Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நண்பர்களையும் நம்மையும் இணைக்கும் Facebookக்கு பிறந்தநாள்: ஹேப்பி பர்த்டே ஃபேஸ்புக்!

ள்ளித் தோழர்கள், அலுவலக நண்பர்கள், ரொம்ப காலம் முன்பு நம் தெருவில் குடியிருந்தவர்கள், ஏதோ ஒரு வசந்த காலத்தில் நம் கண்ணோடு கண் பேசியவர்கள், நாம் நேரில் பேச நினைத்தாலும் பேச முடியாதவர்கள் என அனைவரோடும் நம்மை இணைக்கும் ஒரு மாபெரும் பாலம் ஃபேஸ்புக். கேண்டி கிரஷ் ரெக்வஸ்டில் ஆரம்பித்து கே.எஃப்.சியில் புரோபசல் வரை பல உறவுகளைக் கொண்டு சென்று சேர்த்த ஃபேஸ்புக், பலநாள் பேசாத பல உறவுகளையும் ஒன்று சேர்த்துள்ளது.

நேரிலோ, கடிதத்திலோ, கிரீட்டிங் கார்டு மூலமாகவோ வாழ்த்துச் சொன்னதெல்லாம் இப்போது அவுட்-டேட். நாலு வார்த்தை டைப் செய்து கூட ஒரு ஸ்மைலி. தட்ஸ் ஆல். விஷ் ஓவர். இப்படி வாழ்த்துகளுக்குத் தூது போகும் ஃபேஸ்புக்கிற்கு இன்று பிறந்த நாள்.

ஆம், 12 வருடங்களுக்கு முன்பு 2004-ல் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர் மார்க் சக்கர் பெர்க்மற்றும் அவரது நண்பர்களின் சிந்தையினால் உதித்த குழந்தை தான் ‘தி ஃபேஸ்புக்’. தொடக்கத்தில் நல்ல வரவேற்பு, சில சர்ச்சைகள் என அனைத்தையும் கடந்து வெறுமனே ஃபேஸ்புக் என்று பெயர் மாற்றம் கொண்டு இன்று கோடிக்கணக்கானோரின் செல்லக்குழந்தையாய் வளர்ந்துள்ளது. தினமும் மணிக்ணக்காக ஃபேஸ்புக் யூஸ் செய்கிறோமே அதைப் பற்றி நமக்கு எந்த அளவிற்குத் தெரியும்?

ஃபேஸ்புக் பற்றிய சில சிறப்புகள் இங்கே.

பர்த் ஸ்டோரி

இன்று நாம் ஜாலியாய் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் உருவாக பல போராட்டங்கள் பின்னனியில் உள்ளன. தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ‘ஃபேஸ்மேஷ்’ என்ற புராஜெக்டைத் தொடங்கினார் சக்கர் பெர்க். பின்னர் நாளடைவில் அதை மெருகேற்றி ‘தி ஃபேஸ்புக்’ உருவானது. தொடக்கத்தில் இது ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே இருந்து வந்தது. பின்னர் உலக அளவில் பயன்பாட்டிற்கு வந்தது. தனது புராஜெக்டின் போது, பல்கலைக்கழக டேடா பேசில் அனுமதியின்றி ஊடுருவியதால் சக்கர் பெர்க் எச்சரிக்கவும் தண்டிக்கவும் பட்டார். மேலும், தன் புராஜெக்டில் தீவிரம் காட்ட உலகப் புகழ் வாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார் மார்க். சீனியர் மாணவர்கள், சக்கர் பெர்க் தங்களை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக வழக்குத் தொடர, அது சில ஆண்டுகள் கழித்து பைசல் செய்யப்பட்டது.ஏன் நீலம்?

ஃபேஸ்புக் பக்கத்தில் பெரும்பாலம் நீல நிறமே இருக்கக் காரணம் என்ன? ஏனெனில் ஃபேஸ்புக் நிறுவனர் சக்கர் பெர்க்கிற்கு நிறக்குருடுப் பிரச்னை உள்ளது. அவருக்கு பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்கள் தெரியாது. “என் உலகம் (ஃபேஸ்புக்) எனக்கு வண்ணமயமாகத் தெரிய வேண்டும். அதனால் தான் நீல நிறம் கொட்டிக் கிடக்கிறது” என்கிறார் மார்க்.

இங்கெல்லாம் ஃபேஸ்புக் இல்லை

ஒருசில அரசுகள் ஃபேஸ்புக்கை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளன. அரசியல் எதிர்ப்புக் காரணங்களால் சீனா, வங்கதேசம், ஈரான், எகிப்து, வட கொரியா, தஜிகிஸ்தான் முதலிய நாடுகள் இதுவரை ஃபேஸ்புக்கை தடை செய்துள்ளன. சில நாடுகள் தடையை நீக்கினாலும், ஒருசில நாடுகளில் இன்னும் அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும், தற்சமயம் சுமார் 10 கோடி பேர் ஃபேஸ்புக்கை தெரியாமல் பயன்படுத்தி வருகின்றனர்.

போலிகள் ஜாக்கிரதை

ஃபேஸ்புக் வலைதளத்தை ஹேக் செய்ய ஒரு நாளுக்கு 6 லட்சம் முயற்சிகள் நடக்கின்றன. தற்சமயம் மட்டும் சுமார் 87 லட்சம் பொய்யான புரொஃபைல்கள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றனர்.

வாட் ஏன் ஐடியா சர்ஜி

கிரிஸ் புட்னாம் என்ற இளைஞர் 2006-ம் ஆண்டு ஃபேஸ்புக்கின் இணையதளத்தை தனியாளாக ஹேக் செய்தார். அப்படி அசாத்திய செயல் புரிந்த அந்த திறமைசாலி(!) இளைஞர் மீது புகார் கொடுக்காமல், அவருக்கு அங்கேயே வேலை கொடுத்து பணியிலமர்த்திக் கொண்டது ஃபேஸ்புக் நிறுவனம்.

மார்க்கின் சம்பளம் என்ன?

ஃபேஸ்புக் நிறுவனர்களுள் ஒருவரான மார்க் சக்கர் பெர்க் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அப்பொறுப்பில் உள்ள அவருடைய மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு அமெரிக்க டாலர் தான்!

அரசியல் புரட்சி

பல நாடுகள் அரசியல் காரணங்களுக்காக ஃபேஸ்புக்கைப் புறக்கணிக்கும் நிலையில், ஐஸ்லாந்து அரசு ஃபேஸ்புக்கை அபாரமாக பயன்படுத்தியுள்ளது. தனது அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க முடிவெடுத்த ஐஸ்லாந்து அரசு, மக்களின் கருத்துகளை அரிய நினைத்தது. மக்களோடு தொடர்பில் இருக்க ஃபேஸ்புக் தான் சரியான தளம் என்று உணர்ந்து ஃபேஸ்புக் பக்கத்தில் மக்களின் கருத்துகளைக் கேட்டு அதை நடைமுறைப்படுத்தியது அந்நாடு. உலக அரசியலில் இது ஒரு புரட்சியாய் அமைந்தது.

இத்தனை போட்டோக்களா?

சராசரியாக ஒவ்வொரு ஃபேஸ்புக் யூசரும் நாள் ஒன்றுக்கு 40 நிமிடமாவது ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நிமிடத்திற்கு 18 லட்சம் லைக்குகள் ஃபேஸ்புக்கில் பதிவாகின்றன. மாதம் ஒன்றிற்கு சுமார் 250 கோடி போட்டோக்கள் இங்கு அப்லோட் செய்யப்படுகிறதாம்.

குழந்தைகளுக்காக…

தனது மகள் பிறந்ததை முன்னிட்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் சொத்தில் 99 சதவிகிதத்தை தனது அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார் சக்கர் பெர்க். வருங்கால குழந்தைகளின் நலனுக்காக அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் உலகிலேயே, அறக்கட்டளைகளுக்கு அதிகம் வழங்கிய நபர் என்ற நன்மதிப்பைப் பெற்றார்.நோ பிளாக்கிங்

நமக்குப் பிடிக்காத நபர்களை நாம் என்ன செய்வோம். அன்ஃப்ரென்ட் செய்வோம். இல்லையென்றால் பிளாக் செய்வோம். ஆனால், சக்கர் பெர்க்கை நம்மால் பிளாக் செய்ய முடியாது. நிறுவனர் ஆதலால் தனக்கென்று ஸ்பெஷல் புரொஃபைலை கிரியேட் செய்துள்ளார் மார்க். நம்ம யூத் பாய்சும் அப்படி ஒன்னு எதிர்பாப்பாங்களே…

நல்லதோர் குடிமக்கள்

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களைவிட, ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்கின்றது ஒரு சர்வே. 26 வயதுக்குள்ளானவர்களை விட, அதற்கு மேற்பட்டோர் தான் மிகவும் ஆக்டிவாக ஃபேஸ்புக்கை யூச் செய்கிறார்களாம்.

என்ன கொடுமை சார் இது?

கடந்த 2011-ம் ஆண்டின் அறிக்கையின்படி, அமெரிக்காவில் பதிவாகும் விவாகரத்து கேட்போரில், மூன்றில் ஒரு பகுதி வழக்குகளில் ‘ஃபேஸ்புக்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதாம்.

‘ஃபேஸ்புக் நல்லதா? கெட்டதா?’, ‘அது நம்மை சோம்பேறி ஆக்குகிறது’, என்றெல்லாம் வாதிடாமல் பல கோடிக்கணக்கான வாழ்த்துக்களை நமக்காக சுமந்து வரும் ஃபேஸ்புக்கின் பிறந்த தினத்துக்காக, நாமும் அதற்கு வாழ்த்துச் சொல்வோம். மணிக்கணக்கில் பயன்படுத்தும் நாம் தானே அதற்கு சொந்தம், பந்தம் எல்லாம்.

ஹேப்பி பர்த்டே எஃப்.பி!

மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close