Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருப்புதான்... அழகு கருப்புதான்!

மீப காலமாகவே கருப்பு-வெள்ளை நிற பேதங்களை எதிர்த்து குரல்கள் எழுந்து வருகின்றன. 'வெள்ளையாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு; கருப்பு நிறம் அசிங்கம்' என்று சமூகத்தில் ஆழ படிந்திருக்கும் நம்பிக்கைக்கு எதிராக, பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சற்று வித்தியாசமாக, சமீபத்தில் கேரளத்தை சேர்ந்த நடனக் கலைஞர் பி. எஸ் ஜெயா , உடல் முழுக்க கருப்பு வண்ணத்தை தடவிக் கொண்டு ஜனவரி 27 தொடங்கி மே 5 வரை, 100 நாட்கள் தன் கண்டனத்தை பதிவு செய்ய முயன்றுவருகிறார்.

"நம் நாட்டில் இன்னமும் சாதி, நிறம் என தங்களுக்குள்ளே மக்கள் பிரிவினை செய்து கொள்வதும், இவை போன்ற புற அடையாளங்கள் அனைத்தையும் தாண்டி, மனிதனை மனிதனாய் பார்க்க தயங்குவதும் மிகுந்த வேதனை அளிக்கும் போக்கு" எனக் கூறும் ஜெயா, தான் கற்றுக்கொண்ட கலையை பயன்படுத்தி, மக்கள் மத்தியில் சாதி மற்றும் நிறம் சார்ந்த பேதங்களை ஒழிக்க போராடுவதாக கூறுகிறார்.

ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை ஜெயாவை பெரிதும் பாதித்துள்ளது. அப்போது இருந்து, ஒடுக்குமுறைக்கு ஆளாகும் அனைவருக்காகவும் போராட வேண்டும் என்று முயன்றுவருவதாக கூறும் ஜெயா, "பொதுவாகவே கருப்பாக இருப்பவர்களை பெரும்பாலும் சமுதாயத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் என பொத்தம்பொதுவாக முத்திரை குத்தி ஒதுக்கி விடுகிறோம். இது முற்றிலுமாக மாற்றப்பட வேண்டிய மனநிலை" என்கிறார்.

தான் பகுதி நேர ஆசிரியராக பணிபுரியும் நடன பள்ளியில திடீரென ஒரு நாள் இப்படி கருப்பு கிரீஸை தடவி கொண்டு சென்றிருக்கிறார். பல மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் சில மாணவர்கள் "முன்பு இருந்ததை விட இப்போது நீங்கள் அழகாக தெரிகிறீர்கள் மேம்" என ஊக்குவித்திருக்கின்றனர்.

உடல் முழுக்க கருப்பு நிறத்தை பூசிக்கொண்டு,  தான் இந்த சமுதாயத்தில் வாழ்ந்த 100 நாட்களை பற்றின காலண்டர் ஒன்றினை தயாரித்து கண்காட்சி நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறும் ஜெயா, இதன் பிறகு ஒரு நடன நிகழ்ச்சியையும் அரங்கேற்ற உள்ளார். பொதுவாக நடன நிகழ்ச்சிகளில் நடனக் கலைஞர்கள் வெள்ளையாகவும் பளிச்சென்று தெரியவும்தான் ஒப்பனையிட்டு பார்த்திருப்போம். ஆனால் ஜெயா, தனது முகத்தில் கிரீஸ் தடவிக்கொண்டு கருப்பாக தெரியும்படி ஒப்பனை செய்து நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார். மேலும் இவர் கை, கால், முகம் முழுக்க கருப்பு சாயம் பூசி அதன் மேலே LED விளக்குகளை பொருத்திக்கொண்டு,  உலக மகளிர் தினத்தன்று பல இடங்களில் சென்று நடனமாடி இருக்கிறார். நிற பேதங்களை தாண்டி,  பெண்கள் தங்கள் வாழ்வில் ஜொலிக்கலாம் என்பதை காட்ட இவ்வாறு முயன்றிருக்கிறார்.

நம் சமூகத்தில் அழகையும், வெள்ளை நிறத்தையும் எப்போதுமே ஒன்று சேர்த்து பார்ப்பதாலோ என்னவோ  கருப்பாயிருப்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இப்போதும், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சினிமா நடிகர் நடிகைகள், மாடலிங் துறையில் இருப்பவர்கள் அனைவரும் வெள்ளையாய் ‘அழகாய்’ இருப்பதையே பலரும் விரும்புகின்றனர். என்றைக்கேனும் ஒரு நாள், இது மாறும்... மாற வேண்டும். கருப்பும், வெள்ளையை போன்ற மற்றுமொரு நிறமே என்பதை அனைவரும் உணர வேண்டும்.


-கோ. இராகவிஜயா
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ