Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெரியாருக்கெல்லாம் பெரியார் இவர்...!

து 1892-ம் ஆண்டு வெயில் கக்க துவங்கிய ஏப்ரல் மாதம். சென்னை விக்டோரிய டவுன் ஹாலில் சென்னை மஹாஜன சபையின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது பரந்து விரிந்திரிந்த சென்னை மாகாணத்தின் அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை வந்திருந்த பிரதிநிதிகளிடம் கேட்டு, விவாதித்து முக்கியமானவற்றை பிரிட்டிஷ் அரசிற்கு கோரிக்கையாக அனுப்புவது தான் அந்த கூட்டத்தின் நோக்கம். அந்த கூட்டம் நடந்த கூடம் முழுவதும் மேட்டுக்குடி மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீலகிரியிலிருந்து நல்ல அடர் கருப்பு நிறத்தில் நடுவாந்திர உயரத்தில் ஒருவர் வருகிறார். சிலர் அவரை முகசுளிப்புடன் பார்க்கிறார்கள், பலர் அவரை உதாசினப்பார்வையில் சீண்டுகிறார்கள். தீர்க்கமான மனப்பாங்கு கொண்ட அவர், இது எதையும் பொருட்படுத்தவில்லை. தாம் வந்த நோக்கம் தான் அவருக்கு பெரிதாக தோன்றியது.

கூட்டம் ஆரம்பிக்கிறது, ஒவ்வொரு கோரிக்கையாக வாசிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. அடுத்து அந்த நீலகிரி மனிதர் எழுதிய கோரிக்கை வருகிறது. அதை வாசிக்க அந்த  சபையின் தலைவர் அரங்கைய நாயுடு தயங்குகிறார். பின் சுதாரித்து, “தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து எழுதப்பட்டு இருக்கிறது... பிரிட்டிஷ் அரசிற்கு இது குறித்து நன்கு தெரியும் என்பதால்... நாம் இந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க தேவையில்லை... நாம் அடுத்த கோரிக்கைகளை பார்ப்போம்...” என்று அதை சுலபமாக கடக்க முயல்கிறார்.  கூட்டத்திற்கு வந்திருந்த மேட்டுக்குடி மக்கள் பலருக்கும் அது தான் சரியெனப்பட்டது. எல்லாரும் அமோதிக்கிறார்கள். அப்போது நீலகிரியிலிருந்து வந்திருந்த அந்த மனிதர் எழுகிறார்.  தலைவரை பார்த்து பேசத் துவங்குகிறார். அவர் பேசியதன் சாரம் இது தான், “சில பிரிட்டிஷ் அதிகாரிகள் எங்கள் கஷ்டங்களை உணர்ந்து இருக்கிறார்கள். எங்களுக்கு சில உதவிகளையும் செய்து இருக்கிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் படும் வேதனைகளுக்கு காரணமான நீங்கள் அல்லவா, அவர்களை முன்னேற்றுவது குறித்து ஏதேனும் செய்ய வேண்டும். அவர்களின் இழிநிலைக்கு காரணமான நீங்களே இவ்வாறு கைக்கழுவி விடுவது போல் பேசுவது நியாயமாகுமா...?” என்கிறார் தீர்க்கமாக.

அரசு சபையில் முதல் கலக குரல்:

கூட்டம் சலசலக்க துவங்குகிறது. தலைவரை பார்த்து இப்படி கேள்வி கேட்பதா என்று அந்த மாநிற மனிதர்கள் முணுமுணுக்க துவங்குகிறார்கள். தலைவர் அனைவரையும் அமைதி படுத்துகிறார். “இந்த சபை உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்...?” என்கிறார் கொஞ்சம் எள்ளலுடன்.

அந்த கரிய மனிதர், “ஐயா...  பலர்  ‘தெய்வம் அனைவருக்கும் பொதுவானது’ என்கிறார்கள். அது உண்மையாயின் தெய்வம் குடிக்கொண்டுள்ள கோயில்களும் அவ்வாறாகத்தானே இருக்க முடியும். எங்களுக்கும் கடவுளை நேரில் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்கும் அல்லவா... ஏன் எங்களை மட்டும் கோயில்களுக்கு அனுமதிக்க மறுக்கிறீர்கள்...?” என்று மிக மென்மையான குரலில் கேள்வி எழுப்புகிறார்.

இந்த கேள்வியை முடிப்பதற்கு முன்பே, பலர் காதுகளை பொத்திக் கொள்கிறார்கள். சிலர் இவரை பேசவிட்டதே தவறு என்று தலைவரை கடிந்து கொள்கிறார்கள். 

ஒரு அரசு கூட்டத்தில் தீண்டாமைக்கு எதிராக முதல் கலக குரலை எழுப்பிய அந்த மனிதர் தான் அயோத்திதாசப் பண்டிதர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட காத்தவராயன். தென்னிந்தியாவின்  முதல் சாதி எதிர்ப்பு போராளியும் இவரே.

ஒரு பைசாத் தமிழன்:

1845-ம் ஆண்டு, மே மாதம் 20-ம் நாள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்த அயோத்தி தாசர், பின்பு நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். தமிழ், ஆங்கிலம், பாலி ஆகிய மொழிகளை நன்கு கற்றறிந்தார். சித்த மருத்துவத்திலும் நிபுணத்துவம் பெற்றார். எவ்வளவு தான் கற்றாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வேதனை உற்ற அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட  துவங்குகிறார்.

அதற்காக வேண்டியே 1907-ம் ஆண்டு ஜூன் மாதம், ‘ஒரு பைசாத் தமிழன் ’ என்ற இதழை துவங்குகிறார். இதழுக்கான காரணமாக அவரே குறிப்பிட்டவை, “உயர் நிலையும், இடைநிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும், இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிகையை ‘ஒரு பைசாத் தமிழன் ” என்கிறார். ஓராண்டுக்கு பிறகு, வாசகர்களிடம் வேண்டுகோளுக்கு இணங்க ‘தமிழன்’  என்று இதழ் பெயரை மாற்றிவிடுகிறார்.

இலவச கல்வி மற்றும் நிலம்:

முதன் முதலாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக குரல் கொடுத்தவர் அயோத்திதாச பண்டிதர் தான். முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே வழிவகை செய்யும் என்று நம்பிய அவர், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு நான்காம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும் மற்றும் வெறுமனே கிடக்கின்ற நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

போராட்ட களத்தில் மட்டுமல்ல,  பெளத்த பார்வையில் பல ஆய்வுகளை நடத்தி இருக்கிறார். சாக்கிய முனிவரலாறு, நந்தன் சரித்திர தந்திரம், பூர்வ தமிழ்மொழியாம் புத்தரது ஆதி வேதம்,  திருவள்ளுவர் வரலாறு, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி உட்பட பல ஆய்வு நூல்களையும் எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.

இன்று அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள்.

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close