Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்க்கி என்றால் கசப்பு!

தாய்தான் அனைவரையும் படைப்பாள். மாக்ஸிம் கார்க்கி தாயைப் படைத்தவர். ஆம். தாய் நாவலைப் படைத்த மாக்ஸிம் கார்க்கி,  எதார்த்த எழுத்துக்குச் சொந்தக்காரர். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை படைப்பிலக்கியத்தில் கொண்டுவர முடியுமா? முடியும் என நிகழ்த்திக் காட்டியவர் கார்க்கி.

மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கடந்து வராத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. உலக வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான நாவல் அது. உலகின் தலைசிறந்த 100 நாவல்கள் என்றால் அதில் தாய்க்கு நிச்சயம் இடம் உண்டு. எதார்த்தவாத இலக்கியம் என்றால் அந்த 100 நாவல்களில் முதல் இடம் தாய்க்கு உண்டு.

அழகியல் உணர்வும், மேட்டுக்குடி மக்களின் மனப் போராட்டங்களுமே செவ்விலக்கியங்கள் எனப் போற்றப்பட்டு வந்தன. அரசர்கள், படித்தவர்கள் காதலில் மருகும் கதைகள் அன்றைய சிறந்த இலக்கியங்களாக இருந்தன. இன்னொரு பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளின் விதிகளை நொந்தபடி செல்லும் கண்ணீர் காவியங்கள் இருந்தன. இந்த நேரத்தில் தொழிலாளர்களின் பிரச்னைகளையும், அதற்கான போராட்ட ஆயத்தங்களையும் சொன்ன முதல் நாவல் இதுதான். ‘இழப்பதற்கு அடிமைத்தனத்தைத் தவிர வேறு ஏதும் அற்றவர்கள் நாம்’ என்கின்றன அதில் வரும் பாத்திரங்கள். ஆலைத் தொழிலாளியின் மகனான பாவெல்,  புரட்சிகரமான போராட்டத்தை வழிநடத்தும் கதைதான் தாய்  நாவலின் மையம்.

இதிலே தாய் எங்கே வந்தாள்? தொழிற்சாலையில் அநீதி நடக்கிறது. தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலிக்குக் கசக்கி எறியப்படுகிறார்கள். ஆனால், அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்காத ஒரு தாய் எப்படி அந்தப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செலுத்துகிறாள் என்பதுதான் நாவலின் முழு ஆதாரமாக இருக்கிறது. தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தன் மகன், தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுவதையும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்காகப் போராடுவதையும் அறிந்து, அவர்களுக்குத் தேநீர் பரிமாறுவதில் ஆரம்பிக்கிறது அவளுடைய பங்களிப்பு. தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து உபசரிக்கிறாள். ஒரு கட்டத்தில் தொழிலாளத் தோழர்கள் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களின் போராட்டத்தை ஏற்று நடத்தும் வேலைகளை அவரே செய்கிறார். ‘நான் சிறையில் இருந்தாலும் என் கரங்கள் வெளியே இருக்கின்றன’ எனத் தன் தாயைப் பற்றிச் சொல்கிறான் சிறையில் இருக்கும் பாவெல்.

உலகத் தொழிற்சங்கங்களின் பைபிளாக தாய் நாவல் இன்றும் பேசப்படுகிறது.

மனிதன் பிறந்தான், கிழவி இஸெர்கில், ஜிப்ஸி, வழித்துணைவன் போன்ற இவருடைய கதைகள் காலகட்டத்தைப் பிரதிபலித்தவை மட்டுமல்ல; காலம் கடந்தும் நிற்பவை.

ரயில்வே ஊழியர், செருப்பு தைப்பவர், விவசாயி என கார்க்கிக்கு பல முகங்கள் உண்டு. எழுத்தில் அந்த முகங்கள் ரத்தமும் சதையுமாகப் பிரதிபலித்தன.

இவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத்தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்க்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம்.

அன்றைய ரஷ்ய மன்னர் ஜார். மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அதில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்க்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்க்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்க்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

பிறகு ரஷ்யப் புரட்சியை வழி நடத்திய லெனினைச் சந்தித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்க்கியால் எழுதப்பட்டதுதான் தாய் நாவல். உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.

இன்று உலகின் பல பல்கலைக்கழகங்களால் பரிந்துரைக்கப்படும் தாய் நாவலை எழுதிய கார்க்கி, பள்ளிக்கூடமே சென்றதில்லை.

1868 மார்ச் 16, அவருடைய பிறந்தநாள்.

-தமிழ்மகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close