Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அதிபரின் அதிகாரத்துக்கு எங்கே 'செக்' வைக்கிறார்கள் தெரியுமா?!

டந்த சில வருடங்களில் கிடுகிடுவென வளர்ந்து நம் வாழ்வில் வலுவாக இடம் பெற்றுவிட்ட சமூக ஊடகத்திற்கு நாணயம் போல் இரண்டு புறங்கள்.. உலகளாவிய செய்திகள் பரவலாக, படு விரைவாக சென்று சேர்வது நாணயத்தின் ஒருபுறம் எனில், தவறான புரிந்து கொள்ளல்களும் அது சார்ந்த நேர விரய விவாதங்களும் மற்றொரு புறம்.

சமீபத்திய உதாரணம் – அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளில் ஒருவரான அண்டோனின் ஸ்காலியாவின் அகால மரணத்தைத் தொடர்ந்து இந்திய அமெரிக்கரான ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுவிட்டதாக சமூக ஊடங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பரவலான புரிதல்.

உண்மையல்ல அது.

அதற்குள் செல்லும்முன்னால், இது சார்ந்த அமெரிக்க அரசியலமைப்பை விரைவாக ஒரு மேற்பார்வை பார்த்து விடலாம்.

காங்கிரஸ், அதிபர், உச்ச நீதிமன்றம் என மூன்று பிரிவுகள். ஒன்றை மற்றது கண்காணிக்க இயலும். இதுதான் அடிப்படை அமைப்பு.

காங்கிரஸ் நமது பார்லிமென்ட்டுக்கு நிகரானது. இதில் ஹவுஸ், செனட் என இரண்டு உட்பிரிவுகள்.

ஹவுஸ் பிரதிநிதிகள் தத்தம் தொகுதிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 50 மாநிலங்களில் மொத்தம் 435 தொகுதிகள். ஒரு மாநிலத்தில் எத்தனை தொகுதிகள்  இருக்கும் என்பது அந்த மாநிலத்தின் மக்கள் தொகையைச் சார்ந்தது. இதனால், கலிபோர்னியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் அதிக தொகுதிகளும், வெர்மாண்ட் போன்ற குட்டி மாநிலங்களில் சில தொகுதிகளும் இருக்கிறது. இப்படி இருப்பதால் மாநிலங்களுக்கு சமமான அளவில் பிரநிதித்துவம் கிடைப்பதில்லை. இதை நிவர்த்தி செய்கிறது காங்கிரஸின் மறுபிரிவான செனட். அளவு, மக்கள்தொகை என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், மாநிலத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் என மொத்தம் 100 செனட்டர்கள். செனட்டரின் பதவி காலம் 6 வருடங்கள். மீண்டும், மீண்டும் போட்டியிட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் ஹவுஸ் பிரதிநிதியும், செனட்டரும் பதவியில் இருந்து கொள்ளலாம்.

சட்டங்கள் உருவாக்கப்படுவது இப்படி கோர்வையாக நடக்கும். ஹவுஸ் பிரதிநிதிகள் அல்லது செனட்டர்கள் ஒருவரோ அல்லது பலரோ இணைந்து மசோதா கொண்டு வர அது வாக்கெடுப்பில் ஹவுஸ், செனட் இரண்டிலும் வெற்றி பெற்றால், அது அதிபரின் கையெழுத்திற்கு அனுப்பப்படும். அவர் கையொப்பமிட்டதும் உருவாகிய சட்டத்தை வலியுறுத்த வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை.

அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் இதற்காக கொடுத்திருக்கும் வழிமுறைகளில் ஒழுங்கு நூறாண்டுகளுக்கும் மேலாகத்  தொடர்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பரில் வரும் முதல் திங்கள் கிழமை தாண்டிய செவ்வாய் அன்று தேர்தல். வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளர் ஜனவரி 20 மதியம் 12 மணிக்கு பொறுப்பேற்றுக் கொள்வார். ஒருவேளை 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனில், அந்த வருடங்களில் மட்டும் 21ம் தேதி பொறுப்பேற்பு நடக்கும்.

அமெரிக்க அதிபர் என்றால் வானாளாவிய அதிகாரம் இருப்பதான பிம்பம் உண்டு. ஒருவிதத்தில் அது உண்மையும் கூட. காங்கிரஸ் நிறைவேற்றி தன்னிடம் கொண்டு வரும் சட்டங்களை ஒப்புதல் அளிக்க மறுக்கும் உரிமை அதிபருக்கு உண்டு. முப்படைகளின் தலைமைப் பொறுப்பு இருந்தாலும், தான் நினைத்தபடி போர் தொடங்கும் அதிகாரம் அதிபருக்கு கிடையாது. காங்கிரஸிடம் முதலில் அனுமதி வாங்கியாக வேண்டும். இப்படி ஒருவரை மற்றொருவர் கண்காணிக்கும் பொறுப்பில் வைத்திருப்பது திட்டமிட்டு செய்யப்படும் பணிகளுக்குப் பொருந்தலாம். ஆனால், அவசர நிர்வாகங்களுக்கு இது போன்ற Checks and Balances சரிப்பட்டு வராது என்பதால், அரசியலமைப்புத்திட்டம் அதிபருக்கு சிறப்பான அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. Executive Order ஒன்றை சமர்ப்பித்துவிட்டு அதிபர் எதை வேண்டுமானால் செய்ய முடியும்.

சரி, சர்வாதிகார எண்ணம் கொண்ட ஒருவர் பசுத்தோல் போர்த்திய புலியாக அதிபராகிவிட்டு அதன் பின்னர் காங்கிரஸை கண்டுகொள்ளாமல் தன் விருப்பப்படி சட்டங்களை இயக்கி சட்டாம்பிள்ளை விளையாட்டு விளையாடினால் ? அதற்கு தெளிவான தீர்வைக் கொடுக்கிறது அரசியலமைப்பு. அதிபரை பதவியில் இருந்து கீழிறக்கும்  அதிகாரம் காங்கிரஸுக்கு உண்டு.
 
 
அதிபர் சார்ந்திருக்கும் கட்சி காங்கிரஸில் பெரும்பான்மையாக இருந்தால் அவர் நினைக்கும் திட்டங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இலையெனில், ஒவ்வொரு சட்டங்களை நிறைவேற்ற படாதபாடுபட வேண்டிவரும். அதிபர் பதவி காலம் 4 வருடங்கள் என அதிகபட்சம் இரண்டு முறை பதவி வகிக்கலாம்.

     

மூன்றாவது அமைப்பிற்கு வரலாம்.

ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றம். ஒருவர் நீதிபதி ஆக வேண்டுமெனில், அவரை அதிபர் நியமிக்க வேண்டும்; காங்கிரஸின் செனட் பிரிவு நியமனத்தை உறுதிப்படுத்த வேண்டும். காங்கிரஸில் இருக்கும் ஹவுஸ் பிரதிநிதிகளுக்கோ, செனட்டர்களுக்கோ, அதிபருக்கோ இருப்பதைப் போன்ற கால எல்லை என்பது நீதிபதிகளுக்கு கிடையாது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுவிட்டால், அவர் தானாக ஓய்வெடுப்பதாக அறிவித்தால் மட்டுமே அந்த பதவியில் இருந்து விலக முடியும். அல்லது இறந்து போனால்.

இன்றைய நிலவரப்படி -

    அதிபராக தனது கடைசி எட்டாவது வருடத்தில் இருக்கிறார் ஒபாமா

    அவரது டெமாக்ரடிக் கட்சி காங்கிரஸில், குறிப்பாக செனட்டில், சிறுபான்மை இடத்தில் இருக்கிறது.

    நீதிபதி ஸ்காலியா வேட்டையாடும் விடுமுறைக்காக சென்ற மாதம் சென்றிருந்தபோது அகால மரணமடைகிறார்

    அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒபாமா ஸ்காலியாவின் இடத்தின் புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும்.

    இது அதிபரின் கடைசி வருடம் என்பதால் அது கூடாது; புதிய அதிபர் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்கிறார்கள் ரிபப்ளிக்கன் கட்சியைச் சார்ந்தவர்கள். இது அரசியலமைப்புச் சட்டத்தில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் கடமை. அதைச் செய்யவிடுங்கள் என்கிறார் ஒபாமா.

    இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதில் வெள்ளைமாளிகைக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் உங்களது செனட்டரைக் தொலைபேசியில் அழைத்து அழுத்தம் கொடுங்கள் என்ற பதிவு வெளியாகியிருக்கிறது. தனது கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், மக்கள் மூலமாக செனட்டர்களை வழிக்கு கொண்டுவரலாம் என ஒபாமாவின் நிர்வாகம் நினைப்பது தெரிய வருகிறது. இந்த சர்ச்சை விடா + கொடா கண்டனாக தொடரும் என்பது தெளிவு.


இது இப்படியிருக்க, ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுவிட்டார் என்று பரவலாக புரிந்து கொள்ளப்பட்டது எப்படி ? 2013 ல் ஸ்ரீனிவாசன் டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவின் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதை அப்போதைய செனட் முழுமையான ஆதரவுடன் உறுதிப்படுத்தவும் செய்தது. பகவத் கீதையில் மேல் கை வைத்தபடி, அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டதாக சமூக ஊடகங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஒபாமாவின் லிஸ்டில் ஸ்ரீனிவாசன் இருக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம், ஆனால், ஒபாமாவிற்கு அவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது இப்போதைய கேள்விக்குறி. தடைகளை மீறி, ஸ்ரீனிவாசன் உச்ச நீதிமன்றத்தின் இடத்தை அலங்கரித்தால் அது இந்தியாவிற்கு பெருமை; அமெரிக்காவிற்கு அதைவிட இன்னும் பெருமை!


- அண்டன் பிரகாஷ் 
   
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ