Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலங்களைக் கடந்த மனிதன் காரல் மார்க்ஸ்!

ளும் வர்க்கத்துக்கும் அரசுகளுக்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால்ம், பல நாடுகளில் இருந்தும் துரத்தப்பட்ட அந்த மாபெரும் சிந்தனையாளர், அப்போது லண்டனில் குடியிருந்தார். அவரது மனைவி வசதியான ஒரு பிரபு குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் காதலுக்குரியவரை மணந்தபோது வறுமையையும் தன் வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டார். நிரந்தரமற்ற வேலை, ஆளும் வர்க்கம் கொடுத்த நெருக்கடிகள், கொன்று தின்னும் வறுமை என வாழ்ந்தாலும் அதற்கிடையிலும் காதலை வளர்க்கத் தவறவில்லை அந்த லட்சியத் தம்பதிகள்.

ஒருநாள் இரவு குழந்தைகள் பசியினால் வீறிட்டு அழுதன. அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் மார்புகளில் பால் சுரக்கவில்லை; ரத்தம்தான் சுரந்தது. தொடர்ச்சியான வறுமை துரத்திய நிலையில்,  ஒரு குழந்தை இறந்தபோது, அந்தக் குழந்தையின் உடலைப் புதைக்க அந்த மாபெரும் சிந்தனையாளனிடம் பணமில்லை. தன் மேல்கோட்டை விற்றுதான் தன் பிரியத்துக்குரிய குழந்தையின் உடலைப் புதைத்தார். நம்மைப் பொறுத்தவரை கோட் என்பது ஆடம்பரமாக இருக்கலாம். ஆனால் குளிர் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் கோட் அத்தியாவசியம். தனது கோட்டை விற்றுக் குழந்தையைப் புதைத்த அந்தத் துயரத்துக்குரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்  காரல் மார்க்ஸ்!

உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் எப்போதும் காரல்மார்க்ஸ்க்கு ஒரு முக்கிய இடமுண்டு. வறுமையும் நோயும் விடாது துரத்திக்கொண்டிருந்த காலத்தில்,  மார்க்ஸ் தனது ஏழ்மை குறித்து சிந்தித்து அதற்கான தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற தொழிலாளர் வர்க்கம் குறித்து அவர் சிந்தித்தார். தனக்கு முன்பிருந்த தத்துவவாதிகளின் சிந்தனைகளைக் கரைத்துக் குடித்தவர்.

‘’எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன. நமது வேலை உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திப்பதில்லை, மாறாக உலகத்தை மாற்றியமைப்பதே!” என்றார். அதற்கு என்ன செய்வது? “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை மார்க்ஸ் எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.

‘’ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற மார்க்ஸ், உலக மனிதகுலத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தார். ஒவ்வொருகாலகட்டத்திலும் மனித இனம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, இந்த மாற்றங்களுக்கு எப்படி மனித உழைப்பு காரணமாக இருக்கிறது என்ற ஆழமான ஆய்வுகளை முன்வைத்தார். உழைப்பினால் கிடைத்த பயன்களை அனைவரும் சமமாகப் பகிரும்வரை பேதங்கள் இருந்தது இல்லை. ஆனால் பகிர்ந்ததுபோக, மிஞ்சியிருந்தது ‘உபரி மதிப்பு’ என்றும் இந்த உபரி மதிப்பே மீண்டும் ‘மூலதனம்’ ஆகிறது என்றும் மூலதனத்தின் மூலமே வர்க்கங்கள் தோன்றின என்றும் வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்தார்.

இப்படியான ஆய்வு முடிவுகளை வந்தடைவதற்கு மார்க்ஸ் உழைத்த உழைப்பு கொஞ்சநஞ்சமல்ல. அதற்கு அவர் கொடுத்த விலைகளும் கொஞ்சமல்ல.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவம், மார்க்ஸின் வாழ்க்கையில் ஒரு சின்ன துயரக்கீற்று மட்டுமே. தன் காதல் கணவன் மாபெரும் சிந்தனையாளன் என்பதைப் புரிந்துகொண்டு, எல்லாவிதத் துயரங்களையும் ஏற்றுக்கொண்ட ஜென்னி மார்க்ஸ், உலகின் அற்புதமான காதலிகளின் வரலாற்றில் நிரந்தரமாக நினைவுகூரப்படுவார், அதேபோல்தான் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் இருவருக்கும் இடையிலான நட்பும்கூட. ஏங்கெல்ஸும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். மார்க்ஸின் சிந்தனைகளும் நூல்களும் வெளிவருவதற்குப் பொருளாதார அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் ஏங்கெல்ஸே.

மார்க்ஸ் பல நாடுகளில் இருந்து துரத்தப்பட்டார். வாடகை கொடுக்க முடியாமல் பல வீடுகளில் இருந்தும் துரத்தப்பட்டார், ஆனாலும் அவர் தன் சிந்தனைகளையோ செயல்பாடுகளையோ நிறுத்திக்கொள்ளவில்லை. மார்க்சின் சிந்தனையால் இந்த மனித குலத்துக்குக் கிடைத்த நிகரற்ற அறிவுக் களஞ்சியம் ‘மூலதனம்’. அதற்குப் பின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உலகின் பல பாகங்களில் இருந்து உருவாகிவிட்டபோதும் ‘மூலதனம்’ எப்போதும் உலகின் ஆகச் சிறந்த நுால்களில் ஒன்றாக இன்றும் இருக்கிறது.

உற்பத்தி உறவுகள், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், அரசு என்னும் வர்க்க நலன் பேணும் கருவி, கருத்தை முதலாகக் கொண்டுதான் சமூகம் இயங்குகிறது என்னும் பார்வைக்கு மாறாக பொருளின் அடிப்படையில் சமூக மாற்றத்தை ஆராயும் பொருள்முதல்வாதம், மதம் மனிதனுக்கு அபினாக இருந்ததோடு எப்படி இரக்கமற்ற உலகத்தின் இரக்கமுள்ள ஆன்மாவாக மாறியது என்னும் சிந்தனை முன்னெடுப்பு, அந்நியமாதல் என மார்க்சின் ஆய்வுகள் விரிந்து பரந்தவை. மார்க்சின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவசியம் படித்து விவாதிக்கப்பட வேண்டியவை அவரது சிந்தனைகள். ‘தொழிலாள வர்க்கம் ஒன்றிணைந்து புரட்சி செய்து,  முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் கருவியான அரசையும் தூக்கியெறிந்து, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும்’ என்ற அவரது கனவை லெனின் ரஷ்யாவில் நடத்திக்காட்டினார்.

சோவியத் யூனியனின் அனுபவங்களில் இருந்து சற்றே வேறுபட்டு, உள்நாட்டு அனுபவங்களுடனும்,  படிப்பினைகளுடனும் பாட்டாளி வர்க்கத்தையும், விவசாய வர்க்கத்தையும் ஒன்றிணைத்து சீனாவில் புரட்சியை ஏற்படுத்தினார் மாவோ. வியட்நாம், கியூபா எனப் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். எல்லா நாடுகளிலும் மார்க்ஸ் விரும்பியபடி ஒரு முழுமையான, வர்க்கபேதங்கள் அற்ற சமுதாயம் உருவானது என்று சொல்ல முடியாது. சோவியத் யூனியன் உடைவு என்பது உலகம் எங்கிலும் மார்க்சியச் சிந்தனையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் சோர்வை ஏற்படுத்தியது. ஆனாலும் 90களுக்குப் பிறகு உருவான உலகமயமாக்கலும் புதிய பொருளாதாரக் கொள்கையும் எந்த அற்புதங்களையும் விளைவிக்கவில்லை.

விவசாயிகளின் தற்கொலை, அந்நிய மூலதனங்கள் உள்ளூர்த் தொழிலாளர்களைச் சுரண்டுவது, முன்னேறிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கொடூரமான நுகர்வுக் கலாசாரம், சுற்றுச்சூழல் சீர்கேடு, ஏகாதிபத்தியத்தின் குழந்தையாய் வளர்ந்துள்ள மதத் தீவிரவாதம் ஆகியவை முதலாளித்துவத்தின்மீது கடுமையான விமர்சனங்களைத் தற்போது ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்கமுடியாது.

மார்க்ஸின் சிந்தனைகள் எப்போதும் இறுதியானவை. மார்க்ஸுக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றிய மார்க்சியச் சிந்தனையாளர்கள் காலத்தின் பாடங்களைக் கணக்கெடுத்து, மார்க்சியத்தைச் செழுமைப்படுத்தத்தான் செய்கின்றனர். ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எந்தத் தியாகங்களையும் செய்யும் செம்படை எல்லா நாடுகளிலும் இருக்கிறது.

மனிதகுலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார். ஏனெனில் அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றுக்கும் அப்பால் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகச் சிந்தித்த மாமனிதன்.

இன்று அவரது நினைவுநாள்!

- ரீ.சிவக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ