Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு டன் ஆயிரம் ரூபாய் எத்தனை கோடி ? கிறுகிறுக்க வைக்கும் கன்டெய்னர் கணக்கு!

தேர்தல் காலத்து தமிழக அரசியலை,  மனசாட்சியுள்ள ஒரு மனிதனாக இருந்து மட்டும் பார்க்காமல், 'இப்படிப் பண்றீங்களேப்பா' என்று கொஞ்சமும் மனம் பதைக்காமல், அதையும் தாண்டி வெளியில் வந்து பாருங்கள்... எத்தனை புதுப்புது ஆராய்ச்சிகள், எத்தனை புதுப்புது தகவல்கள் இவர்கள் (ஆமாம், யார் இவர்கள் என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள்தானே?!) மூலமாக நமக்குக் கிடைக்கின்றன என்பது தெரியும்.

இதோ அவர்களே சொல்கிறார்கள் கேளுங்கள்...

"ஆயிரம் ரூபாய் நோட்டாக இருந்தால் ஒரு கோடி ரூபாய்க்கு, 17 கிலோ எடையிருக்கும். நோட்டை எண்ண வேண்டியதில்லை. பண்டல் கணக்கும் பார்க்க வேண்டியதில்லை. அப்படியே தூக்கி எடை மெஷின்லே வைச்சுட்டோம்னா போதும். பெட்டியில எவ்வளவு கோடி இருக்குன்னு தெரிஞ்சுடும். அதுவே ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுகளாய் இருந்தால் ஒரு கோடி ரூபாய்க்கு 35 கிலோ எடையைக் காட்டும். நூறு ரூபாய்க் கட்டுன்னா 114 கிலோ எடையைக் காட்டும். அது ஓவர் லோடுங்கறதால இப்போ அதை நாங்கள் 'லைக்' பண்றதில்லை. இப்பல்லாம் காலம் மாறிடுச்சு இல்லையாங்க" -இது நோட்டுகள் குறித்த தெளிவான அரசியல் (அனுபவ) ஆய்வறிக்கை முடிவுகள்.

சரி, இந்த கன்டெய்னர்ல பணம் வருகிறது, போகிறது என்கிறார்களே, அது என்ன கணக்கு ? அதை எப்படிக் கணக்குப் பண்ணுவார்கள்? நம்முடைய இந்த கேள்விக்கு கன்டெய்னர் மூவ்மென்ட்டில் எக்ஸ்பர்ட்கள் சிலரை அறிமுகம் செய்து வைத்து, 'அந்த விபரங்களில் இவர்கள் சமர்த்து' என்று இருவரை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார் அந்த எக்ஸ்பர்ட் சோர்ஸ்.

அவர்கள் வார்த்தையிலிருந்து அப்படியே...

"பொதுவா கன்டெய்னர் என்றால் மொத்தம் மூன்று ரகங்கள்தான் இருக்கிறது.  20 ஃபீட், 40 ஃபீட், 60 ஃபீட். இதில் 20 மற்றும் 40 ஃபீட் கன்டெய்னர்களைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம். மெட்ராஸ் ஹார்பார்ல,   ஷிப்பிங் மூலமாக நிறைய கன்டெய்னர்களை இறக்குவாங்க, நீங்க பார்த்திருக்கலாம். அதில் துணிகள், கம்ப்யூட்டர்கள் போன்றவைதான் அதிகமாக வரும். அதாவது உள்ளூர் சரக்குக் கப்பல்களில் இப்படித்தான் வரும். அதுவே பாரீன் ஷிப்ஸ் என்றால், அதில் வரக்கூடிய பொருட்கள் ரொம்பவும் காஸ்ட்லியாக இருக்கும், அதனால் அது மட்டும் 60 ஃபீட் கன்டெய்னரில் ஏற்றக்கூடிய பெட்டிகளாக இருக்கும்.

அதே கதைதான் நேஷனல் ஹைவேஸ் கதையும். 20 ஃபீட் கன்டெய்னர்கள் என்றால், அதில் பெரிய பாக்ஸாக இருந்தால் மூன்றும், சின்ன பாக்ஸாக இருந்தால் நான்கும் ஏற்றலாம். 40 ஃபீட் என்றால் இதேபோல் இன்னொரு மடங்கு கூடுதலாய் ஏற்றலாம். 60 ஃபீட் கன்டெய்னர் என்றால், அதே அளவு கணக்கைக் கூட்டிக் கொள்ள வேண்டியதுதான். பொதுவாகவே கன்டெய்னர் கூட்ஸ் என்றாலே எந்த இடத்திலும் ஓப்பன் பண்ணிக் காட்ட வேண்டியது இருக்காது. ஏனென்றால், அவ்வளவு பெரிய கூட்ஸின் பெட்டிகளின் 'லாக்' கை சாதாரணமாக ஓப்பன் செய்து டோல்கேட்களில் காட்டிக் கொண்டிருக்க முடியாது. ஏதோ கன்டெய்னர் போகிறது... அது யாரோ ஒருவரின் கம்பெனி கன்டெய்னர் அவ்வளவுதான் என்ற அளவில்தான் செக்கிங் ஷோவே இருக்கும். அதிகமாக அதுபற்றிக் கேட்டால் கம்பெனி பில்லைக் காட்டுவதோடு, வழக்கமாக 'கொடுப்பதை' விட கொஞ்சம் கூடுதலாய்க் கொடுத்து விட்டு கன்டெய்னரை அங்கிருந்து கொண்டு போய் விடலாம், அவ்வளவுதான் ரொம்பவும் ஈசி. பெரிய பாக்ஸ் கன்டெய்னர்ல ஒண்ணே முக்கால் டன் எடையை டைட் பண்ணி ஏத்தலாம்... சின்ன கன்டெய்னர்னா ஒரு பாக்ஸில் முக்கால் டன் (750 கிலோ) ஏத்தலாம்.  என்றனர் அந்த இருவர்.

லேசாக தலை சுற்றலுடன் என்னவோ செய்வது போலிருந்தாலும், விஷயத்தை தெரிந்து கொள்வதுவரை 'மனமே கட்டுப்படு' என்று உள்ளுக்குள் ஆறுதல் சொல்லி விட்டு அடுத்த ஒரு சந்தேகத்தையும் கேட்டறிந்தேன்.

"பொதுவாகவே சிட்டியாக இருந்தாலும், நேஷனல் ஹைவேஸ் ஆக இருந்தாலும் 60 ஃபீட் கன்டெய்னரை விட மாட்டாங்களே... எனக்குத் தெரிந்து ஒருமுறை ஶ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து சாம்பிள் ராக்கெட்டுகளை,  மிகுந்த பாதுகாப்புடன் போலீஸை எல்லாம் போட்டு இரவில்தான் 60 ஃபீட் கன்டெய்னரில் அனுப்பி வைத்தார்கள்" - இதுதான் எனக்கும் கொஞ்சம் தெரியும் என்று காட்டிக் கொள்ள அப்போது கையில் இருந்த ஒரே சப்ஜெக்ட் இதுதான்.

அதற்குக் கிடைத்த பதில்... 

"ராக்கெட்டை விட காஸ்ட்லியான (உண்மைதாம்பா) கரன்சிங்களை 60 ஃபீட் கன்டெய்னர்ல வெச்சு கொண்டு வர்றோம் எனும்போது சாதாரணமான விஷயமா அது? 60 ஃபீட் என்றாலே அதை ஃபாரீன் கூட்ஸ்னுதான் கணக்குல காட்டி ஆகணும், வேற வழியே கிடையாது. அந்தக் கணக்குலதான் இதுவும் வரும். அதுவும் நைட்லதான் பக்காவா தார்பாய் ஸ்க்ரீன் போர்த்திக் கொண்டு ஆடி அசைஞ்சி திருவாரூர் தேர் மாதிரி வரும். பகலில் தேர் பாதுகாப்பான இடம் பார்த்து ரெஸ்ட் எடுத்துக்கும். என்ன ஒரு வித்தியாசம் என்றால், இந்தத் தேருக்கு போலீஸ் பாதுகாப்பை விட எங்க பாதுகாப்பு பிரமாண்டமா இருக்கும். தகவல் போதுமா?" என்றபோது முழு மயக்கத்துக்கு வந்திருந்தேன்.

ஏதோ கன்டெய்னர்ங்கறாங்க... டன் கணக்குலங்கறாங்க....  தேர் ஓடுதுங்கறாங்க... ரெஸ்ட் எடுக்குதுங்கறாங்க....!

-ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close