Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கருணையுடன் கோழிக்கோடு!‘

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தின் கலெக்டரான பிரசாந் நாயரின் நிர்வாகத்தின் கீழ், கோழிக்கோட்டின் புகழ் சர்வதேசத்தையும் தொட்டுவிட்டது. அனைத்திற்கும் காரணம் பிரசாந் நாயர் ஆரம்பித்த 'கருணையுடன் கோழிக்கோடு அமைப்பு'.

கேரளாவில் இருக்கும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவிற்கு தங்கள் பகுதிகளில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.- இதுதான் இந்த 'கருணையுடன் கோழிகோடு' திட்டம். இதன் கீழ் கடந்த சில மாதங்களில் மனநலம் பாதிகப்பட்டவர்களுக்கான சிகிச்சை மையம், சிறுவர்களுக்கான இல்லங்கள், அவர்களுக்கு சிறப்பான கல்வி, தங்களுடைய கிராமங்களில் இருக்கும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை தரத்தினை உயர்த்துதல் என  'யார்வேண்டுமானலும், யாருக்கும் உதவலாம்' என்ற திட்டம்தான் கோழிக்கோட்டின் ஹைலைட்.

இப்படி உதவி செய்வபவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக இந்த கருணையுடன் கோழிக்கோடு இருக்கும்.

கடந்த ஆண்டு, ஒடிசாவை சேர்ந்த ஒரு மாணவர்,  இந்த அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கோபியை பார்க்க வந்தார். இதற்கு முன்னால் அவர் கோபியை பார்த்ததில்லை. கோபியை சந்தித்தவர்,  ஒரு கதையையும் சொல்லியுள்ளார். ‘'கடந்த இருபது வருடங்களுக்கு முன்பாக என்னுடைய தாயாரின் கல்விக்கு நீங்கள் உதவி செய்தீர்கள். அதனால் என் அம்மா நல்ல நிலைமைக்கு வந்தார். அவருடைய மகன் இப்போது நானும் நல்ல நிலைக்கு வந்துவிட்டேன். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் பாலியல் தொழில் செய்துவந்த எங்கள் குடும்பம் இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கிறது என்றால், நீங்கள் செய்த உதவி தான்'' என சொல்லியிருக்கிறார். வந்தவர் இப்போது டெல்லியில் கலெக்டராக இருக்கிறார்.

இப்படி போகும் இடமெல்லாம் உதவிகள் மூலம் இன்னும் புகழை பெற்றுக்கொண்டே இருக்கிறது இந்த 'கருணையுடன் கோழிக்கோடு'.

இந்த அமைப்பில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் கூட,  பேருந்து வசதியில்லா இடங்களுக்கு மட்டும் சவாரி போகிறார்கள். மற்ற நேரங்களில் பயணிகளிடம் கனிவாக பேசி, அவர்களை பஸ்ஸில் ஏற்றி விடுகிறார்கள். பயணிகளுக்கு செலவும் மிச்சம். ட்ராஃபிக்கும் குறையும்.

கேரளாவிற்கு சுற்றுலாவிற்காக வரக்கூடிய பயணிகள் இப்போதெல்லாம் தாங்களும் ஆர்வமாக வந்து,  இந்த அமைப்பில் சேர்ந்து கொண்டு, தங்களால் இயன்ற அளவில் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்.
    
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினில் இருக்கும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான அமைப்பு,  'Inspirational Global Project' ஆக இந்தியாவை சேர்ந்த கருணையுடன் கோழிக்கோட்டினை தேர்வு செய்திருக்கிறது. ஆசியாவில் தேர்வு செய்யப்பட்ட மூன்று திட்டங்களில் இதுவும் ஒன்று. இதன் மூலம் கோழிக்கோட்டின் புகழ் இன்னும் உயரும்.

‘'குரலற்றவர்களுக்காக குரல் கொடுங்கள். இதுதான் எங்களுடைய திட்டத்தின் நோக்கம். சமூகத்தில் உதவுபவர்கள் இருக்கும் வரையில் இந்த அமைப்பு இன்னும் எல்லைகளை நீட்டிக்கொண்டே போகும்'’ என்கிறார் கலெக்டர் பிரசாந் நாயர்.

-உ.சிவராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ