Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதலைக் காதலிப்பது எப்படி?

காதலால்... காதலுக்காக... காதலினால் வாழ்பவனின் சில காதல் குறிப்புகள்..!

* பயங்கர பொறுப்பான பையன், மொத்த சிலபஸையும் சிறுமூளைக்குள் அடக்கிய படிப்பாளிப் பெண் என வித்தியாசமான காம்போ அவர்களுடையது. போலவே காதலும். அவுட்டிங், டேட்டிங் என சுற்றியதில்லை. மணிக்கணக்கில் அரட்டை இல்லை. அவர்கள் தோள் உரசி நடந்து நாங்கள் பார்த்ததில்லை. opposite poles attract each other'என்பதை பிஸிக்கலாய் உடைத்தெறிந்தவர்கள். மொத்தமே ஐந்து நிமிட உரையாடல்கள்தான் அவர்களுடையது. அந்த ஐந்து நிமிடங்களுக்கான எரிபொருளாய் காதல் மட்டுமே இருக்கும். கண்ணியமான காதலுக்கும் குடும்பம்தானே எதிரி. கடைசி செமஸ்டரில் ஒருநாள் திடீரென அவளுக்கு திருமணமாக, வெற்றுப் பார்வையும் விரக்தி நடையுமாய் மிச்ச நாட்களை கழித்தான். பின் ஆளுக்கொரு திசையில் சிதறிப் போனோம். ஒருநாள் அதிகாலையில் அறைக்கதவை தட்டியவன் 'குழந்தை பொறந்திருக்குடா அவளுக்கு' என அத்தனை நாள் வலி மறந்து சந்தோஷக் கண்ணீர் விட்டான். எதிர்பால் ஈர்ப்புடையவனாய் இருந்தும் அவனை அணைத்து முத்தமிடத் தோன்றியது.

* பள்ளிக்காலத்திலிருந்தே பழக்கமான துடுக்கான தங்கை அவள். செல்லமாய், வாய் பேசும் வானரம். ஆனால் அப்பா என்றால் சர்வமும் நடுங்கும் அவளுக்கு. முரட்டு உடம்பும் முறுக்கு மீசையுமாய் அவரைப் பார்த்தால் எனக்கே கிட்னி ஓவர்டைம் பார்க்கும். அவரை மீறி அவள் ஏதாவது செய்தால் கன்னம் தக்காளி சாஸ்தான். ஆனால் பின்னாளில் தான் ஒருவனை விரும்புவதாய் அவள் சொன்னபோது அந்த முரட்டு மீசைக்காரர் மேடியாய் மாறி ஆசிர்வாதித்தார். பாவம், அவருக்குள்ளும் முற்றுப் பெறாத ஒரு கடலோரக் கவிதை இருக்கிறது போலும்.* எனக்கும் அவனுக்கும் எதிலுமே ஒத்துப் போனதில்லை. வார்த்தைகள் வெடித்து பீப் சாங் பிச்சை கேட்குமளவிற்கு உரையாடியிருக்கிறோம். ஆனால் அவன் காதலுக்கு முதல் ரசிகன் நான். 'அவளுக்கு மியூசிக் பிடிக்குமாம்டா, கத்துகிட்டு இருக்கேன்' என்பான் ஒருநாள். மற்றொரு நாள், 'ஈ கொச்சு ஜீவிதம் பிரேமிச்சு தீர்க்கணும் சாரே' என்பான். அவளுக்கு மலையாளமும் பிடிக்கும் போல. அவளுக்காக அவன் எடுக்கும் சிரத்தைகளை பார்க்கும்போதெல்லாம் காதல் மேல் காதல் கொள்கிறேன்.


* குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லப்பிள்ளை அந்த அக்கா. பிரியமும் குறும்புமாய் தேவதையைப் போல வளைய வந்தவள் ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டாள். தமிழ்சினிமாவின் டெம்ப்ளேட் காட்சியாய் மொத்த குடும்பமும் சுற்றி நின்று 'நாசமாப் போவ' என வாழ்த்தியது. இன்று அவள் வருகை தரும் விஷேச வீடுகளில் எல்லாம், 'நாங்க பாத்து வச்சுருந்தாக் கூட இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளை கிடைக்கமாட்டாரும்மா' என தூற்றிய வாய்களே வாழ்த்தும்போது பதிலுக்கு அவளின் எதிர்வினை ஒரு சின்ன புன்னகை மட்டுமே. எனக்கோ அது க்ளைமேக்ஸில் சித்தார்த் அபிமன்யூ காட்டும் சைகையாய் தெரிகிறது. எப்படியோ அவள் புண்ணியத்தில் எனக்கு பாரீனிலிருந்து மறக்காமல் வாங்கி வரும் பாசக்கார மாமா கிடைத்திருக்கிறார்.

* இந்த கேரக்டரை நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள். 'மரத்துல இருக்குது காயீ, தூங்கத் தேவை பாயீ' டைப் காதல் கவிஞன் அவன். 'நீ எழுதுறது எல்லாம் கவிதையா?' என நான்கு தலைமுறையை தோண்டி எடுத்துத் திட்டினாலும் அசராமல் அவளைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறான். என்றாவது ஒருநாள் அதிசயமாய் எனக்கும் பொருந்திப் போகும்படி அவன் எழுதுகையில் 'you made my day dude'என சொல்ல நினைத்து லைக் அமுக்குகிறேன். இதோ இப்போது சொல்லியுமாயிற்று.


* கனவுத் தொழிற்சாலையை கனவாகக் கொண்ட நண்பன் அவன். ஸ்டிரிக்டான ஹைஸ்கூல் டீச்சர்களின் மூத்த மகன். தோளுக்கு மீறியவனை அடிக்கக் கூடாது என்பதெல்லாம் அவன் அப்பாவிற்கு கட்டுக்கதை. அடிகளையும், சுடுசொற்களையும் வாழ்க்கையாய் கொண்டவனுக்கு வரமாய் வந்த guardian angel அவள். 'நீ சினிமாவுல் ட்ரை பண்ணு, உன்னை நான் பாத்துக்குறேன்' என அவனையும் அவன் கனவையும் சேர்த்தே சுமந்தாள். கொஞ்ச நாட்களுக்கு முன் அவனை சந்தித்தபோது, 'போதும் மச்சி. எனக்காக நிறைய பண்ண அவளுக்கு என்னால தரமுடிஞ்சது இந்த விடுதலையைதான். I loved her enough to let her go. என்னைக்காவது நான் படமெடுத்தா புதுசா லவ் சீன்லாம் யோசிக்க வேணாம்ல... அதோட லவ் சீன் எல்லாம் அவதான்' என்றான். இப்போது அவளின் திருமணத்திற்கு ஒரு பார்வையாளனாய் செல்ல காத்திருக்கிறான். விண்ணைத் தாண்டும் அவனின் படைப்பிற்காக நான் காத்திருக்கிறேன்.

* இந்த யுகத்து அல்ட்ரா மாடர்ன் காதல் கதை இது. 'live the moment'என்ற கொள்கைப்படி வாழும் நெருங்கிய தோழி அவள். வசதி, சாதி, மதம் என எப்படிப் பார்த்தாலும் பொருந்தாக் காதல் அவர்களுடையது. ஆனால் லாஜிக் இல்லாத கலர்புல் காட்சிகளைக் கொண்ட ஷங்கர் படம்தானே காதல். தீராக்காதலில் திளைத்தார்கள். வில்லனாய் வந்தது ரியாலிட்டி. 'எதிர்பாத்தது தானே. லவ் நாங்க ரெண்டு பேர் மட்டும் சம்பந்தப்பட்டது. we are best as couple. ஆனா கல்யாணம் நிறையப் பேரு சம்பந்தப்பட்டது. யாரையும் கஷ்டப்படுத்த விரும்பல' என பொறுப்பான போதிமரமாய் பாடமெடுத்தாள். அவன் திருமணத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தாள். 'ஐயாம் ஆல்ரைட் மச்சு' என பார்க்கும்போதெல்லாம் சொல்கிறாள் ஒரு மென்சோக ஹைக்கூவாய். உண்மை அவள் தலையணைக்கே வெளிச்சம்.

* முன்னே சொன்னதற்கு அப்படியே நேரெதிர் கதை இது. இணையத்தின் வழியே பரிச்சயமானார்கள். இலக்கியம் வழியே நெருக்கமானார்கள். மார்க்ஸ் ஜென்னியாய் தங்களை உருவகப்படுத்திக் கொண்டார்கள். காதல், காமம், இன்ன பிற எல்லாவற்றையும் எழுத்தின் மூலம் தீர்க்க முயல்கிறார்கள். அவர்களின் கடிதத்தை படிக்கையில் என்னுடையது காதல் சூழ் உலகாகிறது. ஒரு மழைநாளின் பின்னிரவில் அருந்தும் சூப்பைப் போல கதகதப்பைத் தரும் கடிதங்கள் அவை. நிற்க. இதுநாள் வரை அவர்கள் நேரில் பார்த்துக்கொண்டது கிடையாது என்பதுதான் அந்த சூப்பில் தூவப்படும் பெப்பராய் மேலும் 'கிக்' ஏற்றுகிறது. 'இதென்ன பைத்தியக்காரத்தனம்' என்பவர்களுக்கும் பரிசாய்த் தர அவர்களின் கடிதத்தின் ஒரு பகுதி இருக்கிறது. படித்தபின் நியாயம் உணர்ந்து நிச்சயம் நீங்களும் காதலில் விழுவீர்கள்.


* அப்பா இல்லாத குடும்பத்தின் ஒரே ஆண்மகன். பொறியியலோடு மேற்படிப்பாய் ஊதாரி, ரவுடி என பல பட்டங்கள் வாங்கியவன். அடிஷனல் தகுதியாய் ஒருத்திக்கு காதலன். ஒருகட்டத்தில் தன் அக்காவின் திருமணமா? தன் காதலா? என்ற நிலை வரும்போது அவன் தேர்ந்தெடுத்தது முதலாவதை. 'பிடிச்சவங்க கண்ணைப் பாத்து குட்பை சொல்றதெல்லாம் ரொம்ப கொடுமைடா' என அவன் சினிமாத்தனமாய் போதையில் புலம்பும்போதெல்லாம் தடுக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இது எதுவுமே தெரியாமல் 'அவனுக்கு இன்னும் பொறுப்பே வரலைப்பா' என எங்களிடம் புலம்புகிறார் அவனின் அம்மா.

* 'எல்லாம் நீ இருக்கிற நம்பிக்கைதான். நாளைக்கு எனக்கு பிரச்னைன்னா நீ வந்து நிப்பேல' எனும் தங்கையின் சொற்கள்தான் உள்ளாடைகளைக் கூட பத்திரமாய் பார்த்துக்கொள்ளத் தெரியாத என்னை பொறுப்பாளியாக்குகிறது. இதோ, இதை டைப்பிக் கொண்டிருக்கும் இதே நொடியில் முடிந்துபோன பக்கங்களை புரட்டிப் பார்க்க பஞ்சாப் கிளம்புகிறான் நண்பன் ஒருவன்.

* 'நாளைக்கு பேசுறேன், குட்நைட்' என அவள் சொல்லியபோது எனக்குத் தெரிந்திருக்கவில்லை நாளை பேச அவள் இருக்கப்போவதில்லை என. பிரக்ஞை இல்லா வெளியில் சுற்றிக்கொண்டிருந்தவனை இழுத்துப் பிடித்து இருத்தியது இவர்கள்தம் தீராக்காதலின் வழி சிதறித் தெறிக்கும் துணுக்குகள்தான். கார்பனுக்கு சமமாய் காதலையும் பரப்பும் உங்கள் அனைவருக்கும் ஆயிரம் ஆயிரம் முத்தங்கள். லவ் யூ ஆல் மக்களே!  

- நித்திஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close