Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்னைக்கு நீங்க சிரிச்சே ஆகோணும்...! - World Laughter Day special

லைஃப்ல எல்லோருக்கும் இது வேணும், அது வேணும்னு பல ஆசைகள் இருக்கும். ஆனா எல்லோருமே ஒருசேர விரும்புவது 'மகிழ்ச்சி'யைத் தான். அந்த மகிழ்ச்சியை விகடன் வாசகர்களுக்கு அளிப்பது விகடன் 'ஜோக்ஸ்'. வேலைப்பளு, வாழ்க்கையின் சிரமங்கள், அன்றாட மனச்சோர்வுக்கு இடையே மக்களுக்கு ஒரு புத்துணர்வைத் தருவது 'ஜோக்ஸ்' எழுத்தாளர்கள் தான். விகடன் வாசகர்களிடையே பிரபலமான ஒரு சில ஜோக் எழுத்தாளர்களுடன் 'World Laughter Day' (உலக சிரிப்பு தினம்) ஆன இன்று ஒரு 'மினி' பேட்டி. இவங்க எல்லோருமே அரசியல், சினிமா, அவ்வப்போது நிகழும் சம்பவங்களை நமக்கு நகைச்சுவையாகத் தருபவர்கள்.

கேள்வி:  நீங்கள் 'ஜோக்ஸ்' எழுதுவதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த விஷயங்கள் என்னென்ன?

பர்வீன் யூனுஸ்: பத்திரிகைகளில் வரும் 'ஜோக்ஸ்' மற்றும் என்னைச் சுற்றி அலுவலகத்தில், வீட்டில், பஸ் ஸ்டாண்டில், ஷாப்பிங் மாலில் நடக்கும் சுவையான சம்பவங்கள் இவை தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

கே.லக்ஷ்மணன்: சிறு வயதிலிருந்தே நான் விகடனின் வாசகன். இப்போது என்னுடைய வயது 44. பள்ளிப் பருவத்திலிருந்தே விகடனைத் தொடர்ந்து வாசித்து வந்தேன். அதில் வந்த 'ஜோக்ஸ்', விகடன் என்றாலே ஒரு ஹாஸ்யம். எந்த விஷயத்தை எழுதினாலும் அதில் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடும். அதைப் படித்து வளர்ந்ததால், அதைப் போலவே நாமும் எழுத வேண்டும் என்ற உணர்வு வந்தது.

ரியாஸ்: இதற்கு முன்னால் பல்வேறு பத்திரிகைகளிலும் எழுதிய எழுத்தாளர்கள் மற்றும் விகடன் ஜோக்ஸ். இதுதான் காரணம்.

அம்பை தேவா:  இன்ஸ்பிரேஷன் என்று எதையும் கூற முடியாது. தேவன் அவர்கள் எழுதிய கட்டுரைகளைப் படித்து இதுபோல நாமும் ஹாஸ்யமாக எழுத வேண்டும் என்று நான் விகடனில் நுழைந்த போது விகடன் ஆசிரியர் அமரர் பாலசுப்ரமணியம் அவர்கள், நிறைய வாய்ப்புகள் கொடுத்ததால் நான் அதில் தொடர்ந்து எழுதினேன். கடிதங்கள் போட்டு ஊக்குவித்தார். அதனால் விகடனில் எழுத வேண்டும் என்பது ஒரு வெறியாகவே மாறி எழுதி வந்தேன். மற்றபடி யாருடைய எழுத்தைப் பார்த்தும் நான் வரவில்லை.

எஸ்கா: உண்மையைக் கூறுவதென்றால் விகடன் தான்! ஏனெனில் எங்கள் வீட்டில் வாங்கும் ஒரே பத்திரிகை அப்போதிருந்து விகடன் மட்டும் தான். அதில் வந்த ஜோக்குகளை பார்த்து இன்ஸ்பையர் ஆகி தான் நான் எழுத ஆரம்பித்தேன்.

'கிணத்துக்கடவு' ரவி: எனக்கு எப்போதும் 'எதையும் ஒருமுறை' செய்து பார்க்கும் வழக்கம் உண்டு. அப்படித்தான் விகடனுக்கும் எழுதி அனுப்பினேன். இயற்கையாகவே எனக்கு சென்ஸ் ஆப் ஹ்யூமர் உண்டு. தவிர கதை எழுதுவதை விட இது கொஞ்சம் ஈஸி என்பதால் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

கேள்வி: 'ஜோக்ஸ்' என்று கூறியவுடன் உங்கள் நினைவுக்கு வரும் ஒரு கேரக்டர், நடிகர், எழுத்தாளர் யார்?

பர்வீன் யூனுஸ்: எழுத்தாளர் சாவி, மதன் மற்றும் விகடனில் கோபுலு!

கே.லக்ஷ்மணன்: எனக்கு மதன் சாருடைய ஜோக்ஸ் மிகவும் பிடிக்கும். அதை எப்போதும் விரும்பிப் படிப்பேன்.

ரியாஸ்: வேறு யாராக இருக்கும், நம் அரசியல் தலைவர்கள் தான்!

அம்பை தேவா: ஜோக்ஸ் என்று எடுத்துக் கொண்டால் எழுத்தாளர் தேவன் தான் கண்முன் தோன்றுவார்.

எஸ்கா: சந்தேகமே இல்லாமல் சார்லி சாப்ளின் தான்.

'கிணத்துக்கடவு' ரவி: இப்போதிருக்கும் நடிகர்களில் வடிவேலு தான் பிடிக்கும். அவருடைய டைமிங், பாடி லேங்குவேஜ், வார்த்தை உச்சரிப்பு எல்லாமே சிறப்பாக இருக்கும்.

கேள்வி:  இப்போது வரும் 'Political Satire'களுக்கும், பழைய 'Political Satire'களுக்கும் ஏதேனும் வித்தியாசங்கள் உள்ளதா? அதைப்பற்றி உங்கள் கருத்து.

பர்வீன் யூனுஸ்: பெரிய மாற்றமில்லை. அப்போது ஓட்டுக்குப் பணம் என்பதெல்லாம் கிடையாது. இப்போது அது இருக்கிறது, அதைப்பற்றி எழுதுகிறார்கள். அவ்வளவு தான்.

கே.லக்ஷ்மணன்: விகடன் இப்போது மட்டுமல்ல எப்போதுமே அரசியல் விஷயங்களை நடுநிலைமை தவறாமல் எழுதுவது தான் அவர்களுடைய ஸ்பெஷாலிட்டி. அது இப்போது மட்டுமல்ல எப்போதுமே விகடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் பெரிய மாற்றம் இருப்பதாக தோன்றவில்லை.

ரியாஸ்: முன்பு இருந்ததை விட இப்போது நிறைய ஊடகங்களில் வருகிறது. அப்போதெல்லாம் எண்ணிப் பார்க்கும் அளவில் தான் இருந்தது. இப்போது எல்லோருமே மீம்ஸ், கமெண்ட்ஸ் என்று நிறைய எழுதுகிறார்கள்.    

அம்பை தேவா: வித்தியாசம் என்று பார்த்தால் அந்தக் காலத்தில் சிறிது சிந்தித்து, சற்று நாகரீகமாக, கௌரவமாகக் கூறினோம்.  இப்போது ஓங்கி பளாரென்று நெற்றியில் அறைவது போல்  சொல்கிறோம். அதற்குக் காரணம் வாசகர்களின் வளர்ச்சி தான். இப்படிக் கூறினால் தான் நல்லது என்று எண்ணுகிறார்கள்.

எஸ்கா: முன்பு இலைமறை காயாக இருந்தது, மேலும் அது ஒரு அரசியல்வாதி அல்லது கட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்தது. இன்று தனிப்பட்ட தாக்குதல் போல தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட தலைவரின் குணநலங்களைத் தாக்குவது போல இருக்கிறது. அது ஆரோக்கியமானதாக இல்லை.

'கிணத்துக்கடவு' ரவி: முன்பெல்லாம் பொதுவாக இருக்கும். இப்போது தலைவர்கள் ஏதாவது செய்தால் அதையே நேரடியாக சொல்வது போல் வந்துவிடுகிறது. சிறிது தைரியமாகத்தான் இருக்கிறது.

கேள்வி:  உங்கள் முதல் ஜோக் எப்போது பிரசுரமானது? அதைப் பார்த்தபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

பர்வீன் யூனுஸ்:  நான் என் வங்கித் தேர்வு ஒன்றிற்கு சென்று வந்தேன், தேர்வை சரியாகச் செய்யாத சோகத்தில் இருந்த போது விகடனில் என் முதல் ஜோக் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் அந்த சோகம் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.

கே.லக்ஷ்மணன்: 2014 நான் மே மாதம் என்னுடைய முதல் ஜோக் வந்தது. விகடனில் வெளியாகியுள்ளது என்ற தகவல் வந்ததும் அன்று இருந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மொத்த உலகமுமே என் பின்னால் நிற்பதைப் போன்ற உணர்வு இருந்தது.

ரியாஸ்: என்னுடைய படைப்பு முதன் முதலில் 2005-ல் வெளிவந்தது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

அம்பை தேவா: 1982-ல் விகடனில் என் முதல் படைப்பு வெளிவந்தது. நான் ஜோக்குகள் நிறைய எழுதுகிறேன், ஆனால் சொந்த வாழ்க்கையில் நான் சந்தித்தது சோகம் தான் அதிகம். இந்த ஜோக்குகள் என் வாழ்க்கையின் சோகங்களை மறக்க வைப்பதாக இருந்தது, இருக்கிறது.

எஸ்கா: 2002-லிருந்து எழுதுகிறேன், என்னுடைய முதல் ஜோக் குமுதத்தில் வெளிவந்தது, இரண்டாவது விகடனில். 2003-ம் வருடம் என்று நினைக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். sms வந்த புதிதில் விகடனில் sms ஜோக்ஸ் என்ற பகுதியில் என் படைப்பு முதன் முதலாக வந்த போது என் ஏரியாவையே இரண்டாக்கி விட்டேன். அந்த படைப்புக்குக் கிடைத்த சன்மானத்தை விட நான் கொடுத்த 'ட்ரீட்' அதிகம்.

'கிணத்துக்கடவு' ரவி: 77-ல் கல்லூரியில் படிக்கும்போது வெளிவந்தது. அன்றும் சரி, இன்றும் என் படைப்புகள் பத்திரிகைகளில் வரும்போது ஒரு பரவச உணர்வு நிறைந்திருக்கும். ஒருவாரம் வரவில்லை என்றாலும் முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு லைக்ஸ் வரவில்லையென்றால் இருக்கும் சோக உணர்வு இருக்கும். எழுதுபவர்களுக்கு ஒரு குழந்தையை ஈன்றேடுப்பது போலத்தான் இருக்கும்.

கேள்வி:  புதிதாக பத்திரிகைகளுக்கு 'ஜோக்ஸ்' எழுத நினைக்கும் விகடன் வாசகர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

பர்வீன் யூனுஸ்: ஒரு 'பன்ச்' இருக்க வேண்டும். படித்ததும் 'அட' என்று சொல்ல வைக்க வேண்டும். அதுதான் 'ஜோக்' என்னைப் பொருத்தவரைக்கும். பயங்கரமாக சிரிக்க வைக்க வேண்டுமென்பது கூட கிடையாது. ஒரு சின்ன 'அட' என்று சொல்ல
வைத்தாலே போதுமானது.

கே.லக்ஷ்மணன்: அன்றாட விஷயங்கள், அதிலுள்ள சிறு சிறு விஷயங்களை மாற்றி எழுதுவது தான் 'ஜோக்ஸ்'. இப்போதைய டிரெண்டில் உள்ள விஷயங்களை வைத்து எழுதுவது மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதைத் தான் நானும் பின்பற்றுகிறேன். இப்போது விகடனில் என்னுடைய ஜோக்ஸ் வருவதற்கும் அதுதான் காரணம் என்று எண்ணுகிறேன்.

ரியாஸ்: ஏற்கனவே வந்த ஜோக்ஸ் அல்லாமல் புதிதாக சிந்தித்து எழுத வேண்டும், ஒருத்தருடைய ஸ்டைலை ஃபாலோ பண்ணாமல் சுயமாக என்ன தோன்றுகிறதோ அதை தனித்துவத்தோடு எழுதுங்கள். நிறைய எழுத வேண்டும் என்றில்லாமல், குறைவாக எழுதினாலும் குவாலிட்டியாக எழுத வேண்டும்.

அம்பை தேவா: புதிதாக எழுத வருகிறார்கள் என்றவுடன், எனக்கு வயது அதிகம் என்று எண்ணிவிடாதீர்கள். எனக்கு வயது 60 ஆகிறது. என்னுடைய அனுபவத்தை நான் கூறுவதென்றால் அதிகமாக எழுத வேண்டும், அதிகமாக சிந்திக்க வேண்டும், எல்லா விஷயங்களிலும் நமக்கு ஒரு அறிவும் புரிதலும் வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் எடுக்காமல் ஒரு தெளிவான தேடுதல் இருந்தால்தான் நாம் ஜெயிக்க முடியும்.

எஸ்கா: ஒரே விஷயம்தான். எந்த பத்திரிகைக்கு எழுதினாலும் அதை ஒரு மாதமாவது தொடர்ந்து வாங்கிப் படியுங்கள். அந்தந்த பத்திரிகைகளின் பாணியைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் எழுதி அனுப்புங்கள்.

'கிணத்துக்கடவு' ரவி: நிறைய வாசியுங்கள், நீங்கள் படிக்கும் அல்லது அன்றாடம் பார்க்கும் விஷயங்களை எப்படி ஜோக்காக மாற்றுவது என்று சிந்தித்துக் கொண்டே இருங்கள். அதைப் புரிந்து கொண்டால் நீங்களும் எளிதாய் எழுதிவிடலாம்.

இந்த நாளை இன்னும் சந்தோஷமாக்க... சில ஜாலி கேலி ஜோக்குகள்..!

http://www.vikatan.com/anandavikatan/2016-apr-13/humour/117843-jokes.art

எடிட்டர் சாய்ஸ்

MUST READ