Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரளா போல் நீர் வழிப்போக்குவரத்து தமிழகத்தில் வருமா?

ந்தியாவில் பல மாநிலங்களில் மக்கள் பயணம் செய்ய பஸ், ரயில், விமானங்களை பயன்படுத்துகிறார்கள். எப்போது பார்த்தாலும் கூட்டம்... கூட்டம். எத்தனை ரயில் விட்டாலும், பேருந்து விட்டாலும் அனைத்து மக்களாலும் பயனடைய முடியவில்லை. இதற்கு காரணம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருப்பதால். வேறு போக்குவரத்து திட்டங்களைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. ஆனால், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் நீர்வழி போக்குவரத்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் மற்ற மாநிலங்களை விட கேரள மாநிலத்தின் ஆலப்புழா, கோழிக்கோடு மாவட்டங்களில் இயக்கப்படும் நீர் வழிப்போக்குவரத்து எல்லோரையும் பெரிதும் கவர்கின்றன. அது மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், சரக்குகளை கொண்டு செல்வதிலும் கேரளஅரசு உள்நாட்டு நீர் வழி போக்குவரத்தை சிறப்பாக நடத்தி வருகிறது.

அண்மையில் நான் ஆலப்புழா சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் படகு போக்குவரத்துதான். கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களின் நடுவே அழகாக அமைதியாக ஓடும் காயல்களின் கரையோரங்களை ஆக்கிரமிக்காமல், கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தாமல் மக்களும், சுற்றுலாப்பயணிகளும் பயன்பெறும் வகையில் உள்நாட்டுப்படகு போக்குவரத்தை நடத்தி வருகிறார்கள்.

ஆலப்புழாவில் சுற்றுலா செல்பவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப படகுகளை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். நம்மூரில் கால்டாக்சியை அழைப்பது போல், சிறிய நாட்டுப்படகுகள், ஆடம்பரப் படகுகள், சிறிய விரைவு படகுகள், பயணிகள் மோட்டார் படகுகள் என்று எல்லாவிதமான படகுகளை நீங்கள் இருக்கும் காயல் ஓர ஊர்களிலிருந்து அழைக்கலாம். படகுக்கு தகுந்தாற்போல் கட்டணம் அமைந்திருக்கிறது.

இதேபோல் காயல் ஓர கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக நகர் பேரூந்து போல கேரள அரசு மிக குறைந்த கட்டணத்தில் இயக்கும் படகுகள் அதிகமாக உள்ளன. கிராம மக்களை தேடி காய்கறிகடைகள், மளிகை கடைகள், இறைச்சி, மீன்கடைகள், வங்கி, தபால் சேவைகள், ஏ.டி.எம்.கள் என்று அனைத்தும் படகுகளில் மக்களை தேடி வருகிறது. இதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

நீங்கள் ஆலப்புழா ரயில்நிலையத்தில் இறங்கி படகுப்பயணம் மேற்கொள்ள தயாராகிவிட்டால் பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கும் கேரளா அரசின் படகு போக்குவரத்து துறையின் அலுவலகத்துக்கு செல்லலாம். ஆலப்புழாவைச் சுற்றியும், உள்ளேயும் கால்வாய் வழி பயணம் செய்வது சுகானுபவம்.

இந்த காயல் நீர்வழி வேம்பநாடு ஏரியின் ஒரு பகுதியாகும். காயலின் ஓரமாகச் செல்லும் போது தென்படும் இயற்கை காட்சிகள் மனதைப் பறிக்கிறது. வயல்வெளிகள், தென்னந்தோப்புகள், பறவை மீனைக் கொத்திச் செல்வது, மீன் பிடிக்கும் மீனவர்கள், வாத்து மேய்ப்பவர்கள், சரக்குகளை ஏற்றிச்செல்லும் தோணிகள், பள்ளிக்குழந்தைகள் கால்வாய்களைக் கடந்து செல்வதை படகில் இருந்தபடியே காணலாம். படகுப்பயணத்தின்போது ஒருவர் ஏதாவது ஒரு ஊரில் இறங்கி அங்கு தயாராகும் தென்னை நார் பொருட்கள், அங்குள்ள உணவகங்களில் கிடைக்கும் பாரம்பரிய மீன் உணவுகளை உண்டு மகிழலாம். ப்ரெஷ்ஷான பதநீர் சுவைத்து மகிழலாம்.

கேரள அரசு, கால்வாய் மற்றும் காயல் நீர்ப்பயணத்தின் தொடக்கமாக ஆலப்புழா இருக்கிறது. பொதுமக்களையும், சுற்றுலாப்பயணிகளையும் ஒரே நேரத்தில் கவரும் வகையில் உள்நாட்டு படகு போக்குவரத்தை சிறப்பாக நடத்தி, சாலைப்போக்குவரத்தில் நெரிசலையும், சூழல் கெடுவதையும் தடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் 590 கிலோ மீட்டர் நீள கடற்கரையும், 205 கிலோ மீட்டர் நீள உள்நாட்டு நீர்வழித்தடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களும் நீர் வழிப்போக்குவரத்தை செயலுக்கு கொண்டு வந்தால் பொருளாதார ரீதியாக பயன்பெறலாம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திட்டம் தீட்டப்பட்ட ஆந்திராவையும், தமிழகத்தையும் இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாய்த்திட்டம் அப்படியே முடங்கிப்போனது.

நீர்வழி போக்குவரத்து நடைமுறைக்கு வந்தால் எரிபொருள் சேமிக்கலாம். சுற்றுச்சூழல் காக்கலாம். தற்போது மத்திய அரசு, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நீர் வழிப் போக்குவரத்தை கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. ஆனால், அதற்குள் கேரளா, நீர் வழிப்போக்குவரத்தின் அடுத்த கட்டத்துக்கு சென்று விடும்.

மத்திய அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சகம் நீர்வழி போக்குவரத்தின் அவசியம் பற்றி தங்களுடைய அறிக்கையில், எரிபொருள் சிக்கன அடிப்படையில், உள்ளூர் நீர் போக்குவரத்து, மிகவும் சிக்கனமான முறையாக கருதப்படுகிறது. ஒரே ஒரு குதிரைச் சக்தி திறன் கொண்ட படகு மூலம் 4000 கிலோ பொருட்களை நீர்வழியில் எடுத்துச்செல்ல முடியும், ஆனால், ஒரு குதிரை சக்தி இயந்திரம் மூலம் சாலை வழியாக 150 கிலோ மற்றும் ரயில் வழியாக 500 கிலோ மட்டுமே எடுத்துச்செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஆய்வின்படி, ஒரு லிட்டர் எரிபொருள் மூலம் உள்ளூர் நீர்வழி போக்குவரத்து வழியாக 105 டன் எடுத்து செல்ல முடியும். அதே நேரம் ரயில் வழியாக 85 டன், சாலை வழியாக 24 டன் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். எரிபொருள் கழிவு உமிழ்வும், உள்ளூர் நீர் போக்குவரத்தில் ஒரு டன்னுக்கு 32-36 கிராம் கரியமில வாயும், சாலைகளில் கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச்சென்றால் ஒரு டன்னுக்கு 51-91 கிராம் கரியமில வாயுவும் வெளிப்படும், என்கிறது.இந்த திட்டத்தின் மூலமாக உள்நாட்டு நீர்வழித் தடங்களையும், துறைமுகங்களையும் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சென்னை - கன்னியாகுமரி 338 நாட்டிக்கல் மைல் தொலைவு கொண்டது. இதை 8 மணி நேரத்தில் கடக்கலாம். ஆனால், சாலை வழியாக சென்னை - கன்னியாகுமரிக்கு சுமார் 700 கி.மீட்டரை கடக்க 12 மணி நேரம் ஆகும். கடல் நீர் வழித் தடத்தை உருவாக்குவதன் மூலம் பாரம்பரிய பயணிகள் படகு தொழிலையும் மீட்டெடுக்கலாம். சுற்றுச்சூழலையும் காக்கலாம். போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிரதமரின் ஜலமார்க் யோஜனா திட்டம் செயல் படத்துவங்கினால் தமிழகம் பயணிகள் போக்குவரத்தில் பெரும் சாதனையை படைக்கும் கூடவே நம் நீர்நிலைகளையும் காக்க முடியும்.

-செ.சல்மான்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ