Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனிக்கும் சாக்லேட்டின் கசப்பான பின்னணி! - காதலர்களின் கவனத்துக்கு....

காதலர் தினம் வருகிறது. 'சாக்லேட் பாய்', 'ஸ்வீட் ஹார்ட்', 'ஹனி பேபி', 'ஹாய் ஸ்வீட்டி' என நிச்சயம் இப்படியான இனிப்பு வார்த்தைகள் இல்லாமலோ, இனிப்பு இல்லாமலோ...காதலர் தினம் முடிந்துவிடாது. இதோ... முதல் வரியைக் கடந்த உடனேயே காதலி/காதலனுக்கு பரிசுப் பொருளோடு என்ன சாக்லேட் வாங்கித்தரலாம்? என எத்தனிக்கும் உங்களுக்கு சாக்லேட்டின் மறுபக்கத்தைக் கொஞ்சம் புரட்டிக்காட்டலாம்...

சில்லறைக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் சாக்லேட்டுகளுக்கும் சரி, குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்ட காஸ்ட்லி சாக்லேட்டுகளுக்கும் சரி. 'கொக்கோ' மரத்தின் விதைகள்தான் மூலப்பொருள். மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கோட் டிவார் (ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது) நாட்டில், 'கொக்கோ' மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இங்கிருந்துதான் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு கொக்கோ ஏற்றுமதி ஆகிறது. விஷயம் அதுவல்ல... குழந்தைகளின் ஆல்டைம் ஃபேவரைட்டான சாக்லேட் தயாரிப்பின் பின்னணியில் இருப்பது ஆப்பிரிக்காவின் ஏழைக் குழந்தைகள்!

'கொக்கோ'வை உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்யும் இந்த ஐவரி கோஸ்ட் நாடானது, உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று என்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணம். இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்ட மற்ற நாடுகள், ஐவரி கோஸ்ட்டில் இருக்கும் 'கொக்கோ' தோட்டங்களில் சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தி, லாபநோக்கத்தோடு செயல்படத் தொடங்கியது. அதுவும் கட்டாயப்படுத்தி, கடத்தி, அடிமைகளாக நடத்தப்படும் ஆப்பிரிக்க நாடுகளின் ஏழைக் குழந்தைகள்தான் 'கொக்கோ' மரத்தில் இருந்து சாக்லேட் தயாரிப்பிற்குத் தேவையான கொட்டைகளைப் பிரித்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு, சாக்லேட் தயாரிப்பின் பின்னணியை பத்திரிக்கையாளர் ஒருவருடைய உதவியோடு, 'தி டார்க் நைட் ஆஃப் சாக்லேட்' என்ற தங்களது ஆவணப்படத்தில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள் மிக்கி மிஸ்ராதி மற்றும் ராபர்டோ ரோமான் என்ற இருவர். 2012ல் இந்த ஆவணப்படம் வெளியானது. அரசியல், அதிகாரம், அடாவடி என, 'கொக்கோ' தோட்டங்களில் குழந்தைகள் மீது சுமத்தப்படும் பயங்கரத்தைப் பார்த்தால், நம்ம ஊர் 'பரதேசி' படம் ஞாபகத்திற்கு வரலாம்.

உலக மக்களிடம் 'சாக்லேட்' பரவலான காலம்தொட்டே தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்னையை, 2000-ம் ஆண்டில் பிபிசி நிறுவனம் தனது ஆவணப்படத்தில் பதிவு செய்தது. கூடவே, ஏறத்தாழ 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொக்கோ தோட்டங்களில் இருப்பதாக ஐவரி கோஸ்ட் நாட்டைத் தாண்டியும் எழுந்தது குரல்கள். விஷயம் வெளியே தெரிந்த பிறகு, சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் 2008-ம் ஆண்டுக்குள், 'கொக்கோ' தோட்டங்களில் இருந்து குழந்தைத் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்பிக்கை கொடுத்தது. ஆனால், குழந்தைகளைக் கடத்திக்கொண்டுவந்து வேலை வாங்குவது, கட்டாயப்படுத்துவது போன்ற விஷயங்கள் குறைந்தாலும், குழந்தைத் தொழிலாளர்கள் 'கொக்கோ' தோட்டங்களில் முற்றிலும் இருந்து விடுவிக்கப்படவில்லை! 

2009-ல் சுற்றுச் சூழலுக்காக உலகளவில் போராடும் 'ரெயின் ஃபாரஸ்ட் அலையன்ஸ்' என்ற என்.ஜி.ஓ நிறுவனம், 'கொக்கோ' தோட்டங்களில் இருக்கும் ஆப்பிரிக்க ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தீவிரமான முன்னெடுப்பை எடுக்கவே, வருகிற 2020க்குள் 'கொக்கோ தோட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையைக் கொண்டுவந்துவிடுவோம்!' என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள். இப்படி இன்னும் பல செய்திகளைச் சொல்வதுடன், சாக்லேட் தயாரிப்பில் இருக்கும் குழந்தைகளின் நிலைமையை, குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை மூடி மறைக்கும் சாக்லேட் தயாரிப்பாளர்களின் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் காட்டுகிறது இந்த ஆவணப்படம்.

நீங்கள், நான், தோழி, காதலி, நண்பன் என உங்கள் சுற்றம் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் ஒட்டுமொத்த மக்களும் ஆண்டுக்கு 30 லட்சம் டன் அளவுக்குச் சாக்லேட்டுகளைச் சுவைப்பதாகச் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு. குறிப்பாக, காதல் உணர்வு கொண்டவர்களுக்கு 'சாக்லேட்' ஒரு கிளர்ச்சியூட்டும் பொருளாகக் குறிப்பிடுவதாக உலவும் ஆதாரமற்ற வாதம், காதலன்/காதலிக்கு 'காதலர் தினம்' அன்று சாக்லேட் பரிசளிப்பதை மரபாக்கியிருக்கிறது!   

டிட்பிட்ஸ்: என்னதான் சாக்லேட் பின்னணி பற்றி எழுதினாலும் நம் காதலர்கள் அதை வாங்காமல் இருக்கப் போவதில்லை. என்ன செய்யலாம்? வேண்டுமானால் இப்படிச் செய்யலாமா...?! இனி சாக்லேட் கொடுப்பதற்கு பதில் முத்தங்களைப் பரிசளித்துக் கொள்ளுங்களேன்..! ;)

( வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்: https://www.youtube.com/watch?v=7Vfbv6hNeng  )


  - கே.ஜி.மணிகண்டன்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ