Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவன் ஏ.பிரசாத், படைப்புக் கலைப் பிரிவில் ஓவியத்துக்காக மத்திய அரசின் பாலஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
 

2013ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பாலஸ்ரீ விருதுகள் கடந்த 2016 பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. ஓவியத்திற்கான மத்திய அரசின் பாலஸ்ரீ விருதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடமிருந்து பெற்றுத் திரும்பியுள்ளார் பிரசாத்.

இது குறித்து பிரசாத் கூறுகையில், "என் அப்பா அறிவழகன் ஸ்ரீரங்கத்தில் ஓவியராகப் பணியாற்றி வருகிறார். அப்பா ஓவியம் வரைவதைப் பார்த்து பார்த்து சிறுவயது முதலே பென்சிலை எடுத்து கிறுக்கிக்கிட்டு இருப்பேன். ஆர்வ மிகுதியால் படிப்படியாக ஓவியக் கலையை கத்துக்கிட்டு பள்ளிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிகள் தொடங்கி, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துக்கிட்டு விருதுகளையும், பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றிருக்கேன்.
 

பள்ளி விடுமுறை நாட்கள்ல வீட்டில் உட்கார்ந்து எதாவது வரைந்து வரைந்து பழகுவேன். பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ விருது போன்ற பெருமையை உடையது. சிறுவர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்ரீ விருது, படைப்புக் கலைப் பிரிவில் (ஓவியம்) தமிழகத்தில் இருந்து பாலஸ்ரீ விருதுக்கு இரண்டு பேர் தகுதிப்பெற்றார்கள். அதுல நானும் ஒருதர்" என்றார்.

பாலஸ்ரீ விருதுக்காக எப்படிபட்ட முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் எடுத்தீங்க?

நான் யு.கே.ஜி படிக்கும் போதிலிருந்து வரைய துவங்கினேன். என் அப்பா தான் என் குரு. என் தங்கை ரஞ்சனா தேவியும் நல்லா  வரைவாங்க. அரசு கலைப் பண்பாட்டு துறை மூலமாக திருச்சியில் நடைபெற்ற போட்டில் கலந்துக்கிட்டு முதல் பரிசு பெற்றது தான் என் கலைப் பயணத்துக்கான முதல் தொடக்கம். நான்காம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பாலஸ்ரீ விருதுக்காக பயிற்சிகள் எடுத்துக்கிட்டு, பல போட்டிகளிலையும் கலந்துகிட்டு 200க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வாங்கியிருக்கேன். பென்சில் ஷெடிங், வாட்டர் கலர், அக்ரலிக் பெயின்டிங், சுவர் ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்தல், ஆயில் பெயின்டிங் என பல்வேறு முறைகளில நான் ஓவியங்களை வரைந்து
வருகிறேன். இன்னும் நிறைய சாதிக்கணும்னு ஆசை இருக்கு, அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுப்பேன்.
 

பிளஸ் 2 முடித்துவிட்டு கட்டட எழில் கலைஞராக வர வேண்டும் என்பது தான் என்னோட வண்ணமான வாழ்க்கை கனவு. எனக்கு ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாகவும் இருக்கு. ஓவியக் கலைதான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு" என்று புன்னகையுடன் தான் வாங்கிய விருதை பிரம்மிப்புடன் பார்க்கிறார் ஏ.பிரசாத்.                       

-ரா.நிரஞ்சனா (மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்:
என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ