Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெகிழி நதி... உலகுக்கே துயரம்!

'வரலாற்று தொன்மைமிக்க எந்த ஒரு பொருளுமே அரசாலும், சமுதாயத்தாலும், மக்களாலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று'

&எந்த சேனலைத் திருப்பினாலும் பிரபல நடிகர் ஒருவர் இதைத்தான் கூறுகிறார். இவர் கூறுவது பெரும்பாலும் வரலாற்று தொன்மைமிக்க கட்டடங்களைப் பற்றித்தான். கட்டடங்களின் மீதே இத்தகைய அக்கறை என்றால்... இந்தப் பூமியில் வசிக்கும் புல், பூண்டு, எறும்பு, யானை, மனிதன் என கோடானுகோடி ஜீவன்களையும் வாழ வைக்கும் ஜீவநதிகளின் மீது எத்தகைய அக்கறை காட்ட வேண்டும்?! ஆனால், இதைப் பற்றியெல்லாம் யோசிக்கக்கூட இங்கே பலருக்கும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பதுதான் வேதனை.

மனிதர்கள், விலங்குகள், தாவரங்களுக்கு மட்டுமல்ல... நதி, அருவி, கடல் என அனைத்துக்கும் உயிர் உண்டு. அவற்றையெல்லாம் இரக்கமே இல்லாமல் கொஞ்சம்கொஞ்சமாக நம்மில் பலரும் கொலை செய்து கொண்டிகிறோம்; கட்டடங்களுக்கு அடியில் உயிருடன் சமாதி கட்டுகிறோம். இப்படி இறந்து கொண்டிருக்கும் ஆறுகளில் ஒன்று... சிற்றாறு.தென்காசி அருகே பசுமை படர்ந்து கிடக்கும் குற்றால மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் ஆறுதான்... சிற்றாறு. இது தாமிரபரணி ஆற்றின் முக்கிய துணை ஆறு. 80 கி.மீ. தூரத்துக்குப் பயணிக்கும் இந்த ஆறு, சீவலப்பேரி என்னும் ஊரில் தாமிரபரணியுடன் இணைகிறது. இந்த சிற்றாருக்கும் துணையாறுகள் உண்டு. ஐந்தருவி ஆறு, அரிகர நதி, அனுமன் நதி, அழுதகன்னியாறு ஆகிய இந்த ஆறுகள், முறையே கசமோட்சபுரம், தென்காசி, வீரகேரளம்புதூர், கடப்பாகொத்தி ஆகிய ஊர்களில் சிற்றாருடன் இணைகின்றன. இதைத்தவிர உப்போடை என்ற துணையாறும் உண்டு. அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகள், அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழகத் தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.

சிற்றாற்றிலிருந்து தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், வீராணம் வட்டம் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. மேலும், இப்பகுதிகளில் நிலத்தடி நீர், குடிநீர் ஆதாரமாகவும் சிற்றாறு விளங்கி வருகிறது சிற்றாறு.


இத்தகைய சிறப்பு வாய்ந்த சிற்றாற்றின் இன்றைய நிலையை இந்தப் புகைப்படங்களே கூறிவிடும். இந்த அவல நிலைக்கு யார் காரணம்?

வேறு யாரும் இல்லை... நாமேதான். சிற்றாற்றின் கரை... ஆங்காங்கே இருபுறமும் அதிகளவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டது. இதனால், அடங்கி ஒடுங்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு. இதனால், ஆற்றில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் தண்ணீர் சாக்கடை நீராக மாறிவிடுகிறது. தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கழிவுநீரும் கலக்கிறது. குற்றாலத்தில் உள்ள பெரும்பான்மையான கட்டடங்களின் செப்டிக் டேங் கழிவுகள் நேரடியாக சிற்றாற்றில் கலக்கின்றன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, நாம் தூக்கி எரியும் நெகிழிப் பைகளும் (பிளாஸ்டிக்), மருத்துவமனைக் கழிவுகளும் கடைசியாக சிற்றாற்றின் கழுத்தை நெறிக்கின்றன.

முன்பொரு காலத்தில் அனைத்து மக்களும் ஆற்றில் குளிக்கச் செல்வார்கள். அங்கேயே துணிகளையும் துவைத்து விடுவார்கள். ஆடு, மாடுகளையும் குளிப்பாட்டுவார்கள். ஓடும் நீர் என்பதால் எந்த அசுத்தமோ... கிருமியோ தேங்கி நிற்பதில்லை. ஆனால், இப்போது நிலையே தலைகீழ். ஆறு ஓடுவதும் இல்லை... யாரும் குளிப்பதும் இல்லை. மாறாக வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டியுள்ளோம். அரசு உதவியுடன் கழிப்பறை கட்டிய பலரும் செப்டிக் டேங்க் கட்டுவதற்கு மறந்து விட்டார்கள் போலும்! இதனால் மனிதக் கழிவுகளின் புகலிடமும் இந்த ஆறே. மேலும், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மட்கும், மட்காத குப்பைகள் அனைத்தயும் தூக்கி வீசுவது இந்த ஆற்றில்தான். சொல்லப்போனால், பல்வேறு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் குப்பைக் கிடங்கே இதுபோன்ற ஆறுகள், ஏரிகள், குளங்கள்தான்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்றில், பல்வகையான நீர்த்தாவரங்கள் மிதக்கும். இதனால் நீர் மிகவும் தூய்மையாக இருக்கும். மேலும், நதியின் சூழல் (க்ஷீவீஸ்மீக்ஷீ மீநீஷீsஹ்stமீனீ) சமநிலையில் இருந்தது. இதனால், மீன் மற்றும் மற்ற நீர்வாழ் உயிரிகள் ஆற்றில் காணப்பட்டன. ஆனால், இப்போது நெகிழியைத் தவிர எதுவும் கண்ணில் படவில்லை.தினமும் பேருந்தில் ஒரு முறையேனும் இந்த ஆற்றைக் கடக்காதவர் இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர், கு.ராஜவேல் போல 'நாமே இந்த ஆற்றை சுத்தம் செய்வோம்' என யோசிப்பார்கள்? கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதம் படிக்கும் ராஜவேல், இந்த ஆற்றை சுத்தம் செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நண்பர்களுக்கு இதைப் பற்றி விளக்கி, தன்னுடன் இணைத்துக் கொண்டு இப்பணியை மேற்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்.

“முதலில் பிளாஸ்டிக் அதிகமாக உபயோகப்படுத்துறது படிச்சவங்கதான். அதைக் குறைச்சுக்கச் சொல்லி அவங்களுக்கு இன்னும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும். படிக்காதவங்களுக்கு சொல்லி புரிய வெச்சுறலாம். ஆனா, படிச்சவங்கள திருத்தத்தான் கொஞ்சம் முயற்சி எடுக்கணும். அரசாங்கமும் கொஞ்சம் உதவி செய்யணும். என்னை மாதிரி நிறைய பேர் ஆர்வமா இருக்கோம். எங்களைப் பயன்படுத்திக்கிட்டு இந்த ஆற்றை சுத்தம் செய்யணும். பல ஏக்கர் நிலத்துக்கு உயிர் கொடுத்த ஆறு... முழுசா சாகறதுக்குள்ள காப்பாத்தணும்''


&ராஜவேலின் பேச்சில், இந்த நதியை உயிர்போகாமல் காப்பாற்றிவிட வேண்டும் என்கிற துடிப்பு தெரிகிறது

அந்தப் பகுதியைக் கடக்கும் அத்தனை பேருக்குமே தோன்றவில்லை என்றாலும், இந்த தனி ஒருவனுக்கு தோன்றியிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய முயற்சிகளுக்கு தோள் கொடுக்கவாவது செய்யலாம்... அவரோடு சேர்ந்து நின்று அரசாங்கத்தை நோக்கிக் குரல் கொடுக்கவாவது செய்யலாம் மக்களே!சமுதாய அக்கறையுடைய இத்தகைய இளைஞர்கள் பலரின் சக்தி, தேவையான இடங்களில் பயன்படுத்தப்படமால் திசைதிரும்பிக் கிடக்கிறது. அதைப் பயன்படுத்தி இன்றே மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இப்போது நாம் மாறினால்தான், நம்முடைய அடுத்தடுத்த தலைமுறைகளாவது நிம்மதியாக வாழும். இல்லையேல், நெகிழியால் மூடப்பட்ட பல ஆறுகள் மரணித்தது போல், அடுத்தடுத்த தலைமுறைகளும் செத்து வீழும்.

நாம் இன்று தூக்கி வீசும் ஒவ்வொரு நெகிழிப்பொருளும் ஓர் ஆற்றின், ஒரு பெருநதியின், ஒரு கடலின் ஏன்... இந்த அகிலத்தின் மரணத்துக்கு தூவும் வாய்க்கரிசி என்பதை மறந்துவிட வேண்டாம் மக்களே!

-ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்