Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காமுகர் தினம்' போஸ்டர் VS காதலர்களுக்கு ஜிலேபி - 'காதலர் தின'அமளிதுமளி அஜெண்டா!

காதலர் தினத்தன்று பார்க், பீச், தியேட்டரில் காதலர்கள் கூடுகிறார்களோ இல்லையோ, காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றுகூடி, நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்துவைப்பது, காதலர்களை மிரட்டி திருமணம் செய்துகொள்ள செய்வது, போஸ்டர், நோட்டீஸ் கொடுத்துப் பிரச்சாரம் செய்வது என  கலாச்சாரக் காவலர்களாக  பலபல வித்தைகளை இறக்குவார்கள்.

"அப்படி இந்த வருடம் என்ன திட்டம் வெச்சிருக்கீங்க? " என்ற கேள்வியோடு சிலரிடம் பேசினேன்.

பழைய ஹிஸ்டரியைப் புரட்டிப்பார்த்தபோது, 'காதலர் தினம் கலாச்சாரத்திற்கு எதிரானது. அதை அனைவரும் எதிர்க்கவேண்டும்!' என்று பேசியிருந்தது பா.ஜ.க தரப்பு.

ஆனால் தற்போது, "காதலர் தினத்தை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கலாச்சாரக் காவலர்களுடைய வேலை!" என்று ஒரே வரியில் கருத்தைப் பதிவுசெய்து முடித்துக் கொண்டார் தற்போதைய பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.

''கலாச்சாரம் பண்பாடுனு நாங்க இதை எதிர்க்கலை. பல பண்பாடு, கலாச்சாரங்களை நாங்க எதிர்த்திருக்கோம்.

ஆனா, காதலர் தினத்தைப் பொறுத்தவரைக்கும் காதலர் தினம் மனிதனுடைய ஒழுக்கத்தைக் கெடுக்குது. இன்னைக்கு காதலர்கள்னாலே பைக்ல சுத்தணும், ஒருத்தரை ஒருத்தர் உரசிக்கணும்னு தப்பான கருத்தை மக்கள்கிட்ட புகுத்திட்டாங்க.

இதனால என்ன ஆகுது? தனிமையைப் பயன்படுத்திக்கிட்டு எல்லை மீறுறாங்க. இப்படிப் பல தவறுகளுக்கு காதலர் தினம் ஒரு வாசலா இருக்கு. திருமணத்துக்கு முன்னாடியே இப்படியெல்லாம் இருந்தா, அதன்பிறகு அவங்களுக்குள்ள இருந்த அன்னோன்யமும், ஈர்ப்பும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுடும். அதுக்குத்தான், 'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்'னு ஒரு பழமொழி சொல்லியிருக்காங்க.

திருமணத்துக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சதுன்னா, பிறகு எனக்கு நீ வேண்டாம், உனக்கு நான் வேண்டாம்னு டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிடுறாங்க. அப்புறம் காலம்பூரா ஒருவித மன உறுத்தலோடேயே வாழுற நிலை வந்துடுது. இப்படிப் பலவிதமான வாழ்க்கைச் சிக்கல்கள்ல ஏன் சிக்கிக்கணும்? அதனாலதான், இந்தக் காதலே வேணாம்னு எதிர்க்கிறோம். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டுதான் திருமணம் செஞ்சுக்கணும்னு குரான் சொல்லுது. அதுக்கான அர்த்தம், காதலிக்கிற பொண்ணை தனியாக் கூட்டிக்கிட்டு சுத்தலாம்னு அர்த்தம் கிடையாது.

இந்தப் புரிதலோட காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறவங்க, உலகத்துத்துல எங்கேயுமே இல்லை. அதனாலதான் ஒட்டுமொத்த காதலர்களையும் எதிர்க்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கு. நாங்களும் நிறைய போராட்டங்களைப் பண்றோம். காதலர் தினத்தை 'காமுகர் தினம்'னு கடந்த ஆண்டு போஸ்டர்ஸ் அடிச்சு பிரச்சாரம் பண்ணோம். இந்த வருஷமும் அது தொடரும்!'' என்று நீண்ட விளக்கம் கொடுக்கிறார், தமிழ்நாடு தவ்ஹீத் ஹமாத் தலைவர் அல்தாஃபி.

''போனவருடம் நாய், கழுதைனு விலங்குகளுக்கும் விலங்குகளுக்கும் தாலி கட்டி கல்யாணம் செஞ்சுவெச்சோம். 'தாலி' புனிதமானதுனு தலைவர் ராம.கோபாலன் ஐயா கண்டிச்சதுனால, இந்த முறை இப்படியெல்லாம் பண்ணமாட்டோம். தவிர, பொதுஇடங்கள்ல அநாகரீகமா நடந்துக்கிற காதலர்களைப் பிடிச்சு கல்யாணம் செஞ்சு வெச்சோம். இந்தமுறை, அப்படியெல்லாம் பண்ணாம, எளிமையான முறையில பிரச்சாரம் செய்வோம்.

ஏன்னா, வெளிநாடுகள்ல உற்பத்தி ஆகுற பரிசுப் பொருட்கள், சாக்லேட்னு அவங்க நாட்டுப் பொருட்களை விற்கிறதுக்காக உருவாக்குனதுதான் காதலர்தினம். இது ஒருவிதமான பிஸ்னஸ் மார்க்கெட்டிங். இதைக் காதலர்களுக்குப் புரியவைப்போம். ஏன்னா, நாங்க காதலர் தினத்துக்குதான் எதிரியே தவிர, காதலர்களுக்கு அல்ல!'' - இப்படி நல்லபிள்ளையாகப் பேசியவர், இந்து முண்ணனியின் சென்னை மாநகர பொதுச்செயலாளர் இளங்கோவன்.

இதே கான்செஃப்ட்டை வேறுவிதமாகப் பேசினார் இந்து மக்கள் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான (?!) அர்ஜூன் சம்பத்.

''நிறுத்தணும். எல்லாத்தையும் நிறுத்தணும்!'' என்று ஆஜரானார் குமார் ஶ்ரீஶ்ரீ. அகில இந்திய காதலர் கட்சி என்ற பெயரில் காதலர்களுக்காகவே கட்சி நடத்திக்கொண்டிருப்பவர்.

''பின்னே என்ன சார்? போஸ்டர் அடிக்கிறாங்க. காதலர்களை விரட்டி விடுறாங்க. நாய், கழுதை, குரங்குக்குக் கல்யாணம் பண்ணிவெச்சு அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்காங்க.

இதெல்லாம் பண்ணக்கூடாதுனுதான், 2012-லேயே நான் ஹை-கோர்ட்ல வழக்கு போட்டேன். அந்த வழக்கு இன்னும் நிலுவையிலேயே இருக்கு. இதுக்காக நான் சோர்ந்து போயிடமாட்டேன். காதலர்களுக்கு நானும், என்னோட தொண்டர்களும் பாதுகாப்பு கொடுப்போம். மெரினா பீச்சுக்கு வர்ற காதலர்களுக்கு எங்க கட்சி சார்பாக ஜிலேபி கொடுத்து சந்தோஷப்படுத்துவோம்! லவ் பண்ணாதான் சார் லைஃப் நல்லா இருக்கும்!'' என்றார் காதலர்களின் காவலன் குமார்.

மொத்தத்துல, தேர்தல் வரப்போறதுனால இதுவரை  காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு வானத்துக்கும், பூமிக்கும் குதிச்சவங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கிறாங்க. அடக்கி வாசிச்சவங்க, திமிறி எந்திருச்சிருக்காங்க. அவ்வளவுதான்!

- கே.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close