Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அடுத்த 40 ஆண்டு காலம் மீண்டும் குடிக்காமல் இருந்து பார்ப்போமே...?!'

'ப்ரவோக்' பத்திரிக்கையின் சார்பில்  "மதுவிலக்கு வேண்டுமா... வேண்டாமா?" என்ற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில், பா.ம.க கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பத்திரிகையாளர் ஞானி, தொகுப்பாளர் க்ரேக் முதலானோர் கலந்து கொண்டனர்.

அன்புமணி ராமதாஸ்:

"தமிழகம்தான் தற்கொலைகள், சாலை விபத்துகள், விதவையான இளம் பெண்கள் என அனைத்திலும் முன்னோடியாக இருக்கிறது. இதற்குக் காரணம் மது.  மது அருந்திய வாட்ஸ்-அப் வீடியோவில் இருக்கும் 4 வயது சிறுவனை பார்த்தால், ஒரு நாள் மட்டும் குடித்தவன் போலத் தெரியவில்லை. இன்று ஒருவனிடம் நான் "தம்பி, குடிக்காதே!" என்று சொன்னால், "உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போய்யா" என்கிறான்.


மதுவினால் 200 வகையான நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைந்தால் கவலையில்லை, 30 ஆயிரம் மாணவர்களில் வெறும் 37 பேர் மட்டுமே ஐ.ஐ.டி'க்கு தேர்வாகியுள்ளார்கள் .வேளாண் துறையில் என்ன நடந்தாலும் கவலையில்லை. ஆனால் மது விற்பனை குறைவது போல் தெரிந்தால், உடனடி நடவடிக்கை.

இதற்கு ஸ்வாட் அனாலிசிஸ் (SWOT- Strength Weakness Oppurtunity Threat) செய்யப்பட வேண்டும்.
மதுவை இவர்கள் விற்பதில்லை. திணிக்கிறார்கள். கடந்த வருடம் தமிழக அரசாங்கம் ஈட்டிய வருமானம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி. அதில் 36% மது விற்பனையில் சேர்ந்தது. இது என்ன ஒரு அசிங்கம்? பீகாரில் நிதிஷ் குமாரையும், குஜராத்தில் நரேந்திர மோடியையும் மதுவிலக்கிற்காக பாராட்ட இந்த நேரத்தில் நான் கடமைப்பட்டுள்ளேன். கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் ஜி.டி.எஸ்.பி 9 லட்சம் கோடி. ஆனால் 11 லட்சம் கோடியாக இருந்திருக்க வேண்டியது. இதற்கு மதுவே காரணம். குடியால் தயாரிப்பு குறைந்து போனது.

சில கிராமங்களில் இவர்கள் கொடுக்கும் கிரைண்டர்களை செடித் தொட்டியாகப் பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால், அவை ஓடுவதில்லை. நாம் இலவசங்கள் கேட்பதில்லை. நல்ல கல்வியும் மதுவிலக்கும்தான் கேட்கிறோம். அம்மா ஸ்டிக்கர், உணவகம்,சிமண்ட், குடிநீர்  என அனைத்திலும் "அம்மா" என்று போடுபவர் டாஸ்மாக்கில் மட்டும் ஏன் "அம்மா டாஸ்மாக்" என்று போடுவதில்லை? அது தீங்கு என அவர்களுக்கே தெரியும்."


  ஞானி 

"1930 முதல் 1970 வரை தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது அந்த 40 ஆண்டு காலத்தில் கள்ளச் சாராயத்தினால் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியுமா யாருக்காவது? புள்ளி விவரங்களைப் பார்த்தால், சில ஆயிரம் பேர்தான் இறந்து போனார்கள் என்று சொல்லலாம். எப்போதாவது 1 அல்லது 2 முறை கள்ளச் சாராயத்தினால் ஏற்பட்ட நிகழ்வுகளைக் காரணம் காட்டி மது விலக்கை நீக்கியது, மதுவை வைத்து காசு பார்க்க நினைத்த கொள்ளையர்கள் செய்த வேலை. அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சியின் தொழிலதிபர்கள்தான் தமிழக டாஸ்மாக்கிற்கு மது விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இரு கட்சிப் பிரமுகர்களின் ஆலைகளில் இருந்துதான் அனைத்து சரக்கும் செல்கிறது. அதனால்தான் இவர்கள் கள்ளச் சாராயத்தை முன்னிறுத்தி இதிலிருந்து நம் கவனத்தை திருப்ப முயற்சிக்கிறார்கள்.

இதற்குப் பின்னால் இருப்பது ஒரு கேவலமான பொருளாதார அரசியல். முழு சுதந்திரத்தோடு நாம் அமைதியாக வாழ வேண்டும் என்றால், நமக்குக் கீழ் தட்டில் இருப்பவரும் அமைதியாக வாழ வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது வெறும் பகல் கனவாகி விடும். அதுதான் இங்கு நடக்கிறது மதுவின் பிரவேசத்தினால். அவர்களை இந்த அதிகார வர்க்கம் துடைத்தெறிகிற விஷயமாக மது உள்ளது. 40 ஆண்டு காலம் மதுவிலக்கில் இருந்தோம். அடுத்த 40 ஆண்டு காலம் மது குடித்துத் திரிந்தோம். அடுத்த 40 ஆண்டு காலம்தான் மீண்டும் குடிக்காமல் இருந்து பார்ப்போமே? என்ற பார்வை ஏன் இருக்கக் கூடாது? அதை அடுத்தக் கட்டமாக செய்து பார்க்கலாம்" என்று பரிந்துரைக்க விரும்புவதாகக் கூறி, தன் உரையை முடித்துக் கொண்டார்.

சமுதாயத்தின் பல்வேறு திசைகளிலும் துறைகளிலும் வந்திருந்த பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

இது எப்படி சாத்தியமாகும்? இதை எப்படியெல்லாம் நிறைவேற்ற முடியும்? போன்ற கேள்விகளுடன் கேள்வி பதில் பகுதியுடன் முடிவடைந்தது.


முடிவில் நடுநிலையாளர்கள் மதுவிலக்கு சாத்தியமே என்ற தீர்ப்பை அளித்தார்கள்.

மு.சித்தார்த்
படங்கள் : அஷோக்

(மாணவப் பத்திரிக்கையாளர்)

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close