Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்களை சுற்றி நடக்கும் ஓராயிரம் கோடி வர்த்தகம்!

நீங்கள் சென்னை திருவல்லிக்கேணி மேன்சனில் இருக்கும் பேச்சுலராகவோ அல்லது ஓ.எம்.ஆர் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பமாக வாழும் ஐ.டி. ஊழியராகவோ அல்லது ஆண்டிப்பட்டியில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவராகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் அனைவரையும் சுற்றி ஓராயிரம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? ஆனால் அதுதான் உண்மை. உலகில் யாரையும் உங்கள் வியாபார வட்டத்துக்குள் இழுத்துவிடலாம் என்ற நம்பிக்கையை இன்று வியாபார நிறுவனங்கள் பெற்றுவிட்டன.


முன்பு சென்னை தி.நகரில் இருக்கும் பிரபல துணிக்கடைக்கு தென் மாவட்ட மக்களும் தேடி வந்தார்கள். ஆனால் இன்று திருச்சியில் உள்ள ஒருவருக்கு ஃப்ளிப்கார்ட்டும், அமேசானும் கதவை தட்டி துணியை டெலிவரி செய்கின்றன. அதையும் தாண்டி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள துணிக்கடைக்காரர் ஃபேஸ்புக் விளம்பரம் மூலமும், வாட்ஸ்-அப் நோட்டிஃபிகேஷன் மூலம் இழுத்து விடுகிறார். வீட்டுக்கு வந்து கதவை தட்டி பொருள் தருபவரின் விலை, கண்ணாடி கடைகளை விடவும் குறைவு என்பதுதான் இங்கு உத்தி.

உங்களுக்கு பிடித்தது அவர்களுக்கு எப்படி தெரியும்?

இந்த பொருட்கள் எல்லாம்  இங்கு  கிடைக்கிறது என்பதை நீங்கள் எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்களேன். கிட்டத்தட்ட இன்று அனைவரையுமே ஸ்மார்ட்போன்களும், இணையமும் நெருங்க துவங்கி விட்டது. அரிசி, பருப்பை போல ஆன்லைனும் அத்தியாவசியமாகிவிட்டது. உங்களது தகவல்கள் உலக சந்தையின் மூலதனமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

கடைகளில் நீங்கள் பொருட்களை வாங்கும்போது,  அண்ணாச்சி உங்களை ஓரளவுக்கு கணித்திருப்பார், இந்த நபர் வந்தால் இதைதான் வாங்குவார் என்று. ஆனால் இதனைக் கண்டறிய‌ அவருக்கு சில மாதங்கள் தேவைப்படும். இந்த ஆன்லைன் நிறுவனங்களுக்கு அந்த நேரம் தேவைப்படுவதில்லை. உதாரணமாக ஞாயிறு மதியம் நண்பர்களோடு மலையாள படம் ஒன்றுக்கு டிக்கெட் புக் செய்தால்,  உங்களது ப்ரெளசரில் அடுத்த டேப்பில் நீங்கள் திறக்கும் பக்கத்தில்,  நீங்கள் சிங்கிள் என்பதை உங்கள் ஃபேஸ்புக் ஐ.டி.யோடு ஒப்பிட்டு,  மலையாள மேட்ரிமோனி தளங்களை காட்டுவதுதான் இணைய நுகர்வின் உச்சம்.

 

இங்கு சிறிய அளவில் ஆரம்பிக்கும் இந்த இணைய நுகர்வு,  பெரிய அளவில் வியாபாரமாக மாறுகிறது. நீங்கள் ஒருமுறை தேடிய பொருளை அடிக்கடி உங்கள் கண்களில் காட்டி,  உங்களை அந்த பொருளின் வாடிக்கையாளர் ஆக்குவது துவங்கி,  குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் அதிகம் வாங்கிய பொருளை அதன் வாழ்நாள் அடிப்படையில் உங்களுக்கு மீண்டும் காட்டுவது வரை நிறுவனங்கள் பல உத்திகளை,  பல கோடிகள் செலவு செய்து வகுத்து வைத்துள்ளன.

எப்படியெல்லாம் உங்களை சுற்றுகிறார்கள்?

நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள், உங்கள் வயது, உங்கள் வங்கி இருப்பு தொகை, உங்கள் மாத சம்பளம் வரும் தேதி, இவையெல்லாம் தெரிந்து என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? உங்களது சென்ற மாதத்தை சற்று நினைவு கூறுங்கள். மாத இறுதி  வாரத்தில் மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் விள‌ம்பரங்களும், மாத நடுவில் டூர், உணவகங்கள் விளம்பரங்களும், மாத முதல் தேதியில் ட்ரெஸ், மளிகைபொருட்கள், சூப்பர் மார்க்கெட் விளம்பரங்களும் வருவதை கவனித்திருக்கிறீர்களா?

இதுதான் உங்களை சுற்றி நடக்கும் ஓராயிரம் கோடி வர்த்தகம். நீங்கள் ஆன்லைனில் மதுரைக்கு டிக்கெட் போட்டால் போதும், விமானம் துவங்கி டேக்ஸி வரை மதுரையிலிருந்து உங்களை திரும்ப அழைத்துவர வரிசையில் நிற்கும்.

உஷார்! உங்கள் போன் நம்பர் விற்கப்படுகிறது!


இதெல்லாம் வளரும் தொழில்நுட்ப உலகில் பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால் இதனை ஒரு கும்பல் தவறாக பயன்படுத்துகிறது. இன்றைய மிகப்பெரிய டேட்டா பேஸ் செல்போன் நம்பர்தான். அதனை இந்த நிறுவனங்கள் சிம்பிளாக எடுத்துவிடுகின்றன.

நான் என் மொபைல் நம்பரை எங்குமே கொடுக்கவில்லை. எனது நம்பர் என் குடும்பத்துக்கு மட்டுமே தெரியும் எனக் கூறினால்,  நீங்கள் நினைப்பது தவறு. சமீபத்தில் நீங்கள் எங்காவது ஒரு கடையில் ரீசார்ஜ் செய்ய உங்கள் மொபைல் எண்ணை கொடுத்திருப்பீர்கள். அங்கு ஒரு பெரிய புத்தகத்தில் பல லட்சம் நம்பர்கள் எழுதப்பட்டிருக்கும். இந்த நோட்டுகள் சில நாட்களில் காணாமல் போகும்; காரணம் கார்ப்பரேட்கள் அவற்றை வாங்கி விடும் அல்லது கார்ப்பரேட்டுகளுக்கு டேட்டா சப்ளை செய்யும் ஏஜென்சிகளுக்கு இந்த நம்பர்கள் சில ஆயிரங்களில் சொந்தமாகிறது.

 

இது சிறிய அளவுதான்.  இதில் பெரிய அளவு ஒன்று உள்ளது; அது உங்களை மேலும் அதிர வைக்கும். உங்கள் செல்போனை சர்வீஸுக்கு அளித்துள்ளீர்களா? சிறு பிரச்னைதான் என்று சாதாரண சர்வீஸ் ஷாப்களில் கொடுக்கப்படும் மொபைல்களில் இருந்து அப்படியே உங்கள் தகவல்கள் உருவப்படுகிறது. ஒரு போனில் இருந்து சராசரியாக 100 நம்பர்கள் பெறப்படுகிறது எனக் கொள்வோம். இந்தியாவில் உள்ள மொபைல் போன்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பாருங்கள்,  கால்குலேட்டர் திரை  நிரம்பும் அளவு நம்பர்கள் டேட்டா பேஸாக உங்களது கையில் நிற்கும்.

'நான் என்ன செய்கிறேன் என்று யார் பார்ப்பார்கள்...?' என்று கூறுபவர்களுக்கு ''எல்லாத்தையும் மேல ஒருத்தன் பார்த்துட்டுதான் இருக்கான்'' என்பதுதான் பதில். உங்களை சுற்றியும் உங்களுக்கு தெரியாமலும் உங்கள் பர்ஸை காலி செய்ய பல ஆயிரம் செலவழித்து ஒரு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த இம்பல்ஸுக்கு அடிமையாகாமல் இருங்கள்.

என்ன செய்ய வேண்டும்?


1. உங்கள் ப்ரெளசரில் அடிக்கடி குக்கிகளை டெலிட் செய்யுங்கள். அதுதான் உங்கள் தகவலை பெற எளிதாக இருக்கும் வழி.

2. செல்போன் ரீசார்ஜ், சர்வீஸ் எல்லாவற்றையும் சரியான நம்பிக்கை உள்ள இடங்களில் மட்டும் செய்யுங்கள்.

3. உங்கள் திரையில் தோன்றும் விளம்பரங்களில் உங்களுக்கு தேவைப்படுவதை மட்டும் க்ளிக் செய்யுங்கள்.

உங்களை இதுநாள் வரை பெரிய கார்ப்பரேட்டுகள் மட்டுமேதான் சுற்றி வந்தன. ஆனால் இப்போது ஒரு இணையதளமும், ஒரு சமூக வலைதள கணக்கும் மட்டுமே கொண்ட,  அலுவலகமே இல்லாத நிறுவனங்கள் கூட சுற்ற துவங்கிவிட்டன. உங்களை சுற்றி ஓராயிரம் கோடி வர்த்தகம் நடக்க துவங்கி விட்டது. உங்களை வசப்படுத்த இந்த நிறுவனங்கள்  இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்றால் லாபம் இல்லாமலா?

பல்பொடி துவங்கி இரவு தூங்க போகும் கொசுவர்த்தி வரை எல்லாமே உங்களுக்காக உருவாக்கப்படுபவை தான். ஆனால் அது நீங்கள் விரும்பி வாங்கியதாக இருக்க வேண்டும். உங்களை விரும்ப வைத்து வாங்க வைத்ததாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்.

- ச.ஸ்ரீராம்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close