஹைக்கின் நிறுவனர் 27 வயதே ஆன, கவின் பார்தி மிட்டல்.

யார் இந்த கவின்?

 இந்தியாவின் புகழ்பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டலின் மகன்தான் இந்த கவின் மிட்டல்.

தனது தந்தையிடம் இருந்து, 20,000 ரூபாயை மட்டும்,  முதலீடாக வாங்கிக்கொண்டு போய் தொழில் தொடங்கிய சுனில் மிட்டல் நிறுவியதுதான் தற்போதைய ஏர்டெல் நிறுவனம்.

அவரைப்போலவே கவினுக்கும் சுயதொழிலில்தான் ஆர்வம். 2009 ல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் மின்னியல் பிரிவில் உயர் படிப்பை முடித்த கவின், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையுடன் இந்தியாவிற்கு திரும்பினார்.

முதலில் 2009 ல் திரைப்படங்களுக்கு மொபைலில் புக் செய்ய , ஆப்பிள் ஸ்டோரில் ‘ஆப்ஸ்பார்க்’ என்னும் அப்ளிகேஷனை உருவாக்கினார். அந்த அப்ளிகேஷனுக்கு கிடைத்த வரவேற்பு, உற்சாகம் தர அடுத்த முயற்சியாக தொடங்கியதுதான் ஹைக் மெசெஞ்சர்.

எப்படித் தோன்றியது இந்த ஹைக் ?
 

2010 ல் வெளியான வாட்ஸ் அப்,  இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் பிரபலமாகிக் கொண்டிருந்தது.  விசாட், ஃபேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸ் அப், லைன்  என அடுத்தடுத்து மெசேஜிங் அப்ளிகேஷன்கள் பெரும் வெற்றியடைந்து கொண்டிருந்தது. மொபைல் இன்டர்நெட் வளர்ந்துகொண்டிருந்த அந்த நேரத்தில், இந்தியாவுக்கென பிரத்யேகமாக ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன் வேண்டுமே? என யோசித்ததில் உருவானதுதான் ஹைக்.

2012 டிசம்பர் 12 ல் முதன்முதலில் ஹைக் வெளியானது. இதற்கான முதலீடுகளை ஏர்டெல் மற்றும் ஜப்பானிய தொலைத் தொடர்பு நிறுவனமான சாஃட் பேங்க் ஆகிய இருவரிடம் இருந்து பெற்றார். ஆரம்பத்தில் நிறைய எதிர்பார்ப்பு இருந்தாலும், அந்த அளவு வெற்றிபெற்று விடவில்லை ஹைக். இரண்டு வருடத்தில் 35  மில்லியன் பயனாளர்கள் மட்டுமே கிடைத்தார்கள்.

ஆனால் அதற்குள்ளாக வாட்ஸ் அப் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி, வலுவாக காலூன்றிவிட்டது. வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மாற்றாக உருவாவது கடினம். அதே சமயம் வாட்ஸ் அப் இருக்கும் ஒரே மொபைலில் ஹைக்கையும் இன்ஸ்டால் செய்ய வைப்பது எளிது என முடிவு செய்தார் கவின். இந்தியாவின் நிறுவனம் எனப் பெருமையாக சொல்லிக்கொள்வது போல, இந்தியாவின் நேட்டிவிட்டிக்கு ஏற்ப, தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என வழக்கமான பாதையை மாற்றினார்.

ஸ்டிக்கருக்கு இவர்தான் முன்னோடி

ஹைக் பயனாளர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன்கள், இந்திய மொழிகளில் 9 மொழிகளை பயன்படுத்தும் வசதி, 100 MB வரை எல்லா வகையான கோப்புகளையும் பரிமாறிக்கொள்ளும் வசதி, லைவ் ஸ்கோர் பார்க்கும் வசதி, செய்திகள் பார்ப்பது  என அடுத்தடுத்து அப்டேட் ஆக, பயனாளர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.

வாட்ஸ்அப்பில் எப்படி எமோஜிக்கள் ஹிட் அடித்ததோ, அதைப்போலவே ஹைக்கிற்கு சூப்பர்ஹிட் ஸ்டிக்கர்கள். இதுவரைக்கும் சிரிப்பது, அழுவது என ஸ்மைலி போட்டுக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் இந்த ஸ்டிக்கர்கள்,  ஹைக் பக்கம் ஈர்த்தன. கோலிவுட், பாலிவுட் பன்ச் டயலாக்குகள், வடிவேலு, சந்தானம் போன்றவர்களின் ரியாக்ஷன்கள் , ஆஹான் போன்ற ட்ரெண்டியான வசனங்கள் என அதகளம் செய்தது ஹைக். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்த தற்போது 100 மில்லியன் என்ற மைல்கல்லைத் தொட்டிருக்கிறது ஹைக்.

“ஐபோன் முதன்முதலில் வெளிவந்த சமயம் இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. போன் வாங்கியவுடன் நண்பர்கள் பலரும் ‘Movies Now’செயலியை பதிவிறக்கம் செய்தார்கள். லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பயன்படுத்தினர். அப்போதுதான் இது போன்ற அப்ளிகேஷன்கள் வளர்ந்துவந்தன.

அவை எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்த்தேன். மொபைல் இன்டர்நெட் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் என நம்பினேன். அப்போதே ஹைக்கை உருவாக்க சிந்தனை வந்துவிட்டது. சுயதொழில் தொடங்க நிறையபேர்,  நிறைய யோசனைகளோடு வருகிறார்கள்.ஆனால் சில நாட்களில் காணாமல் போய்விடுகின்றனர். அதற்கு காரணம் விடாமுயற்சி இல்லாததுதான்.

ஹைக் நிறுவனத்திற்கு ஆரம்பத்தில் முதலீடு திரட்ட நிறைய சிரமப்பட்டேன். நிறுவனத்தை மூடிவிடலாமா என்று கூட யோசித்தேன். ஹைக்கில் முதலீடு செய்யவே பலரும் தயங்கினர். ஆனால் அதையெல்லாம் தாண்டிதான் தொழிலதிபராக ஆக முடியும்.

அப்படித்தான் நான் கடந்து வந்தேன். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் வளர்ச்சியையும் ,கற்றுகொள்ளும் திறமையையும் பொறுத்தது. எனவே என்னை தினமும் அப்டேட் செய்துகொண்டே இருக்கிறேன்.

ஹைக்கிற்கு போட்டியாக நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அவை எப்படி செயல்படுகிறது என்பதைப்பொறுத்தே எங்கள் வளர்ச்சி இருக்கிறது. இந்தியா போன்ற தனித்துவமான நாட்டிற்காக நாங்கள், புதிய விஷயங்களை ஹைக்கில் சேர்க்கிறோம். தற்போது ஹைக் பயன்படுத்துபவர்களில் 90 % பேர் 25 வயதுக்கும் குறைவானவர்களே ! இந்தியாவில் பல கோடி பேர், இணையத்திற்கு முதன்முறையாக வருகின்றனர். அவர்கள் இன்னும் 2G வசதிதான் பயன்படுத்துகின்றனர். மெமரி குறைவான ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர். இப்படி எல்லா தரப்பையும் மனதில் வைத்தே நாங்கள் ஹைக்கை வடிவமைக்கிறோம்.

என்னைப்பொறுத்தவரை இந்தியாவில் இரண்டே இரண்டு மெசேஜிங் அப்ளிகேஷன்கள் மட்டுமே நிலைத்து நிற்கும். முதலாவது எளிமையாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் செயலியாக  இருக்கும். அது வாட்ஸ்அப். இரண்டாவது மேம்பட்ட வசதிகளுடன் கூடிய, முழுமையான தகவல்தொடர்பு செயலியாக இருக்கும். அது ஹைக்” என்கிறார் கவின்.

இந்திய சந்தைக்கு என எடுத்துக் கொண்டால், ஹைக்கிற்கு பலம், பலவீனம் இரண்டுமே வாட்ஸ் அப்தான். மிகப்பெரிய நிறுவனமாக இருப்பதால், நிறைய முதலீடுகள், வருங்கால திட்டங்கள் வாட்ஸ் அப் வசம் இருப்பது  பலவீனம். ஒரே ஒரு புதிய எமோஜியை  தனியாக சேர்க்க வேண்டுமென்றாலோ, நீக்க வேண்டுமென்றாலோ கூட, அதை வாட்ஸ் அப் உலக அளவில் மாற்ற வேண்டும். ஆனால் இந்தியாவின் நாடித் துடிப்பிற்கு ஏற்ப மாற்றங்களை செய்துகொண்டே இருக்க ஹைக்கினால் முடியும் என்பது பலம்.

கவினின் கனவுகள் நனவாகட்டும் !

- ஞா.சுதாகர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close