Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் காதலை இன்னும் அழகாக்க...

டேவிட் உடனான எமர்ஜென்சி காதல் :

அவர் பெயர் அப்போது டேவிட். ஆம். ‘அப்போது’ தான். எமர்ஜென்சி காலத்தில் ஆளுக்கு ஒரு அடையாளங்களுடன் சுற்றியபோது, டேவிட் அவர் அடையாளமாக ஆனது. இது எமர்ஜென்சி காதல் என்று குறிப்பிட காரணம், நெருக்கடி நிலை காலத்தில் மலர்ந்த காதல் என்பதால் மட்டும் அல்ல, அது திடீரென ஏற்பட்ட காதல் என்பதும் ஒரு காரணம். இன்னும் சொல்லப்போனால், நான் எப்போது அவரை காதலிக்க தொடங்கினேன் என்று தெரியாது. ஆனால், அவர் என்னை சில காலமாக காதலித்து வந்துள்ளார். அதை பின்பு இயக்க தோழர்கள் மூலமாக அறிந்தேன். இயக்கத்தோழர்கள்தான் எங்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்கள் - இது லட்சுமி அம்மாவுடனான உரையாடலின் சுருக்கம்.

ஹூம்... இன்னும் உங்களுக்கு லட்சுமி யாரென்று சொல்லவில்லை அல்லவா... நீங்கள் தீவிர புத்தக வாசிப்பாளராக இருந்தால், ஒரு வேளை அவரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆம். சென்ற ஆண்டு வெளிவந்த ’லட்சுமி என்னும் பயணி’ புத்தகத்தின் ஆசிரியர். தமிழ் தேசிய அரசியல் களத்தில் இயங்கி கொண்டிருக்கும் பெ. மணியரசனின் மனைவி. அரசியலுடன் இரண்டற கலந்து இருக்கும் தன் காதல், இல்லற வாழ்க்கையை விவரிக்கும் லட்சுமியின் நூல் அது.

காதலர் தினக் கட்டுரைக்காக நான் அவரை தொடர்பு கொண்ட போது, அவர் பேசியதுதான், நீங்கள் முதல் பத்தியில் படித்தது. “இந்தியாவில் அவசர நிலை காலக்கட்டம். அப்போது அவர் (மணியரசன்) சி.பி.எம் இல் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தார். அரசும் அவரை தீவிரமாக தேடிக்கொண்டிருந்து. டேவிட் என்னும் பெயரில் தலைமறைவாக இயங்கி கொண்டிருந்தார். பெரிய அரசியல் தெளிவு அப்போது இல்லை என்றாலும், நான் வேலை பார்த்த பனியன் தொழிற்சாலையில் பலர் அப்போது இடதுசாரி சிந்தனை ஓட்டத்தில் இருந்ததால், எனக்கு இயல்பாகவே அதன் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. நானும் அவர்களுடன் இயங்க துவங்கினேன். அப்போது என்னை ஆர்ப்பாட்டங்களில் பார்த்த அவருக்கு என் மீது காதல் அரும்பி உள்ளது. அந்த அவசர நிலை காலத்தில், கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் இடதுசாரி இயக்க தோழர்கள் தலைமையில் எங்கள் திருமனம் நடந்தது. திருமணத்திற்கு பின் அவர் மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்கு சென்றார்.”

அலைபாயுதே வகை காதல்களுக்கு முன்னோடி:

உங்கள் திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பில்லையா... அதுவும் ஒரு தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள...?

"எப்படி எதிர்ப்பு இல்லாமல் இருக்கும்? நான் அப்போது வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால், என்னுடன் வேலை செய்யும் தோழிகளுடன் தங்கி இருந்தேன். வீட்டிற்கு எங்கள் திருமணம் தெரியாது. நான் வேலை முடிந்ததும், நான் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று விடுவேன். அவரும் தலைமறைவாக வாழ்ந்ததால், அவ்வபோதுதான் என்னை சந்திப்பார். நான் கர்ப்பமடைந்த பின்புதான், எங்கள் திருமணம் வீட்டிற்கு தெரிய வந்தது. அதனுடன் வீட்டுடனான உறவும் முறிந்தது.

சரி... உங்களுக்கு திருமணம் ஆன புதிதில்தான் எமர்ஜென்சி காலம், அது முடிந்த பின்பாவது எங்காவது ஒன்றாக வெளியே சென்று இருக்கிறீர்களா...?

செல்லாமல் என்ன...? பல இடங்களுக்கு சென்று இருக்கிறோம். ஊட்டி, கொடைக்கானல் அல்ல... செந்தலை, பூதலூர் பகுதிகளுக்கு (தஞ்சை மாவட்டத்தில் உள்ள பகுதி). விவசாயிகளை ஒன்று திரட்ட... போராட... விவசாய போராட்டங்களை முன்னெடுக்க என, தஞ்சையில் பல பகுதிகளுக்கு ஒன்றாக சென்று இருக்கிறோம். இன்றுவரை சென்று கொண்டு இருக்கிறோம்.

தனிப்பட்ட வாழ்க்கை என்று நமக்கில்லை என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா...?

நிச்சயமாக இல்லை. ஒரு வேளை என் இளமை காலத்தில் நான் படித்த ருஷ்ய நாவல்கள், அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அந்த நாவல்கள் நாயகிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, போராட்ட வாழ்வுடன் கலந்தே இருக்கும். மன அழுத்த காலங்களில் அதனுடன், என் வாழ்க்கையை ஒப்பிட்டுக் கொள்வேன். இன்று வரை பல முரண்பாடுகளுடன், எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகதான் போய் கொண்டிருக்கிறது. இப்போதும் ஒன்றாகதான் ஆர்ப்பாட்டங்களுக்கும், அரசியல் மாநாடுகளுக்கும் சென்று கொண்டிருக்கிறோம்.

உங்கள் காதலை இன்னும் அழகாக்க...

சரி, ஏன் இந்த பேட்டி...? லட்சுமி அம்மா சொல்ல வருவது என்ன...? காதலர்களே எவ்வளவு சண்டை வந்தாலும் ஒன்றாக வாழுங்கள் என்று வழக்கமான தத்துவம் கூற வருகிறாரா...? இல்லை. இந்த வாட்ஸ் அப் தலைமுறை அதில் மிக தெளிவாக இருக்கிறது.

 

இவரின் செய்தி, பொது நிகழ்ச்சிகளுக்கு தனியாக வரும் கணவன்களுக்கானது. அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் மனைவியை/ காதலியை அழைத்து வராமல், தனியாக வந்துவிட்டு, இன்னும் என் மனைவி அப்டேட்டே ஆகவில்லை என்று புலம்பும் ஆண்களுக்கு. லட்சுமி தன் கணவருடன், அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாக சென்று வருகிறார். இதனால் ஒருவரை, ஒருவர் புரிந்து கொள்ள முடிகிறது. கஷ்டங்களை ஒன்றாக எதிர் கொள்ள முடிகிறது. நீங்கள் உங்கள் மனைவியை எங்கும் அழைத்து செல்லாமல், 'என் காதலி/ மனைவி என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்' என்று புலம்பி ஒரு பயனும் இல்லை.

உங்களுடைய உலகத்தை உங்கள் இணைக்கு காட்டுங்கள். காதல் இன்னும் அழகாகும்.

- மு. நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ