Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ரீடம் 251: ஆனந்தம் யாருக்கு?

லகில் இன்றைய தேதிக்கு, ஒருவர் இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ ஏதாவது பொருட்கள் அல்லது சேவையை வழங்குகிறார்கள் என்றாலே அதற்கு பின் ஏதாவது அரசியல் கட்டாயமாக இருக்கத்தான் செய்யும். அதுவும் கார்ப்பரேட் நிறுவனங்களை பற்றி சொல்ல வேண்டுமா என்ன...? எந்த ஒரு செயலுக்கு பின்னும் லாப நோக்கத்தோடுதான் செயல்படுவார்கள் கார்ப்பரேட் முதலாளிகள் என்பதற்கு பல நூறு பணக்கார முதலைகளை பட்டியலிட முடியும்.

இந்தியாவில் இன்று செல்போன் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் சுமாராக 70 சதவிகிதம் (84 கோடி பேர்). மீதமுள்ள 30 சதவிகித (36 கோடி பேர்) மக்களை யார் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொள்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்தியா எனும் பசுமாட்டின் மடியிலிருந்து தொலைத்தொடர்பு  கட்டணம் எனும் பெயரில் பாலை கறப்பார்கள். 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வர மல்லுகட்டிக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். சமீபத்தில் தனக்கும், தன் நிறுவனத்தின் பாதுகாப்புக்காகவும் 16,000 ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் பாதுகாப்பு படை வீரர்களை கொண்ட தனி ராணுவத்தையே அமைத்துக் கொண்டிருக்கிறார் அவர் என்று  அண்மையில் ஒரு செய்தி வெளியாகி பகீர் கிளப்பியது.

இவருக்கு தற்போது இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது, ஏனெனில் இவர் நடத்தும் மற்ற நிறுவனங்களில் பெரும்பாலானவைகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. சமீபத்தில் இவரின் துணி உற்பத்தி நிறுவனத்தை கூட விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தடத்தை, இந்திய தொலைதொடர்புத் துறையில் வலுபடுத்திக் கொள்ள இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கலாம். தன் நிறுவனத்தின் 4G சேவையை அதிகரிக்க சுமாராக 1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறார். அதில் வெறும் 10,000 கோடி ரூபாயை மட்டும் செலவழித்தால் கூட 30 கோடி பேருக்கு 251 ரூபாய்க்கு போனை கொடுத்துவிடலாம்.

இணைய நிறுவனங்கள்

இந்தியாவில் கூகுள் லூம், ஃபேஸ்புக் ஃப்ரீபேசிக்ஸ் போன்றவைகள் மூலம் இணையத்தை இந்தியாவில் அதிகமாக பயன்படுத்த வைக்க முயற்சித்தது அல்லது முயற்சித்துக் கொண்டிருப்பது எல்லாம் நாம் அறிந்ததே. கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களின் வருவாய் அசுர வேகத்தில் வளர வேண்டும் என்றால் அதிக இணைய பயன்பாட்டாளர்கள் வேண்டும், மற்ற நாடுகளில் மல்லுக்கட்டுவதை விட இந்தியாவில் இருக்கும் அரசை சரிகட்டுவது எளிது. எனவே இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினாலே தானாக இந்தியாவில் இணைய பயன்பாடும் அதிகரிக்கும். அதற்குதான் இந்த ஃப்ரீடம் 251 மொபைல்.

இ - காமர்ஸ் நிறுவனங்கள்

இந்தியாவில் இணைய வசதி அதிகரித்தால் ஆனந்தப்படப் போகும் நிறுவனங்களில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அதிக இணைய பயன்பாட்டாளர்கள், அதிக வாடிக்கையாளர்களாக உருவாவார்கள். இ- காமர்ஸ் நிறுவனங்களின் பலமே அவர்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள்தான். அந்த விவரங்கள் அதிகமானால் யாருக்கு என்ன மாதிரியான பொருட்கள் தேவை, இந்தியா முழுவதுமாக எந்த நேரத்தில் எந்த மாதிரியான பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்பது போன்ற ஃபிங்கர் டிப்ஸ் விவரங்கள் அவர்களின் கைக்குப் போகும். அடுத்த மாதம் என்ன தேவை என்பதை அறிந்து, உலகிலேயே எங்கு விலை குறைவாக அந்த பொருட்கள் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு அங்கிருந்து வாங்கி வந்து லோக்கல் கடைகளில் கொடுக்கும் விலையை விட மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் தொடங்குவார்கள். இன்று இ-காமர்ஸில் கிடைக்காத பொருட்களே இல்லை.

அப்படிப்போனால் சில்லறை வியாபாரிகளால், உலகத்திலேயே குறைந்தவிலைக்கு பொருட்களை விற்கும் நிறுவனத்தை எதிர்த்து நிற்க முடியாமல் நொடிந்து போவார்கள். உள்நாட்டு சந்தை சரியத் தொடங்கும், இ - காமர்ஸ் நிறுவனங்கள் இன்னொரு வால்மார்ட்டாக உருவாகும். நாடு நான்கு கால் பாய்ச்சலில் வளரும், மோடியும் என் நாடு வளர்கிறது என்று மார்தட்டி செல்ஃபி எடுத்துக்கொள்வார். ஆனால் தள்ளுவண்டி வியாபாரம், நடைபாதை விற்பனை, சில்லரை வர்த்தகம் என பல வடிவங்களில் வியாப்பித்திருக்கும் சாமான்ய வியாபாரிகளின் நிலை என்னவாகும்...?

-மு.சா. கெளதமன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ