Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளிப்போம்!... இன்று உலக சிறுவர் புத்தக தினம்

புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் உலக சிறுவர் புத்தக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சென்னின் பிறந்த நாளே உலக சிறுவர் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், அதுவும் தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மிகக்குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆறாம் / ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியைப் படிக்கத் திணறுவது தெரிய வந்துள்ளது. தமிழில் தான் எத்தனை படைப்புகள், எத்தனை தரமான எழுத்தாளர்கள், எத்தனை அறிவு பொருந்திய விஷயங்கள். தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி, புத்தகங்களை குழந்தைகள் தொடர்ந்து படிப்பதின் மூலம்  இன்றியமையாத பல உன்னத நலன்களை அளிக்க வல்லது. புத்திக்கூர்மை, அறிவு, சமச்சீரான எண்ண ஓட்டம், ஆழ்ந்த உறக்கம், சகிப்புத்தன்மை, எண்ணத்தில் உறுதி போன்ற நலன்களை பெறுகின்றனர். ஜோகன் டிக்கின்ஸ் என்பவர் “broken the hell)” என்ற புத்தகத்தை தேடி,  பன்னிரண்டு ஆண்டுகளாக 16,000 கி.மீ க்கு மேலாக அலைந்து திரிந்திருக்கிறார். அந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் டிக்கின்ஸ் குடும்பம் , உறவு, பணம், சந்தோசம் என வாழ்வின் ஒரு அத்தியாயத்தையே தொலைத்திருந்தார். ஆனால் அந்த புத்தகத்தை கண்டுபிடித்த தருணத்தில் உலகையே வென்றவரைப்போல் ஆனந்தப்பட்டார். இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி,  இனிவரும் தலைமுறையினருக்கு கொடுத்துவிடமுடியும் என்பதைவிட வேறென்ன சந்தோசம் இருந்திருக்கும் அவருக்கு வாழ்வில்?

புத்தகங்கள் நம் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும். காரல்மார்க்ஸின் ஒரு புத்தகம் உலகவரலாற்றையே மாற்றி இருக்கிறது. திருவள்ளுவரின் திருக்குறள், மானுடப்பண்புகளை உலகெங்கிலும் விதைத்திருக்கிறது. பகவத்கீதை திலகரையும், டால்ஸ்டாயின் ஒரு நூல் மகாத்மாவையும் உலகம் போற்றும் உன்னதத் தலைவர்களாக்கி இருக்கிறது.

ஒரு புத்தகமும்,  அதன் வாசிப்பும் நமக்கு ஆயிரம் ஆயிரம் கண்களையும் செவிகளையும் கொடுத்து,  அறிவின் விசாலப்பாதையில்,  உலகின் ஏதோ ஒரு மூலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்கும் நம்மை, விக்கிரமாதித்யன் காலத்திற்கும், ஈழத்தின் போர்ச்சத்தங்களுக்கும் நடுவே தன் அம்மாவைத்தேடி அலையும் குழந்தையின் பரிதவிக்கும் மன நிலைக்கும் கொண்டு சென்றுவிடுகிறது.

நம்மால் போகமுடியாத இடத்திற்கெல்லாம் புத்தகம்,  அதன் சாளரத்தின் வழியே கூட்டிப்போகும். நம் கைக்கு எட்டும் தூரத்தில் எவரெஸ்ட்டை கொண்டுவந்து நிறுத்தும் , காலுக்கடியில் கங்கையை ஓடவிடும். தேயிலைத்தோட்டங்களில், ஏகாதிபத்தியத்தின் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் எவனோ ஒருவனுக்காக நம்மை தேம்பி தேம்பி அழவைக்கும்.

அடுத்தவர் மீதான அன்பையும், பாசத்தையும் கரிசனத்தையும், சகோதரத்துவத்தையும் விதைக்கும். வாசிப்பின் வாயிலாகவே சேகுவேராவுக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் சலாம் போட வைக்கும்.

அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது,  இங்கு எழுதப்பட்ட நூல்களை எடுத்துவரும்படி அந்நாட்டு அறிஞர்கள் கேட்டுகொண்டார்களாம். புத்தகங்களை உருவாக்காத தலைமுறை உலகை மேம்படுத்தாது. புத்தகங்களை வாசிக்க தொடங்கிய பின்புதான் மைனராக இருந்த தலைமுறை மேஜரானது. புத்தகம் புரட்சியை உண்டு பண்ணும். கோடான கோடி மனிதர்களின் இதயங்களில் பட்டாம்பூச்சிகளாக பறக்கவிடும். புத்தகம் ஒரு நல்ல நண்பன். காதல் எப்போதும் கேட்க மட்டுமே செய்யும். நட்பும் புத்தகமும் தான் கொடுக்க மட்டுமே செய்யும்.

படிக்க நேரம் ஒதுக்குவோம். புத்தகத்திற்கு பணம் ஒதுக்குவோம். அப்போதுதான் இந்த உலகம் நம்மை ஒதுக்காமல் இருக்கும். இந்த நாளில், குழந்தைகளுக்கு நல்ல அறிவு சார்ந்த புத்தகங்களை பரிசளித்து அவர்களை படிக்க செய்யலாம். எதிர்கால தலைமுறை வாசிப்பு பழக்கம் இல்லாமல் வளர்வது சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்சென்றுவிடும். இன்றே உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் முதல் அடியை எடுத்து வையுங்கள். குழந்தை விரும்பும் ஒரு அழகிய புத்தகத்தை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

- நுாலகன்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close