Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீங்கள் ரஜினிகாந்த் ஆக வேண்டாம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்மையில் கபாலி இறுதிக் கட்ட படப்பிடிப்புக்கு சிங்கப்பூர் செல்ல,  சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலையத்திற்குள் நுழைந்தபின்தான் பாஸ்போர்ட் -ஐ கொண்டு வரவில்லை என்பது அவருக்கு தெரிய வந்தது. உதவியாளருக்கு போன் செய்து, அவர் கொண்டு வர தாமதம் ஆனதால் விமானம் அரை மணி நேரம் தாமதமாக கிளம்பி சென்றது.

கடந்த வாரத்தில் ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமாரும் இப்படியொரு சிக்கலில் சிக்கினார். இவர் தற்போது ரஜினியுடன் '2.O' படத்தில் நடித்து வருகிறார். சொந்தமாக அவர் எடுத்து வரும் 'ரூஸ்டம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அக்ஷய் குமார்,  விமானம் மூலம் மும்பையில் இருந்து லண்டனுக்கு கடந்தவாரம் பயணமானார். இவர் கனடாவில் குடியுரிமை பெற்றவர். இதனால் அந்த நாட்டில் பெறப்பட்ட பாஸ்போர்ட்டில் பயணித்தார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இவரது பாஸ்போர்ட்டை பார்த்த குடியேற்றத்துறை அதிகாரிகள், அவரை ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வைத்தனர்.

வழக்கமாக கனடாவில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை. இந்த நிலையில், அக்ஷய் குமார் பாஸ்போர்ட் தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்ததால் அது குறித்து முழுமையாக அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர் பயணப்பட்டார்.
ரஜினியும் அக்ஷய் குமாரும் உலகம் அறிந்த பிரபலங்கள் என்பதால் விமானங்கள் காத்திருந்து அவர்களை அழைத்து சென்றன. ஆனால் சாதாரண மக்களுக்கு இவை நடந்திருந்தால், விமானப் பயணம் ரத்தாகி பண இழப்பும் ஏற்படும்.

அதனால் சுற்றுலா / பயணம் செல்லும் முன் கவனமாக சில விஷயங்களை மேற்கொள்ளவேண்டும்.

ஆவணங்கள் 

1. வீட்டை விட்டு கிளம்பும் முன் ரயில், பஸ், விமான டிக்கெட்டுக்களை எடுத்து வைத்து விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. வெளிநாடு பயணம் என்றால் பாஸ்போர்ட், விசா மிக முக்கியம். இவற்றை வைக்க என தனியே ஃபைல் தயாரித்துக் கொள்வது மிக அவசியம். பயணம் செய்யும் அனைவரின் பாஸ்போர்ட்-ம் செல்லத்தக்கதாக இருக்கிறதா என்பதை கவனிக்கவும்

3. அதிகமாக ரொக்கப் பணம் எடுத்துச் செல்வதை தவிர்க்கவும். தற்போது எல்லா இடங்களிலும் ஏடிஎம் வசதி வந்துவிட்டது. எனவே, தேவைக்கேற்ப ஆங்காங்கே எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனம் மற்றும் பாதுகாப்பானது.

4. உள்நாடோ, வெளிநாடோ சுற்றுலா / பயண இன்ஷூரன்ஸ் பாலசி எடுப்பது நல்லது. அதற்கான ஆவணங்களை கையோடு வைத்துக் கொள்ளவும்.

உடை - உணவு

5. சுற்றுலா செல்லும் போது நீள கை சட்டை, முழுக்கால் சட்டைக்கு பதில் டீ சர்ட், சார்ட்ஸ் போன்ற சாதாரண உடைகளை அணிவது நல்லது.

6. போகிற இடத்தில் கிடைக்கும் தண்ணீரை குடித்தால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். கூடிய வரை மினரல் வாட்டரை குடிக்கவும்.

7. குளிர் பிரதேசங்களுக்கு செல்லும்போது மறக்காமல் குடை, கம்பளி ஆடைகள், ஜர்க்கின், ஸ்வெட்டர் போன்றவைகளை எடுத்துச் செல்லவும்.

8. அதிகம் பேர் சுற்றுலா செல்லும் போது, அனைத்து இடங்களிலும் நினைத்த நேரத்தில் உணவு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, பிஸ்கெட், பழங்கள், பிரெட், சாக்லேட் போன்றவைகளை எப்போதும் பையில் வைத்திருப்பது உதவும்.

9. உருளைக் கிழங்கு சிப்ஸ், வாழைப்பழ சிப்ஸ், பக்கோடா போன்ற அதிக ஆயில் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும். இவற்றை, பயண நேரத்தில் சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்க கூடும். சுற்றுலா சொதப்பிவிடக்கூடும்.

பாதுகாப்பு

10. காட்டு பகுதிகள், மலைப் பாதை, வனவிலங்கு சரணாலயம் போன்ற இடங்களுக்கு பயணப்படும்போது மஞ்சள், சிவப்பு போன்ற பளிச் நிற உடைகளைத் தவிர்க்கவும். பச்சை நிற ஆடைகள் நல்லது. செடி, கொடிகளின் பச்சை நிறத்தில் காட்சியளித்தால் விலங்குகளினால் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறைவாக இருக்கும்.

11. மலை மற்றும் வனப்பகுதிகளில் சுற்றுலா செல்கிறீர்கள் என்றால் வாக்கிங் ஸ்டிக் (பாதுகாப்புக்கு), சுமார் 500 மீட்டர் வரை ஒளி பாய்ச்சும் டார்ச் லைட், மெழுகுவர்த்தி போன்றவைகளை எடுத்துச் செல்வது அவசியம்.

12. அதிக நகைகள் அணிந்து செல்வதை அவசியம் தவிர்க்கலாம். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் நகைகள் அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது, இடத்தில் ஆறு அல்லது ஏரியில் குளிக்க போகிறீர்கள் என்றால் வாட்ச், நகைகளை கழற்றி தனியே பாதுகாப்பாக வைத்துவிடுவது நல்லது.

- சி.சரவணன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close