Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹோம் டெலிவரியில் இது புதுசு!

மக்கு தேவையான பொருட்களெல்லாம் ஆட்டோல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க, இல்ல கொரியர்ல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க. வானம் வழியா டெலிவரி ஆகறதப் பாத்துருக்கீங்களா? இனிமேல் பார்ப்பீங்க. ஆம்.  அமெரிக்காவின் நெவாடாவில் ஆகாய வழியாக நீர், உணவு மற்றும் முதலுதவிப் பொருட்களை டெலிவரி செய்துள்ளது டுரோன் எனப்படும் பறக்கும் ரோபாட்.

டுரோன் என்பது வேறொன்றுமல்ல. நண்பன் திரைப்படத்தில் விஜய்,  ஒரு கருவியை பறக்கவிட்டு சத்யனின் அறையை கேமரா மூலம் பார்ப்பார் அல்லவா, அதுதான் டுரோன். முதலில் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டுரோன்களை,  பொருட்களை டெலிவரி செய்யப் பயன்படுத்த நினைத்தார்கள். அதன் வடிவமைப்பை சற்று மாற்றி, பொருட்களை கவனமாக தாங்கிச் செல்லும் வகையில் டுரோன்களை உருவாக்கியது ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஃபிலிர்டி நிறுவனம்.

பொதுவாக ஆறு ரோட்டார்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த டுரோனில், கேமராவும் ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டிருக்கும். அந்த ஜி.பி.எஸ்  உதவியோடு எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும், எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பது புரோகிராமிங் மூலம் டுரோனுக்கு சொல்லப்படும். அதற்குக் கீழ்படிந்து அந்த திசையில் பறந்து, எங்கு பொருளை டெலிவரி செய்ய வேண்டுமோ அந்தக் கட்டடத்தின் முன்பு பொருட்களை வைத்துவிட்டுச் சென்று விடும் இந்த டுரோன். பெருகிவரும் வாகன நெரிசலுக்கு மத்தியில்,  பொருட்களை சரியான நேரத்தில் விரைவாக டெலிவரி செய்ய இது ஒரு மிகப்பெரிய மாற்றாக இருக்கும்.

கடந்த ஜூலை மாதம், முதல் முறையாக அமெரிக்காவின் விர்ஜினியாவிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு நாலரை கிலோ எடையுள்ள மருத்துவப் பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது. கிராமப்புறமாக இருந்ததால் அந்தப் பகுதியில் பொருட்களை டெலிவரி செய்வது எளிதாக அமைந்துவிட்டது. ஆனால் நகர்ப்புறங்களில் டெலிவரி செய்வது சற்று சிரமமாகக் கருதப்பட்டது. கொச கொசவென வானளவு உயர்ந்து நிற்கும் கட்டடங்களை இடிக்காமல் பறப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றுதானே. அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்தனர். மேம்படுத்தப்பட்ட புரோகிராமிங்குகளோடு அதிக துல்லியமான ஜி.பி.எஸ் என மேலும் மேம்படுத்தப்பட்டது டுரோன். அப்படியான மாறுதல்களுக்குப் பிறகு கடந்த 10ம் தேதி,  நெவாடாவிலுள்ள ஹாவ்தோர்ன்சுக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் அரை மைல் தூரம் வானில் பறந்து, தண்ணீர், உணவு மற்றும் முதலுதவிப் பொருட்கள் உள்ளடக்கிய அந்தப் பார்சலை,  குறிப்பிட்ட அந்த வீட்டின் முன்பு டெலிவரி செய்தது. எங்கு ஃபெயில் ஆகிவிடுமோ என்று அதை மேனுவலாக இயக்கக்கூடியவரும் பார்வையாளர்கள் சிலரும் கண்கானித்துக்கொண்டே இருந்தனர். ஆனாலும் அது தன்னுடைய பணியை வெற்றிகரமாக செய்து முடித்தது.

 

இதுகுறித்து டுரோன்களை உருவாக்கும் ஃபிலிர்டி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மேட் ஸ்வீனி கூறுகையில், “ முதல் முறையாக நகர்ப்புறத்தில் பொருட்களை டுரோன் மூலம் டெலிவரி செய்தது மிகப்பெரிய சாதனையாகும். டுரோன்கள் மூலமாக டெலிவரிகள் சர்வசாதாரணமாக நடைபெறும் நாள் வெகுதொலைவில் இல்லை. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த டுரோன்கள் பாதுகாப்பாக பயணித்து,  பொருட்களை சரியான தருணத்தில் டெலிவரி செய்துவிடும்” என்றார். இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக கவர்னர் பிரையன் சாண்டோவலும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இது ஏதோ ஒரு சோதனை முயற்சி அல்ல. அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இந்த டுரோன்களைப் பரிசோதித்துப் பார்க்க ஆறு நகரங்களை சோதனைக் களங்களாகத் தேர்வு செய்துள்ளது. மேலும் அதன் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாசாவும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து டுரோன்கள் மோதிக்கொள்ளாமல் இருக்க,  போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை வடிவமைத்து வருகிறது. டுரோன்கள் மூலமாக,  வான் மார்க்கமாக பொருட்களை டெலிவரி செய்வதுதான் எதிர்கால வழக்கமாக இருக்குமென அமெரிக்க நம்புகிறது. அதற்கான வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். அமேசான், ஃபிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் தங்கள் பொருட்களை டெலிவரி செய்ய டுரோன்களைப் பயன்படுத்துவதில் ஈடுபாடு காட்டி வருகின்றன.

அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களைக் சந்தித்துவரும் நாம்,  இந்த விநியோகத் துறையிலும் பெரும் மாற்றத்தைச் சந்திக்கக் காத்திருக்கிறோம். தினமும் லட்சக்கணக்கில் ஆன்லைனில் ஆர்டர்கள் குவிய,  அவற்றை டெலிவரி செய்ய வானெங்கும் ஆயிரக்கணக்கில் டுரோன்கள் பறந்த வண்ணம் இருக்கப் போகின்றன. எல்லாம் சரி காக்கா குருவிய இடிக்காம இருக்க புரோகிராமிங் போட்டிருக்காங்களா?

-மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ