Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவரைப் பிச்சைக்காரர் என்று கூறினால் நாம் யார் ?

"கொஞ்சம் கருணை காட்டுங்க அய்யா..." என்று ஒரு பிச்சைக்காரர் யாசிப்பதை நாம்  கண்டிப்பாகக்  கேட்டிருப்போம். மின்சார ரயில்களும், பேருந்து நிலையங்களும், பிரதான சாலைகளின் சைகை விளக்குகளுமே அதற்கு சாட்சி.

அதே கருணையை ஒரு பிச்சைக்காரர், படிக்க கஷ்டப்படும் பெண் குழந்தைகளின் மேல் காட்டினால்?
ஆமாம். இதுவரைக் கேட்காத அல்லது நினைத்துப் பார்க்க முடியாததாக செய்தியாக இருந்தால் நீங்கள் கிம்ஜிபால் பிரஜாபதியைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 68 வயதைத் தொட்ட முதியவரான இவர் , குஜராத்தின் மெஹ சேனா மாவட்டத்தில் பிச்சை எடுத்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழை பெண் குழந்தைகளின் கல்விக்காக என புத்தகங்களும் சீருடைகளும் வாங்கித் தந்த இவர், இந்த ஆண்டு செய்திருக்கக் கூடிய காரியம், நெகிழ வைப்பதாக இருக்கிறது. கடந்த செவ்வாய்க் கிழமை மக்பாரா பள்ளி வாசலில் கூடி இருந்த 10 சிறுமிகளை, அவர்களின் அம்மாக்களோடு அழைத்தார். வழக்கமான உதவிதானே என அனைவரும் எதிர்பார்த்திருக்க, கையில் சின்ன சின்ன பெட்டிகளாகப் 10 பெட்டிகள் இருந்தன.

அதில் இருந்த தங்க காதணிகளைப் பார்த்த தாய்மார்கள் ஆச்சரியத்தில், கண்கள் கலங்கி நின்றனர். அப்பள்ளியில் இருக்கும் மாணவச் சிறுமிகளிலேயே மிகவும் ஏழ்மையான, தினக் கூலிக்கு வேலைப் பார்த்து படிக்க வைக்கும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து இவர் காதணிகளை தந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அவை  மெகசேனா கோவில்களின் வாசலில் அவர் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் வாங்கியது என்பது கவனிக்கத்தக்கது.

"பெண்களைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் யாரையும் சாராமல் இருக்க வேண்டும். இங்கு மோசமான நிலைமை நிலவுகிறது. மெகசேனாவில் ஆண் குழந்தைகளை விடப் பெண்குழந்தைகள் மிகக் குறைவு. இது அவர்களுக்கு ஒரு உந்தாக இருக்கும்" எனத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

இவர் நகைகளை வாங்கியக் கடையின் உரிமையாளர், இவர் உதவுவதற்காக வாங்குகிறார் என தெரிந்ததும், ரூ. 13,000 ஆகவிருந்த செலவில், 3,000 தள்ளுபடி செய்து உதவியுள்ளார். பிரஜாபதி, கடந்த 13 ஆண்டுகளில் தான் பிச்சை எடுத்து சேர்த்த 80,000 ரூபாய்க்கு உதவி செய்துள்ளார். 12 ஆரம்பப் பள்ளி மாணவிகள் இவரின் உதவியால் பயன் அடைந்துள்ளனர்.

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று ஔவையார் கூறிச் சென்றாலும், தான் பிச்சை எடுத்து, மற்றவர்கள் பாடம் கற்பிக்கச் செய்யும் இந்த தாத்தாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 
மு.சித்தார்த் (மாணவப் பத்திரிக்கையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close