Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி மண்ணில் ஜாலி ரைடு!

      

 நான் கல்லூரியில் மேலாண்மை படித்து கொண்டிருக்கும்போது  ஒரு வித வெறுமையும் மன இறுக்கமும் சேர்ந்து  அமுக்கிய நேரம். அதில் இருந்து வெளிவர நானும் என் நண்பன் கோகுல பிரசன்னாவும் சேர்ந்து யோசித்த ஒரே தீர்வு,  நெடுந்தூரப்பயணம். அப்படி நினைத்தவுடன் பல மாநிலங்களுக்கு கிளம்பி சென்றிருக்கிறோம். இந்த முறை செல்ல நினைத்தது  குஜராத்துக்கு.

எங்கள் கல்லூரியில் மற்ற நண்பர்கள் டூர் கிளம்புவது என்றால் ஊட்டி அல்லது கோவா என்று ஜாலியான பிக்னிக் ஸ்பாட்டுக்குத்தான் கிளம்புவார்கள். எங்களுக்கு அந்த மாதிரி கொண்டாட்டங்களில் நாட்டமில்லை, புதிய இடங்கள், புதிய பழக்க வழக்கங்கள், புதிய உணவுகள், புதிய வழிகளில் பயணம்- இதுதான் எங்களின் பயண நோக்கம்.

பயணத்தின் இலக்கையும் பயண காலத்தையும் நான்தான் முடிவு செய்தேன். எங்களிடமிருந்த  வங்கி சேமிப்பு கணக்கில் இருந்த சிறு தொகையை நம்பி கிளம்பினோம். இருந்தாலும் சென்ற இடங்களில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது தனிக்கதை.

குஜராத் என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது மோடியும், சிங்கமும்தான்.  ஆனால் எங்களை ஈர்த்தது என்னமோ அந்த பரந்து விரிந்த வெண்ணிற பாலைவனம். ஆம், ரான் ஆப் ஹட்ச்  (rann of kutch) மற்றும் தோலவிரா (dholavira).  செல்லும் வழியெங்கும் உப்பால் ஆன மாபெரும் வறண்ட பகுதியே எங்கள் இலக்கு. அதோடு சேர்த்து குஜராத்தையும் பார்க்க வேண்டி ஆர்வம்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் அந்தந்த மாநிலங்களைப் பற்றி தவறாகவோ சரியாகவோ ஒரு கணிப்பு இருக்கும். ஆனால் இந்த முறை குஜராத்தைப் பற்றி எங்களுக்கு ஒரு ஐடியா கூட இல்லை. அங்கு செல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது. நாங்கள் போகும் நேரத்தில் அங்கு என்ன  பருவநிலை, விலைவாசி எப்படி, கலாச்சாரம், போக்குவரத்து என்று எந்த ஐடியாவும் இல்லை. அதைப் பற்றி கவலைப்படவில்லை, அப்போதுதானே த்ரில் இருக்கும்.   

முன்பதிவு செய்தபடி தூத்துக்குடி- ஒக்ஹா செல்லும்  (Tutucorin - okha express) ரயிலில்,  மதுரையிலிருந்து ஏறி துவாரகா (Dwaraka) நோக்கி புறப்பட்டோம். ரயில் பயணம் எப்போதுமே சுவாரஸ்யமானதுதான். அந்த சுவாரஸ்யம் இந்தப்  பயணத்தில் சற்றும் குறைவில்லாமல் இருந்தது. ரயில் பயணம் சுவராஸ்யமாக அமையாவிட்டால்,  மொத்தப்பயணமும் வெறுமையாகிவிடும். அந்த ரயிலில் பயணித்தவர்களில் பெரும்பாலும் அஹமதாபாத்தில் இறங்கி,  ராஜஸ்தான் செல்லக்கூடியவர்கள்தான் அதிகம்.

அப்படி ஓர் சக பயணி, ராஜஸ்தானுக்கு தன் தாயுடன் சொந்த வீட்டை பார்க்கப் போவதாகக் கூறினார். அவர் தந்தை சிறுவயதிலேயே மதுரை வந்துவிட்டதால், அவர்களுக்கு நன்கு தமிழ் தெரிந்திருந்தது. அவரிடம் நாங்கள் குஜராத்துக்கு சுற்றுலா செல்ல இருப்பதை சொல்லி,  'ஏதும் விவரம் சொல்ல முடியுமா?' என்று பேச்சு கொடுத்தோம். அவர் சற்றும் யோசிக்காமல் தன் தாயை எழுப்பி, 'நம்ம மாநிலத்துக்கு சுற்றி பார்க்க வருகிறார்களாம்' என்று விவரத்தை சொல்ல, அவரும் ஆர்வமாய் எங்களுடன் பேச ஆரம்பித்தார்.

   

அந்த பெண்மணி ராஜஸ்தானியாக இருந்தாலும்,  குஜராத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார். துவாரகா  வில் அனைத்து  ஆலயங்களையும்  பார்க்க அரசாங்கமே பேருந்து வசதி செய்திருப்பதையும், அங்கு தங்கும் அறை கிடைப்பது இப்போது சிரமம் என்றும் சொன்னார். அதோடு அஹமதாபாத்தில் ஒரு டிரைவரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து, 'அங்கு சென்றால் இவரை தொடர்பு கொள்ளுங்க...  அவர் உங்களுக்கு உதவுவார்'  என்றார். எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  இதுபோல மற்றவருக்கு வழிகாட்டும் பழக்கம், பெரும்பாலானவர்களிடம் குறைந்து விட்டதை எண்ணி சங்கடப்பட்டோம் .

அதே நேரம் உடன் வந்த சில பயணிகள் கொடுத்த தகவல்கள் இன்னும் கொடுமையாக இருந்தது. அதில் ஒரு இளைஞர் "என்னது, கலவர பூமில காத்து வாங்க போறீங்களா " என்பதுபோல் போல் மிரட்டினார்கள்.  ''ஜி... அங்க ஆட்டோக்காரங்க ரொம்ப மோசமானவங்க, அப்படியே  சவாரி ஏத்திட்டுப்போய் தனியா ஒரு இடத்துல நிறுத்தி கத்தியைக்காட்டி உங்கள் உடமைகளை பறித்து விடுவார்கள்" என்றார். மற்றொருவர், ''பையா இது ரெத்த பூமி பா "  என்று வடிவேலு ஸ்டைலில் சொன்னவர், குஜராத்தில் மதங்களுக்கு இடையே இருந்த பதட்டம் பற்றி சொன்னார். இதை கேட்டு நானும் பிரசன்னாவும் சற்று ஆடித்தான்  போனோம்.  இருந்தாலும் குஜராத்தில் டிராவல் பண்ணியே ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் குறையவே இல்லை.

இப்படியே திக் திக் எதிர்பார்ப்புடன், இரண்டு நாளில் துவாரகாவுக்கு அதிகாலை  வந்தடைந்தோம். ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில், ' ரூம் எங்கே கிடைக்கும்?' என்பது பற்றி நண்பன் பிரசன்னா இந்தியில் விசாரித்துக் கொண்டிருந்தான். எனக்கு அவ்வளவாக இந்தி பரிச்சயம் இல்லாததால்,  அருகில் இருந்து அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று எனக்கு கவுன்ட்டரில் இருந்தவர் பேசுவது புரிய ஆரம்பித்தது. பிரசன்னாவும் நானும் முழித்தோம். ஆம், அவர் தமிழ்தான் பேசினார், அவரும் தமிழர்தான்.  மனம் மகிழ்ச்சியானது. அதன் பிறகு அவரே,  தங்குமிடம் பற்றியும்  சுற்றி பார்ப்பதற்கான  தகவல்களையும் தந்தார். சொற்பமான வாடகையில்  நல்ல ரூம் கிடைத்தது. 
 
அன்று காலை சுற்றி பார்ப்பதற்கு அரசாங்க வாகனத்தைப்  பிடிக்க முடியவில்லை. பிரைவேட் வாடகை ஜீப்பைப் பிடித்தோம். தலைக்கு 100ரூபாய் என்று ருக்மணிதேவி ஆலயம், பெட் துவாரகா, கோபி மந்திர், நாகேஸ்வரம் மற்றும் துவாரக ஆலயம் என்று ஐந்து ஆலயங்களை சுற்றி பார்தோம். அரசாங்க வாகனத்தைவிட இது பெரிதாகவே இருந்தது.

மாலை 5மணிக்கு முடிந்த பயணம் துவாரகை  கடற்கரையில் சற்று ஓய்வெடுக்க நேரம் கொடுத்தது. அதன் பின் துவாரகை  வீதிகளில் வலம் வந்தபோது, சட்டென்று பிரசன்னா ஒரு கடையைப் பார்த்து நின்றான். அதற்கு காரணம் அந்த கடையின் பெயர்தான். "சுப்பிரமணி மதராசி தோசா ரெஸ்ட்டாரென்ட்"  என்று இருந்தது. அருகில் சென்று விசாரித்தால்,  அவர் நம்ம மதுரை நரிமேட்டுக்காரர்.  இரண்டு தலைமுறையாக  இந்த கடையை  நடத்துவதாக கூறினார்.

"நம்ம ஊர்க்காரபசங்க வந்திருக்கீங்க,  அங்க  என்னப்பா பண்றீங்க...? " என விசாரிக்க ஆரம்பித்தார். அமேசன் காட்டுக்குள்ளேயே மாட்டிக் கொண்டாலும் ஊர் ஆளைக் கண்டால் சந்தோஷம் ஏற்படுவது எல்லோருக்கும் உள்ளதுதான். அப்புறம் என்ன,  விசேஷமாக கவனிக்க ஆரம்பித்து விட்டார்.  இரண்டு நாள் ருசியில்லாத உணவை சாப்பிட்ட நாக்குக்கு அங்கு செம விருந்து. அங்கு ஸ்பெஷல் ஐட்டம், பட்டர் மசால் தோசா.  மணமும் ருசியும் அள்ளும். ஒரு தோசை 60 ரூபாய். ஆனால், 4 தோசைக்கு அவர் போனாப் போகுதுன்னு  100 ரூபாய் வாங்கிக் கொண்டார்.  நாங்களும் சிரித்துக்கொண்டே,  அவருடன் 'நாங்க மதுரைடா'' என்று செல்ஃபி எடுத்துக்கொண்டோம். அன்றிரவே அடுத்த பயணம் தொடங்கியது.

ஒக்ஹா(okha) விலிருந்து  சோம்நாத் நோக்கிய இரவு பயணம் தொடங்கியது. எங்கள் இருக்கைக்கு எதிரில்  ஒரு குடும்பம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அவர்களை விசாரித்தால்,  எங்களை விட பெரிய ஊர் சுற்றி என தெரியவந்தது. நேபாளத்தைச் சேர்ந்த அவர்கள் கன்னியாகுமரி, மதுரை, ஊட்டி, பெங்களுர்... என்று பயணித்த பட்டியல் நீண்டு கொண்டே போனது. இருவரும் தொலைபேசி நம்பரை பரிமாறிக் கொண்டோம். அடுத்து நேபாளம்  போவது என்றும்,  அங்கு அவர்களை சந்திப்பது என்றும் பேசிக் கொண்டோம். விடிந்ததும்  சோம்நாத் வந்தோம்.

அந்த நகரின் கிளாக் ரூமிலேயே பையை போட்டுவிட்டு,  குளித்து முடித்து  சோம்நாத ஆலயம் சென்றோம். அங்கே செல்போனுக்கு தடை, கேமராவுக்கு தடை, அதோடு பெல்ட் அணிந்து செல்லவும் தடை. அந்தளவுக்கு பாதுகாப்பு. கேமரா, செல்போனை லாக்கரில் வைத்து விட்டோம் ஆனால் பிரசன்னா பெல்ட்டை அணிந்தே வந்தான். பெல்ட்டை கழற்ற சொன்னார்கள். அதை கழற்றினால் பேன்ட் இறங்கி விடும் என்பதை சொன்னால் செக்யூரிட்டி ஆபிசர்கள் கேட்பதாக இல்லை. பெல்ட்டை கழற்றி, பேன்ட்டை கையால் தூக்கிப்பிடித்தபடியே  சென்றான்.

          

சிவனை மூலவராகவும், அவரோடு பிரம்மா மற்றும் விஷ்ணுவும் கொண்ட ஆலயம் சோம்நாத். இங்கு ஏன் எதற்கு என்று தெரியாமல் விலைவாசி அதிகமாவே இருந்தது, நவம்பர்  மாதத்தில் கொளுத்தும்  வெயில்போல. அன்று இரவே துவாரக ரயில் நிலைய ஊழியர் வழிகாட்டலின்படி,  சோம்நாத்தில் ஒரு ரூம் எடுத்தோம்.  600 ரூபாய்க்கு அருமையான ரூம். இந்த கட்டணத்தில் நம்ம ஊரில் எங்கும் ரூம் கிடைக்காது.  

காலை ரூமை வெக்கேட் செய்துவிட்டு, முதல்நாளே சொல்லி வைத்திருந்த ஆட்டோவில் 700 ரூபாய் கொடுத்து "கிர் நேஷனல் பார்க்" சென்றோம். முன்பதிவில் 9.30க்கு  காட்டுக்குள் செல்ல அனுமதி  கொடுக்கப்பட்டிருந்தது. இங்கே முன்பதிவு செய்தவருக்கு மட்டுமே அனுமதி. அங்கே எங்களுக்கு சரியாக 9.30க்கு ஒரு கைடும் ஜிப்சி ஜீப்பும் கொடுத்து காட்டுக்குள் அனுப்பினர். நாங்களும் உலகத்தில் மூன்றே இடத்தில் உள்ள சிங்க வகையை பார்க்க ஆவலோடு கிளம்பினோம். இரண்டரை மணிநேரம் காட்டுக்குள் சுற்றுவார்கள். அதற்குள் சிங்கம் தென்பட்டால் அதிர்ஷ்டம்தான். அனால் அதற்கான சரியான நேரம் காலை 6.00 மணி மற்றும் மாலை 3.00 மணி. ஆனால் நாங்கள் போன நேரம்  காலை 9.30. சிங்கம் ரெஸ்ட் எடுக்கும் நேரம் அது என்பதால் காண வாய்ப்பு  குறைவாகவே இருந்தது.

சுமார் ஒருமணி நேர பயணம் செய்த பின்னரும் சிங்கத்தை காணோம். 'இன்னும் ஒரு மணிநேரம் உள்ளது,  அதற்குள் சிங்கத்தை பார்த்தால் உண்டு; இல்லாவிட்டால் அவ்ளோதான்' என்றார் 'கைடு. குரங்கு, 'புல்புல்' பறவை இருந்தது. சிங்கத்தைக்  காணோம். சற்று தொலைவில் வனத்துறையினர் இரண்டுபேர் நின்று கொண்டிருந்தனர், அவர்களிடம் போய் 'கைடு' ஏதோ பேசினார்.  எங்களை நோக்கி வேகமாக வந்து, ' இப்போ வரபோகுது தயாரா இருங்க' என்றார்.

உண்மையில் அதிர்ஷ்டம்தான். வந்தது  பெண் சிங்கம். கைடு அப்போது ஒன்று கூறினார்,  "சிலர் இருமுறை புக் செய்தும் பார்க்க முடிவதில்லை. உங்களுக்கு கிடைத்தது 'லக்' தான்" என்றார். கூரை இல்லாத ஜிப்சி, வெயிலும் புழுதி சூழ்ந்த காடும், காட்டுப் பயணமும் ஒன்ஸ் மோர் கேட்கும் வகைதான். 

மதியம்12 மணி அளவில் கிர் தேசியப் பூங்காவை சுற்றி முடித்தோம். அடுத்த இலக்காக பிரசன்னா வைத்தது ஜுனாகத் (junagath). கிர் பகுதியில் இருந்து 78 கி.மீ. தூரம் ஜுனாகத். அங்கு செல்ல ஜீப்பிலேயே எங்களை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். அங்கிருந்து மினி வேனில் ஏறி,  ஜுனாகத் வந்து சேர்ந்தோம். அங்கே ரயில் நிலையத்தின் அருகே அலைந்து திரிந்து ஒரு ரூம் பிடித்தோம். அங்கு  விடுதிகளுக்கு பஞ்சம் உள்ளது.

ஜுனாகத் நகரம் வெறிச்சோடி கிடந்தது. கடைகள் அதிகம் இல்லை, போக்குவரத்துக் கூட  குறைவுதான். புழுதி வெப்பத்தோடு, பந்த் அன்று  மதுரை வீதிகளை சுற்றியதுபோல் இருந்தது. அன்று மாலைப் பொழுதினை sakkarbaug zoo  வில் கழித்தோம். அதன் அருகிலேயே இரவு உணவை முடித்து விட்டு விடுதி திரும்பினோம்.

தொடர்ந்து  நானும் பிரசன்னாவும் ஒரு மிகப்பெரிய சவாலுக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தோம். அது மிக மிகப்பெரிய சவால் என்பதே  "மவுண்ட் கிர்" ரை அடைந்தபோதுதான் தெரிந்தது. 10000 படிகள் செங்குத்தானவை, ஏறினால் பொழுது சாயும்போது திரும்ப முடியாது. அன்று இரவுதான் ஊருக்கு திரும்ப ப்ளான் பண்ணியிருந்தோம். காரணம் கையிலிருந்த பணத்தில் கொஞ்சம்தான் எஞ்சியிருந்தது.

'' பரவாயில்லை ஏறிவிடுவோம்'' என்று பிரசன்னா  ஏறத் தொடங்கினான். இருவரும் 950 படிகள் ஏறியதும் எங்கள் உடலில் பாட்டரி டவுன். அதுமட்டுமில்லாமல் மேலே ஏறினால் அஹமதாபாத் செல்லும் இரவு ரயிலை பிடிக்கமுடியாது, ஆகையால் அங்கிருந்த டெலஸ்கோபில் 10 ரூபாய் கொடுத்து மலை உச்சியில் இருந்த அம்மன் கோவிலை தரிசித்து விட்டோம். அங்கு அன்னைக்கு ஏதோ திருவிழா போலும்,  ஒரே கூட்டம்.  வழிநெடுக மிட்டாய் கடைகள்... அம்மனுக்கு படைப்பார்கள் போல. அங்கே ஆப்பிள் மிகவும் மலிவாகக் கிடைத்தது. 1 கிலோ வாங்கிகொண்டோம். 2 வேளை சாப்பாட்டுச் செலவு மிச்சம்தானே.

அடுத்ததாக நாங்கள் சென்றது Uparkot Fort. அங்கே கிறிஸ்துவுக்கு முன் கட்டப்பட்ட ஆழ் கிணறு இருந்தது. கிணற்றின் ஆழத்திற்கு சென்றே தண்ணீர் எடுத்து வரலாம். அதை முடித்து விட்டு ஆட்டோவில் அறைக்கு திரும்பிய போது,  ஆட்டோ ஓட்டுனர் இறக்கி விட்ட இடத்தின் அருகே தற்செயலாக பார்த்தால், நான் பார்க்க ஆசைப்பட்ட இடம் பழமையும் அழகும் சுமந்து என்முன் நின்றது, அதுதான் முஹமத் மகப்ஹரா( Mahabat Maqbara). உண்மையில் எனக்கு  கண்ணீர் வராத குறைதான். அதைப் பற்றிய வரலாறு எனக்கு தெரியும். அதையும் பார்த்து விட்டு அன்றிரவு அகமதாபாத் செல்ல ரயில் ஏறினோம்.

அகமதாபாத் செல்வதற்கு முன்பே,  அந்த ராஜஸ்தான் பெண்மணி கொடுத்த டிரைவர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு,  எங்கள் வருகையை உறுதி செய்தோம். அதோடு,  அவரையே அடுத்து செல்லும் ஊருக்கெல்லாம் புக் செய்துகொண்டோம். ஆம்,  அகமதாபாத் மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களை பார்ப்பதற்கு தனி வாகனமே சிறந்தது. இல்லாவிட்டால்,  போக்குவரத்துக்கு சிரமம். அதோடு  செலவும் அதிகம்.

அகமதாபாத் ரயில்நிலையத்தில் எங்களுக்காக டிரைவர் சஞ்சய்  காத்திருந்தார். சற்று நேரத்திலேயே அவர் எங்களோடு ஒட்டிக்கொண்டார். ரூம், டாக்ஸி கட்டணம் என்று பல சலுகைகள் செய்து தந்தார். பொதுவாக டாக்ஸி கட்டணம்,  குஜராத்தில் 1கிலோ மீட்டருக்கு 13 ரூபாய். ஆனால் எங்களிடம் 9 ரூபாய் சொல்லி,  500 ரூபாய் குறைவாகவே வாங்கினார்.

முதல் நாள் முதல் இடமாக சபர்மதி நதியை பார்த்தோம் அதன்பின் அட்லாஜ்(Adalaj stepwell), திரி மந்திர்(Tri manthir), சயின்ஸ் சிட்டி, ஜமாத் மசூதி, கண்காரிய ஏரி.  இவைகளில் எங்கள் மனம் கவர்ந்தது ஜமாத் மசூதி. மிகவும் விலாசமான இடம்,  அமைதியான சூழல் அருமையாக இருந்தது.  மதிய உணவை திரி மந்திர் (Tri manthir) கோவிலில் அன்னதானத்தில் உண்டுகளித்தோம். 40 ரூபாய்க்கு அன்லிமிடெட் சாப்பாடு. அந்த குஜராத்தி உணவுக்காக இன்னும் ஒருமுறை போகலாம்.

மறுநாள் தோலவேராவை (dholavera) நோக்கிய பயணம் தொடங்கியது.  அது நெடுந்தூரப்பயணம்.  போகும் வழியில்,  சில இடங்களை பார்தோம். ஹரப்பா நாகரிகம் கண்ட லோத்தல் (Lothal), முதல் முதலில் sintax tank தயாரித்த இடம் கலோல். சூரியனார் கோவில் சென்று இறுதியாக தோலவேராவை அடைந்தோம். தோலவேரா அடைந்தபோது நள்ளிரவு 1மணி.  'அங்கே விடுதி ஏதும் சிறப்பாக இருக்காது, பாதுகாப்பும் இல்லை'  என்றான் பிரசன்னா.

ஆகையால் Thoran gest house வாசலில் படுத்துக்கொண்டோம். உண்மையில் அது ஒரு சுகமான தூக்கம். அன்று பவுர்ணமி நிலவு, மின்னும் நட்சத்திரங்களோடு மெல்லிய காற்றும் தாலாட்டி தூங்க வைத்து.      

மறுநாள் காலை விடிந்ததே பறவைகளின் சத்தத்தில்தான். குளிப்பதற்கு மட்டும் ஒரு அறை தந்தார் மேலாளர். உண்மையில் 1000 ரூபாய்க்கு தகுந்த அறைதான் என்பதை பிரசன்னா உணர்ந்தான். அங்கு உணவெல்லாம் கேவலமாக இருக்கும் என்று படித்ததாக பிரசன்னா சொன்னான், அதையும் தவிடுபொடியாக ஆக்கியது அங்கு வழங்கப்பட்ட  ஆலு பரோட்டா. அதேபோல் மதிய உணவும் அருமை. அங்கே  எல்லா சாப்பாட்டிலும் நீர் மோர் கட்டாயம்.

தோலவேரா, கடவுள் தோன்றும் முன் உருவான நகரம். அதில் இருந்த ஓடைகளும், கழிவுநீர் வெளியேற வசதியாக அமைக்கப்பட்டிருந்த பாதைகளும் ஆச்சர்யமானவை. மதியத்திற்குப் பிறகு அந்த வெள்ளை பாலைவனத்தை பார்க்க சென்றோம். அருமையான காட்சி, ஆனால் இது குளிர்காலம் என்பதால் ஈரப்பதம் அதிகமாய் இருந்தது. உள்ளே இறங்க முடியவில்லை.  ஓரமாகவே நின்று சில புகைப்படம் எடுத்துவிட்டு விடுதிக்கே திரும்பினோம். மாலை ஆறுமணி அளவில் அகமதாபாத் திரும்பினோம்.  செல்லும் வழியில் பவுர்ணமி நிலவில்,  அந்த வெள்ளை பாலைவனம் மனதை கொள்ளை அடித்தது.

ஆறாம் நாள் அகமதாபாத் வந்தடைந்தோம். ஒருநாள் அங்கே தங்குவதே திட்டம்.  டிரைவராக வந்தவர்,  எங்களை ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு(mount  Abu) விற்கு செல்ல யோசனை சொன்னார். அங்கே ரூம் வாடகை குறைவாக இருக்கும் என்றார். அபு ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் மூன்று மாநிலங்களுக்கும் ஒரு கொடைக்கானல்.

அஹமதாபாத் - அபு 3மணி நேரம் தான். அதோடு மறுநாள் தமிழ்நாடுக்கு திரும்ப வேண்டிய ரயில் அபு வழியேதான் வரும், நாம் அங்கேயே ஏறிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அபு கிளம்பினோம். அன்றுமாலை அபுவில் தங்கி சுற்றி விட்டு மறுநாள் சில பல இடங்களை பார்த்து விட்டு,  அன்று மாலை பிகாநகர் - கோயம்புத்தூர் ரயில் ஏறி மதுரைக்கு கிளம்பினோம்.

உண்மையில் பயண ஆரம்பத்தில் குஜராத்தை பற்றி பயமுறுத்தினார்கள். ஆனால் நாங்கள் சந்தித்த அனைத்துமே நல்லவைதான். நல்ல மனிதர்கள், நல்ல சாப்பாடு என்று அனைத்துமே சுமுகமாக முடிந்தது. மற்ற பயணத்தை  விட குஜராத் பயணம் நன்றாகவே இருந்தது. குழப்பம் இல்லாமல் இந்த பயணம் நிறைவேறியதில் வாகன ஓட்டி சஞ்சய்க்கு பெரிய பங்குண்டு.

ஓட்டுநர் சஞ்சய்  தொடர்பு  எண்ணை கொடுத்து உதவிய மதுரையில் வாழும் அந்த ராஜஸ்தானிக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.


- நா.ராஜமுருகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ