Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூவம் இப்பவும் ஜீவ நதிதான்! - அசரடிக்கும் ஓர் ஆவணப்படம் #WhereIsMyGreenWorld

கூவம் நதியின் வரலாறு, அதன் பெருமைகள், பின்னர் சாக்கடையாகச் சீர்கெட்டுப் போனதன் பின்னணி... இவற்றையெல்லாம் தொகுத்து  கூவம் என்கிற பெயரில் ஆவணப்படமாக்கியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநர் குமரன்.

சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லர், நதிகள் குறித்து ஆய்வு செய்பவர் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குமரனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம். அடிப்படையில் புகைப்படக் கலைஞர். திரைப்பட முயற்சியில் இருக்கும் இவர்,  சில படங்களுக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிலா தொடரின் இயக்குநரும்கூட.

’’ 2011-ம் ஆண்டு போட்டோகிராபர் மாதவன் தலைமையில், ஆறு ஃபோட்டோகிராபர்கள் 'தண்டி வாக்' பண்ணினோம். அகமதாபாத் காந்தி ஆசிரமத்தில் இருந்து தண்டியில் காந்தி உப்புக் காய்ச்சிய இடம் வரைக்கும் , கிட்டத்தட்ட 425 கிலோ மீட்டருக்கு,
24 நாட்கள் நடந்த வாக் அது.

அந்த வாக்,  ஒரு புகைப்படக் கலைஞர் என்ற அடிப்படையில் எனக்கு பலவித கலவையான அனுபவங்களை தந்தது. நமது சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமா இருக்குங்கிறதை நான் நேரில் பார்த்து தெரிந்துகொண்டேன். இவ்வளவு சூழல் கேடுகளுக்கு மத்தியில் வாழ்கிறோமா என்ற எண்ணம் என்னை உறுத்திக்கிட்டே இருந்துச்சு. இதே மாதிரி தமிழ் நாட்டில் ஒரு வாக் போலாம்னு மாதவன் யோசிச்சப்பதான், கூவம் வாக் போலாம்னு தோணுச்சு.


கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள், கேசவபுரத்துல ஆரம்பிச்சு சென்னை கூவம்,  கடலில் கலக்கிற இடம் வரைக்கும் 115 நாட்கள்வரை கூவம் நதிக்கரையோரமாவே வாக் போனோம்.  எங்க டீம் வீடியோ ஷூட் பண்ணினோம். மத்த ஃபோட்டோகிராபர்கள் போட்டோஷூட் பண்ணாங்க. இந்த வாக் எனக்கு உணர்த்தியது எல்லாம்... கூவங்கிறது எவ்வளவு அழகான நதி; நம்ம சுயநலத்துக்காக அதை சாக்கடையா மாத்தி வெச்சிருக்கோம்கிறதுதான்’’ - வேதனையோடு பேசுகிறார் குமரன்

’’கூவம் நதிக்கு ரெண்டு முகங்கள் இருக்கு. கேசவப்புரத்துலேர்ந்து திருவேற்காடு வரைக்கும் இதன் கரையோரத்தில் இருக்கும் அத்தனை கிராமங்களுக்கு கூவம்தான் ஜீவ நதி. இந்த நதியின் கரையோரத்துல  கிடைக்கும் போர்  தண்ணீர் மூலம் நெல், கரும்பு விவசாயம் நடக்குது. மானாவாரி நிலங்கள்ல வேர் கடலை விவசாயம் பண்றாங்க. திருவேற்காட்டில் இருந்து சென்னையில் கடலில் கலக்குற வரைக்கும் கூவம்கிறது சாக்கடை நதி.


இதைக் கடந்துபோகும்போது மூக்கோடு சேர்த்து முகத்தையும் பொத்திக்குவோம். காரணம், அதன் துர்நாற்றம். ஒரு பக்கம் ஜீவ நதியாகவும்  அதன் மற்றொரு பக்கம் சாக்கடை நதியாவும் இருக்கிற ஒரே நதி, உலகத்துல கூவம் நதியாத்தான் இருக்கும். திருவேற்காட்டில்,  ஆவடி- அம்பத்தூர் குப்பைகளை கொட்டுகிற இடத்தில் இருந்துதான் கூவம் நதி சாக்கடையா மாறுது. அதுக்கும் அரை கிலோ மீட்டருக்கு முன்பு,  ஒரு விவசாயி இப்போவரைக்கும் இருபோகம் நெல் விவசாயம் பண்றாருங்கிறது... கூவம் இன்னைக்கும் தன் ஜீவனை இழக்கலைங்கிறதுக்கான ஆதாரம்தானே. கேசவபுரம் டூ திருவேற்காடு வரைக்கும் உள்ள மக்களின் பெரும்பாலான குடிநீர் தேவையைப் போக்குவதும் கூவம் நதிக்கரையோரப் போர் வாட்டர்தான். அங்கு வாழ்ற மக்கள் இன்னைக்கும் கூவம் நதியில் மீன் பிடித்து சாப்பிடுறாங்க. வாத்து மேய்க்கிறாங்க. தோட்ட விவசாயம் பண்ணுறாங்க. கேவசபுரத்தில் இருக்கும் சிவன் கோயில் மூலவரை  அபிஷேசகம் பண்ண 20 ஆண்டுகளுக்கு முன்புவரை கூவத்தில் இருந்துதான் தண்ணீர் எடுத்துட்டுப் போயிருக்காங்க.

கூவம் சாக்கடைனு நாம சொல்லச் சொல்ல இப்போ அவங்க கூவத்தில் தண்ணீர் எடுத்து அபிஷேகம் பண்றது இல்லை. அங்கு இருக்கிற ஒவ்வொரு மக்களிடமும் நதியின் ஈரமான நினைவுகள் இருக்கு. அந்தப் பகுதி மக்கள் அதை தங்களோட உறவுகளில் ஒண்ணாத்தான் கூவத்தைப் பார்க்கிறாங்க. அதை சாக்கடைனு சொன்னா அவங்களுக்கு கோவம் வருது. சமீபத்தில் கூவம் நதியில் வெள்ளம் வந்தப்போ அவங்க முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

கூவம் நதிக்கரையில்  ஒன்பது நாட்கள் நாங்க வாக் போனபோது கண்டது எல்லாம்,  கூவத்தில் ஒரு இடத்தில்கூட தொழிற்சாலைக் கழிவுகள்  கலக்கவில்லை. எல்லாம் நகரத்தில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைக்கழிவுகளும், சாக்கடைக் கழிவுகளும்தான். இவற்றை அரசாங்கத்தின் உள்ளாட்சித் துறையும், பொதுப்பணித் துறையும் முறையாகக் கையாண்டாலே பெரும்பகுதியான கழிவுகளைக் கூவத்தில் கலக்காமல் தவிர்க்கலாம். இங்கிலாந்தின் தேம்ஸ் நதிபோல சென்னையின் கூவத்தையும் மாற்றலாம்.

இதனால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். சென்னை மாநகராட்சி கூவம் ஆற்றின் கரையோரங்களில் பூங்காக்கள் அமைத்து சுத்தமாகப் பராமரித்தாலே தேவையற்ற ஆக்கிரமிப்புகள்  உருவாகாத வண்ணம் பார்த்துக்கொள்ளலாம்’’ என்று ஆற்றாமையுடன் சொல்லி முடித்தார் இயக்குநர் குமரன்.

- கதிர்பாரதி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close