Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த புஷ்பாக்களுக்கு ஏன் இல்லை பெண்கள் தினம்?

ன்று மகளிர் தினம். எல்லாமே கொண்டாட்ட தினங்களாகிவிட்ட காலம் இது. சமூக, பொருளாதார, வாழ்க்கை சமத்துவங்களில் இன்றைய பெண்கள் எந்தளவிற்கு உயரத்தை எட்டிவிட்டனர் என்பதை சொல்கிற நாளாகவே கடந்த பல ஆண்டுகளாக மகளிர் தினம் இருந்து வந்திருக்கிறது.

ஒத்த நிறத்தில் உடைகள் அணிந்து பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்ளும் இந்த நாளை,  உழைக்கும் பெண்கள் குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் தங்கள் வழக்கமான நாட்களில் ஒன்றாகவே கடக்கின்றனர். அவர்களுக்கு மகளிர் தினம் என்பது ஒருதேதி மட்டுமே. அவர்களில் ஒருவர் புஷ்பா.

சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் புஷ்பா, அப்பகுதிகளில் வெகு பிரபலம். பிரபலம் என்றவுடன் புஷ்பாவை மைக்கும் கையுமாக ஏதோ ஒருகட்சியின் மகளிரணி செயலாளர்போல் கற்பனை செய்துகொள்ளாதீர்கள். மகளிரணி செயலாளரோ, கைநிறைய சம்பளம் வாங்கும் அரசு ஊழியரோ அல்லது தனியார்துறையின் மதிப்புமிக்க பணியாளோ அல்ல; ஒரு சாதாரண தினக்கூலி. உழைப்பை மட்டுமே நம்பி வாழும் ஒரு விளிம்புநிலை பெண்மணி.

பெருங்களத்தூரிலிருந்த புதியதாக நாங்கள் சைதாப்பேட்டை வெங்கடாபுரம் பகுதியில் குடியேறியபோது,  எங்கள் வீட்டுக்கு பால்போடும் பெண்மணியாக அறிமுகமானார் புஷ்பா. எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநாளில்,  'வெளியிலிருந்த தண்ணீர் கொண்டுவர ஆள் யாராவது இருக்கிறார்களா?' எனக் கேட்டேன். ”சார் தவளைக்கு 5 ரூபா கொடுக்கறீங்களா... நானே தினம் 4 குடம் எடுத்துவந்து ஊத்தறேன்..." என்றபடியே வந்தார் அந்த பெண்.  ஒத்தை நாடி உடம்பு, மெலிந்த கன்னங்கள், ஒடுங்கிய முகமாக தளர்ந்து காணப்பட்ட அந்தப் பெண்மணியிடம்,  'எப்படிம்மா உன்னால் முடியும்?' என நான் முதலில் மறுத்தேன். என் வீடு மூன்றாம் தளத்தில் இருந்ததும் நான் மறுத்ததற்கு ஒரு காரணம்.

ஆனால், மறுநாள் விடிந்து எழுந்தபோது ஆச்சர்யம், என் வீட்டின் 1,000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி நிரம்பியிருந்தது. அந்நாளில் வாரம் 3 முறை அதை நிரப்பி பணம் பெற்றுக்கொள்வார் புஷ்பா. இது எனக்கு மட்டுமான பணி அல்ல. அந்தப்பகுதியின் பெரும்பாலான வீடுகளுக்கு அவர்தான் ஆபத்பாந்தவன் என அடுத்த சிலநாட்களில் தெரிந்து கொண்டேன். அரசு ஊழியர்களால் நிரம்பிவழியும் அந்தப்பகுதியில் புஷ்பாவின் பணி அவசியமாகவும் இருந்தது அவர்களுக்கு.

 

 காலை 5 மணிக்கு பால்பாக்கெட்டுக்களால் நிரம்பி வழியும் ஒரு போத்தீஸ் துணிக்கடை பையுடன் புஷ்பா சாலையை கடப்பதை பார்ப்பேன். அதே காலை 7.30 மணிக்கு மணிக்கு “அம்மா பால் வெச்சிருக்கேன் எடுத்துக்குங்க...” என எங்கள் வீட்டு வாசலில் அவரது குரல் கேட்கும். இடைப்பட்ட நேரத்தில் அவர் குறைந்தது 4 தெருக்களையாவது கடந்து வந்திருப்பார். பால்பாக்கெட்டை எடுக்க நாங்கள் கதவை திறக்கும்போது அவர் படிக்கட்டில் இறங்கிச்செல்லும் சத்தம் கேட்கும்.

திரும்ப 9 மணிக்கு வீட்டுப்பாத்திரம் தேய்க்க வருவார். எப்போது காலை உணவு எடுத்துக்கொள்வார் எனத்தெரியாது. ஆனால் திரும்ப அலுவலகத்திற்கு செல்ல நாங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மெல்லிதான புன்னகையுடன் திரும்ப எதிர்திசையை நோக்கி சாலையை கடந்து கொண்டிருப்பார். 10 மணியிலிருந்து மதியம் உணவு நேரம் வரை இப்பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்குவது, கடைகளுக்கு செல்வது, கரண்ட் பில் கட்டுவது என சுழன்றுகொண்டே இருப்பார்.

வீட்டை விட்டு நீங்கள் இறங்கி தெருவுக்கு வந்தால் எங்காவது ஒரு இடத்தில் பையுடன் நின்று கொண்டிருப்பார் புஷ்பா. மதியத்திற்குப்பிறகும் ஓய்வெடுப்பதில்லை. அங்குள்ள பல வீடுகளுக்கு வீட்டுவேலைக்கு செல்வதாக என் மனைவி சொல்லக்கேட்டேன். இது புஷ்பாவின் ஒருநாள் ஷெட்யூல் அல்ல... 30 நாட்களும் இந்த பரபரப்பில்தான் கழிக்கிறார்.

சில சமயங்களில் நான் என் மனையிடம் ,“புஷ்பா ஒன்று சாலையில் இருப்பார், இல்லேன்னா வேலையில் இருப்பார்” என சொல்லிச் சிரிப்பேன். இத்தனை வீடுகளிலும் வேலை செய்தாலும் யாரைப் பற்றியும் யாரிடமும் பேசுவதில்லை அவர். பக்கத்து அறையில் இருந்தாலும் சமயங்களில் அவர் வந்துபோனது கூட தெரியாது. ஆச்சர்யமான விஷயமாக இருந்தது எனக்கு.

ஆனால் கடைசி்ப்பாத்திரத்தை கழுவி வைத்த அடுத்தநொடி,  நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென மாடிப்படியை நோக்கி ஓடுவார் புஷ்பா. பல சமயங்களில் பலகாரம் ஏதாவது தரவெண்டுமானால் சில அடி தூரம் பின்னால் ஓடிப்போய்தான் தரவேண்டியிருக்கும். அத்தனை வேகம். 'ஏம்மா பறக்குற...?' என என் மனைவி கேட்டால், "...ஜட்ஜம்மா சொந்தக்காரங்க வந்திருக்காங்களாம்மா... சீக்கிரம் வரச்சொன்னாங்க... அதான்" என்பார்.

மாலைக்குப்பிறகும் புஷ்பா தன் வீட்டுக்கு செல்வது கிடையாது. அப்பகுதியில் பல வீடுகளில் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறார். மாலை பள்ளியை விட்டு வீடு திரும்பும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர் வரும்வரை பாதுகாத்துக்கொண்டிருப்பது அவரது வேலை.

அதன்பிறகும் விடுபட்ட சில வீடுகளுக்கு சென்று வேலைமுடித்து புஷ்பா தன் வீடு திரும்ப மணி 10 ஆகிவிடுகிறது. அன்றும் அப்படித்தான். மகளிர் தினத்திற்காக மனைவிக்கு சேலை எடுத்துக் கொண்டு,  அந்த நேரம் நாங்கள் சாலையை கடக்கும்போது எங்களுடன் வேகமான ஓட்டத்துடன் சாலையை கடந்தார் புஷ்பாவும்.

“ஏன் இப்படி வேகவேகமா கிராஸ் செய்ற” என்ற என் மனைவியிடம், 'லேட்டாகிடுச்சிம்மா புள்ளைங்க சாப்பிடாம காத்திருக்கும்... நான்போய்தான் சமைக்கணும் என்றார். “நேரமாகிவிட்டதால் இன்று சமைக்கமாட்டேன் என அடம்பிடித்து ஓட்டலில் உணவருந்த கட்டாயப்படுத்திய என் மனைவியை புஷ்பாவின் பதில் சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்.

புஷ்பாவிடம் நான் ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம், நம்பிக்கை. இதுவரை எந்த மாதமும் பால்கணக்கை அவர் சொல்லி நாங்கள் செலுத்தியதில்லை. காலண்டரில் குறித்துவைத்த கணக்கின்படி நாங்களே ஒரு எண்ணிக்கையை சொல்லி அதற்கான தொகையை தருவோம். சமயங்களில் கணக்கு தவறாகியதும் உண்டு. மறுநாள் அதை சொல்லித் தரும்போது சிறுபுன்னகைதான் வெளிப்படும் அவரிடமிருந்து.

'நாங்கள் கொடுப்பதை அப்படியே வாங்கிக்கறீங்களேம்மா... நீங்களும் குறிச்சி வெச்சிக்கிட்டா கணக்கை சரிபார்க்க சரியாக இருக்கும். உங்களுக்கு நட்டம் வராதே...' என்று ஒருமுறை கேட்டதற்கு,  "அதெல்லாம் சரியாதான் சார் இருக்கும்" என ஒற்றை வார்த்தையில் நெகிழவைத்தார் எங்களை.

புஷ்பாவுடன் பேசும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது. 'இப்படி ஓடிக்கிட்டே இருக்கீங்களேம்மா... எப்பதான் ஓய்வெடுப்பீங்க...?' என்றேன். “இன்னாங்க பண்றது... என் வாழ்க்கை அப்படி. 20 வயசுல கல்யாணம் ஆச்சு... புதுசுல அவர் நல்லாதான் இருந்தார். நல்லபடியா வெச்சிக்கிட்டார். யார் கண்பட்டதோ போகப்போக தவறான வழிக்குப்போக ஆரம்பிச்சிட்டார்.

ஆரம்பத்துல எப்போதாவது குடிச்சவர் பின்னாடி எப்போதும் குடிக்க ஆரம்பிச்சிட்டார். வேலைக்கு போனா மொத்த வருமானத்திலேயும் குடிக்க ஆரம்பிச்ச பின்னாடிதான் சுதாரிச்சேன். அதுக்குள்ள 2 பிள்ளைங்க பொறந்துட்டாங்க. ஒருகட்டத்துல, 'சம்பாதிக்கிறதை எல்லாம் குடிச்சி உடம்பை கெடுத்துக்கறதைவிட சும்மாவே வீட்ல இரு'ன்னுட்டு நான் வேலைக்கு போக ஆரம்பிச்சேன்.

அதுவரை கடைகளுக்குகூட போய் நின்று பழக்கமில்ல எனக்கு. ஆனா இனி என் வாழ்க்கை அதுதான்னு ஒருநாள் தீர்மானமாச்சு. 25 வருடமா ஓடிட்டே இருக்கேன்” என சென்னை தமிழில் வெள்ளந்தியாக சொன்ன புஷ்பாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பிள்ளைகள்.

“ஆரம்பத்துல சில வீடுகள்ல மட்டும் வேலை செஞ்சேன். ஆனா அது என் குடும்பத்தை தள்றதுக்கு போதலை.... நாமதான் படிக்காம இருந்து வீட்டுவேலைகளை செய்றோம். நம்ம அப்பா அம்மா பண்ண தப்பை நாமளும் செய்திடக்கூடாதுன்னு பிள்ளைங்க படிப்பிற்காக இன்னும் சில வீடுகள்லேயும் வேலைக்கு போனேன்.

சம்பளத்திற்காக வழக்கமான ஒரு வேலைக்குபோனா சரிப்படாதுன்னு எங்க பகுதியிலும் சுற்றுப்புறத்திலும் பால் போடறது, தண்ணிகொண்டுபோய் கொடுக்கிறது. மற்ற எந்த வேலையையும் செய்ய தயாராகிட்டேன். வேலைநேரத்தையும் கூட்டிக்கிட்டேன். காலையில் பாலில் துவங்கி வீட்டுவேலைகள் முடிச்சிட்டு நான் வீடு திரும்ப ரொம்ப லேட் ஆகிடும். பிள்ளைங்களை சரியாக பார்க்க முடியாது, அவங்களோட சரிவர பேசமுடியாதுங்கற கவலை எனக்கு உண்டு. ஆனா அதைவிட முக்கியம் அவங்க எதிர்காலம். அதான் ஓடிட்டே இருக்கேன்.

'இப்படி ஓயாம ஓடிட்டு இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்.. நாமென்ன ஆம்பளைங்களா....? ' என என் மனைவி குறுக்கே புகுந்து ஒருகேள்வியை எழுப்பினாள். "உண்மைதாம்மா.. ஆரம்பத்துல அப்படிதான் இருந்தது. ஆனா இப்படிதான் இனி வாழமுடியும்னு ஆகினப்பிறகு எனக்கு வேற வழி என்ன இருக்கு சொல்லுங்க... ஆனா என் இத்தனை வருட கஷ்டம் வீண்போகலை.. பையனைதான் 10வது படிப்போட நிறுத்திட்டு ஸ்ரீபெரும்புதுார்ல ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினேன்.

இந்தக்காலத்துல பொண்ணுங்க படிக்காம இருந்தா சமூகத்திலேயும் போற இடத்திலேயும் மதிப்பு இருக்காது. அதனால் அவளை விடாம தொடர்ந்து படிக்கவெச்சென். இப்போ ராணி மேரிக்கல்லுாரியில் படிக்கிறாள். பிள்ளைங்க வளர்ந்து அடுத்த நிலைக்கு வந்திட்டதால இப்பொவெல்லாம் நான் செய்ற வேலைகள் எத்தனை கஷ்டமானதா இருந்தாலும் வலி தெரியறதில்லை” என்றார்.

'அடுத்த வாரம் (இந்த நிகழ்வு நடந்தது கடந்தவாரத்தில் ஒருநாள்) மகளிர் தினம் வருது தெரியுமா..?' என்று நிறுத்தினேன். மகளிர் தினம்னா... ஆமா ஆமா.... என் பொண்ணு சொன்னாள். அதுக்குதான் காலேஜ்ல எல்லாரும் ஒரே டிரஸ் போட்டுட்டு வரணுமாம். அதுக்குத்தான் ஜட்ஜ் அம்மாகிட்ட கொஞ்சம் பணம் கேட்டிருக்கிறேன். நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க... இன்னிக்கு அவங்ககிட்ட கேட்கணும்.... அப்புறம் வர்றேங்க...." என்றபடியே விறுவிறுவென பால்பாக்கெட்டுகள் நிரம்பிய தன் கூடையை கையிலெடுத்தபடி கிளம்பினார் புஷ்பா.

ஆண்கள் தங்களது கடமைகளை மறந்து,  தங்கள் வாழ்வின் பற்றுதல்களிலிருந்து விலகி நிற்கும்போது புஷ்பா போன்றவர்களின் உழைப்பு, சமூகத்திற்கும் அவர்களுக்குமான தேவையாக மாறுகிறது. சமூக கட்டமைப்பின் மையத்தில் நின்றுகொண்டு உரிமைமுழக்கம் எழுப்பும் பெண்கள்,  தங்கள் வீடுகளிலிருந்து அந்த முழக்கத்தை துவக்கும்போது ஒருவேளை புஷ்பாக்களுக்கு ஓய்வு கிடைக்கலாம். அதுவரை மகளிர் தினங்கள் புத்தாடைகள் உடுத்தி பரிசுகள் பரிமாறிக்கொள்ளும் மேலைநாகரீகத்தின் வழக்கமான கொண்டாட்டமாகவே இருக்கும்.

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close