Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பறவை நோக்குதல்!

நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் என்பது 24 மணி நேரங்கள். தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற எல்லா நேரமும் வேலையின் பொருட்டு நாம் பரபரத்துக் கொண்டே இருக்கிறோம். “ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் பத்தவே மாட்டேங்கிதே” என்று நாம் ஒரு முறையாவது வாய்விட்டு சொல்லியிருப்போம். தங்கள் வேலையை பார்க்கவே நேரமில்லாதவர்கள், ஹாபி பற்றியெல்லாம் யோசிக்கக்கூட மாட்டார்கள்!

“ஹாபி” என்பது நம் வழக்கமான வேலை நேரம் தவிர்த்து ஓய்வு நேரத்தில் மனமகிழ்ச்சிக்காக ஒருவித புத்துணர்ச்சிக்காக செய்யப்படும் ஒரு செயல். 

“உங்க ஹாபி என்ன?” என்று கேட்டு முடிப்பதற்குள் “டி.வி” என்றும் மொபைல் நோண்டுவது என்றும் பதில் வருகிறது. ஒன்றிரண்டு பேர் புத்தகம் வாசிப்பது, அஞ்சல் தலை, பழைய நாணயங்கள் சேகரிப்பு போன்றவை தங்கள் ஹாபி என்று கூறுகின்றனர். பெரும்பாலனவர்களின் “ஹாபி” இதற்குள்ளே அடங்கிவிடுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாட்டு, நடனம், கராத்தே, யோகா என எல்லா வகுப்புகளுக்கும் கலந்துகட்டி அனுப்பி வைக்கின்றனர். குழந்தைகள் இதில் எதை முழுமையாக உள்வாங்குவார்கள்?

இந்த உலகில் நாம் மட்டும் வாழவில்லை. நம்மைத் தவிர எத்தனை உயிர்கள் நம் அருகிலேயே வாழ்கின்றன, நாம் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன என்று ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போம். பறவைகள்...பறவைகள் இல்லாத ஒரு உலகை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. நாமோ அவற்றை சர்வசாதாரணமாக கடந்துகொண்டிருக்கிறோம். பறவைகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட மனிதரான சலிம் அலியை கொண்ட நாடு இது. நாமோ பறவைகள் குறித்த சிறு பிரக்ஞைகூட இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பறவை நோக்குதலும் கூட ஒரு ஹாபி தான். மிகமிக எளிமையான ஹாபியும் கூட. ஒரு விஷயத்தை ஜஸ்ட் பார்ப்பதற்கும், அதையே கவனிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு விஷயத்தை எப்போது நாம் வெறுமென பார்ப்பதிலிருந்து கவனிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம்.

புத்தக வாசிப்பு, ஸ்டாம்ப் கலெக்டிங் போன்ற வழக்கமான ஹாபிகளில் இருந்து பறவை நோக்குதல் முற்றிலும் வேறுபட்டது. பறவை நோக்குதலில் நாம் பறவையை மட்டும் பார்ப்பதில்லை, அதில் ஈடுபடுவதால் இயற்கையை சிறிதளவேனும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.

பறவை நோக்குதல் பற்றிய அட்டகாசமான ஒரு அறிமுக கையேட்டினை ஈ-புக்-ஆக வெளியிட்டிருக்கிறார் “கொழந்த” சரவண கணேஷ்.

கொழந்த டாட் காம் (kolandha.com) என்ற பெயரில் ப்ளாக் எழுதிவரும் சரவண கணேஷுக்கு ஃபோட்டோகிராபி தான் ஹாபி. அதுவே பறவைகளை புகைப்படம் எடுக்க ஆரம்பித்ததில் தடம் மாறி பறவை நோக்குதலில் ஈர்ப்பு ஏற்பட்டு இன்று பறவை நோக்குதலில் தான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் அதன் அடிப்படைகளையும் மிக எளிமையாக குழந்தைகளுக்கும் புரியும்படியாக ஈ-புக் ஆக வெளியிடும் அளவு பறவைகளின் காதலனாகி இருக்கிறார்.

இந்த ஈ-புக்கை இலவசமாக டௌன்லோட் செய்துகொள்ளும் விதமாகவும் தன் ப்ளாக்-இல் பதிவேற்றி இருக்கிறார். புத்தகத்திற்கு “கா ஸ்கொயர்” (காகா) என்று பெயரிட்டுள்ளார்.

“கா ஸ்கொயரில் பறவை நோக்குதல் பற்றிய சில அடிப்படையான விஷயங்களை என் அனுபவத்தில் இருந்து சொல்லியிருக்கிறேன். பறவை நோக்குதல் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது” என்று கூறும் சரவண கணேஷ் “தனிப்பட்ட ஆர்வம், பொழுதுபோக்கு என்பதையெல்லாம் தாண்டி பறவைகள், விலங்குகள், காடுகள் என்று சூழலியல் பற்றிய பரந்துபட்ட பார்வையையும், அக்கறையும் தீவிரப்படுத்த வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். படிப்பவர்களிடம் சூழலியல் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்த முயல்வதே இந்த புத்தகத்தின் நோக்கம்” என்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விடுமுறை நாட்களில் பறவைகள் அதிகம் வரும் இடங்களுக்கு அழைத்து சென்று பறவைகள் பற்றியும் சூழலியல் பற்றியும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முடிக்கிறார் கொழந்த கணேஷ்!

கா ஸ்கொயர் PDF வடிவில்: https://docs.google.com/uc?id=0Bwum8gbunJGsYk1KZlNCUk8wZVk&export=download

சரவண கணேஷின் பறவைகள் புகைப்படங்கள்: https://www.facebook.com/saravanaganesh18/media_set?set=a.4740234280511.1073741829.1734567300&type=3

-சு. அருண் பிரசாத்
(மாணவப் பத்திரிகையாளர்)
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close