Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெருநகரங்களில் வரப்போகிறது வாடகை சைக்கிள்!

 

சுற்றுச் சூழலுக்கு கெடுதல் செய்யாமல் மனிதர்களுக்கு உடல்நலத்தை காத்து வந்த சைக்கிள்களை பலரும் மறந்து விட்டோம். பள்ளி செல்லும் பிள்ளைகள் ஓட்டி பழக சைக்கிள் வாங்கி கொடுக்கும் நாம், அவர்கள் காலேஜ் செல்லும்போது பைக் வாங்கி கொடுத்து அவர்கள் ஓட்டிய சைக்கிளை மூலையில் தூக்கி போட்டு விடுகிறோம். ஆனால், ஒரு காலத்தில் சைக்கிள்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்தது என்பது இப்போதைய தலைமுறைக்கு தெரியாது. சைக்கிள் மூலம் ஒரு நாளைக்கு ஐம்பது கிலோமீட்டர் தூரம் பயணித்து வேலைக்கு சென்று வந்தவர்களின் அனுபவங்களை எப்போதும் கேட்கலாம். மனைவி பிள்ளைகளுடன் விசேஷங்களுக்கும், மார்க்கெட், சினிமா தியேட்டர்களுக்கு சென்று வந்தவர்கள் இப்போதும் நம்முடன் வாழ்கிறார்கள். நம் ஊரில் சைக்கிள் ஓடிய காலங்களில் மருத்துவமனைகள் குறைவாக இருந்தது. அதுபோல் 80-களில் எல்லா நகரங்கள், கிராமங்களில் வாடகை சைக்கிள் கடைகள் நிறைய இருந்தன. ஒரு ஊரில் சைக்கிள் வாடகைக்கு எடுத்து இன்னொரு ஊரில் விட்டுச்செல்லும் நெட் ஒர்க் அப்போதே இருந்தது. அப்போது சைக்கிள் இருந்த இடத்தை, இப்போது மோட்டார் சைக்கிள்கள் பிடித்துக்கொண்டன. ஆளே இல்லாத வீட்டில் கூட ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கிறது.

உலக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் முதலிடம் மோட்டார் வாகனங்கள்தான் என்று உலக சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. வாகன நெருக்கத்தை குறைக்கவும், சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்கவும் பல நாடுகள் பல பரிசோதனைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. நம் நாட்டில் கூட டெல்லியில் குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட சீரியல் எண் வாகனங்களை சாலையில் அனுமதிக்கும் முறையை அமல்படுத்தி பார்த்தது. இந்த நிலையில்தான் ரயில் நிலையங்களில் வாடகை சைக்கிள் திட்டத்தை டெல்லியில் அறிமுகப்படுத்த உள்ளார்கள் என்ற  நல்ல செய்தி வந்துள்ளது.

பயணிகள், ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து வீடுகளுக்கு செல்ல இனி ஆட்டோ, கால்டாக்சிகளுக்கு காத்திருக்கவோ, அதிக பணம் செலவு செய்யவோ தேவையில்லை. குறைந்த கட்டணத்தில் வாடகை சைக்கிளில் செல்ல டெல்லி ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது. டெல்லியில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், காற்று மாசு அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. மேலும், மெட்ரோ ரயில்களில் வரும் பயணிகள், அலுவலக ஊழியர்கள் இரவில், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதியில்லை என்று  நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். இந்த இரண்டு குறைகளையும் தீர்க்கும் வகையில், டெல்லி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களில், வாடகை சைக்கிள் திட்டத்தை துவக்க, டெல்லி மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, டெல்லியில் உள்ள ஒவ்வொரு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வளாகங்களிலும், வாடகைக்கு சைக்கிள் தரும் மையங்கள் அமைக்கப்படும். அதேபோல், ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து, குறிப்பிட்ட சில கி.மீ. துாரத்திற்குள் உள்ள, பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், சைக்கிள் நிறுத்துவதற்கான கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. சைக்கிள் மையத்துக்கு சென்று, தங்களுக்கு தேவையான ஏதாவது ஒரு சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக அவருக்கு டோக்கன் தரப்படும். இதற்கு மாதாந்திர பாஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுச்சூழலை காக்கவும், மக்களுக்கு குறைந்த செலவில் வாகன வசதி செய்து கொடுக்கவும், உடல் ஆரோக்கியத்தை காக்கவும் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க தயாராகி வருகிறது டெல்லி நிர்வாகம். இந்த திட்டத்தை மற்ற மாநில மெட்ரோ ரயில் நிலையங்களும் பின்பற்றினால் நல்ல சூழலை உருவாக்கலாம். மக்களின் பொருளாதாரம் வீணாவது தடுக்கப்படும்.

-செ.சல்மான்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close