Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாற்றுத்திறனாளிகளின் சரணாலயம்!


து தூக்கம் தொலைத்த பின்னிரவு. மின்சாரம் இல்லா அறையில் இருளும் வெக்கையும் முழுவதுமாகப் படர்ந்திருக்கின்றன. சென்னையில் எங்கேயாவது, அதுவும் எப்போதாவது கேட்கும் பறவைகளின் ஓசை, அன்றிரவு மிகத் தெளிவாகக் கேட்டது. ஒளியைவிட வேகமாகக் கடக்கும் நேரம், அன்று இரவு நத்தையைப்போல் நகர்ந்தது. அந்தத் தனிமையைப் போக்கவும் வெறுமையான நேரத்தை நிரப்பவும் மனதைக் கவரும் திரைப்படம் ஏதேனும் மடிக்கணினியில் இருக்கிறதா எனத் தேடினேன். இயக்குநர் ராம் கொடுத்த, இன்னும் வெளிவராத ‘கடவுளின் அம்மா, அப்பா மற்றும் ஆசிரியர்கள்’ என்ற ஆவணப்படத்தைத் தேர்ந்தெடுத்து ஓடவிட்டேன்.

`Spasticity' எனச் சொல்லக்கூடிய உடல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பம் மற்றும் ஆசிரியர் பற்றிய ஆவணப்படம் அது. குழந்தைக்கும் பெற்றோருக்குமான பாசப் பகிர்வையும் சூழ்நிலை சுழற்சிகளையும் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது இந்தப் படம். இந்தப் படத்தைப் பார்க்கும் வரை, இப்படியும் ஓர் உலகம் இருக்கிறது, இவர்களுக்கும் மகிழ்ச்சி, துக்கம், கோபம், காதல், குடும்பம் என அனைத்தும் இருக்கின்றன என எனக்குத் தெரியாது. பேருந்துகளிலும் அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகளைச் சந்திக்க நேரும்போது, என்னால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறேன்; நீங்களும் செய்திருப்பீர்கள். அப்படிச் செய்யக்கூடிய உதவி மனப்பான்மையே நமக்கான மனநிறைவையும் நிம்மதியான தூக்கத்தையும் அன்று கொடுத்திருக்கும். உதவி பெறக்கூடிய, உதவி செய்யக்கூடிய நபர்களின் வாழ்க்கையைப் பேசும் இந்தப் படம், அவர்களுக்காக நம் பரிதாபத்தைக் கோராமல் அவர்களின் உலகத்தை `அம்மா- அப்பா மற்றும் ஆசிரியர்' வழியே பேசுகிறது; அவர்களுக்குள் இருக்கும் பேரன்பை நமக்குள் கடத்துகிறது; அந்த அப்பழுக்கற்ற ஆத்மாக்களைப் பார்க்கவும் பழகவும் தூண்டுகிறது.

திரைக் காட்சிகளில் வந்த கதாபாத்திரங்களை நிஜ உருவங்களாக நான் சந்தித்த இடம்தான், சென்னை முட்டுக்காட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேசிய மேம்பாட்டு நிறுவனமான (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) NIEPMD. உடல் குறைபாடு உடையோரின் மேம்பாட்டுக்கான மத்திய அரசு நிறுவனம், இந்தியாவிலேயே இது ஒன்றுதான். சிகிச்சைக்காக பல மாநிலங்களில் இருந்து, ஏன் சில சமயம் வெளிநாடுகளில் இருந்தும் வருவதாகக்கூடச் சொன்னார்கள். சுட்டெரிக்கும் ஒரு மதிய வேளையில் அந்தக் குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் அங்கு சந்தித்தேன்.

‘வாழ்க்கை, மோசமான பல வளைவுகளைக் கொண்ட சாலை’ என்பது, அமெரிக்க எழுத்தாளர் மென்கனின் புகழ்பெற்ற வாசகம். அதையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்துவரும், மாலவைச் சந்தித்தோம்.

இவர், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் ஆரியலூரை பூர்வீகமாகக் கொண்டவர். உலகமே மில்லினியம் கொண்டாட்டத்தில் இருந்த 2000 -ம் ஆண்டு பிப்ரவரி 5 -ம் தேதி , மாலாவுக்கு ஒன்றரை கிலோ எடையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு `ரத்னா' எனப் பெயரிட்டார். பிறந்த சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது, அது மற்றவர்களைப்போல் இயல்பாக இல்லை என்று. ஆம், குழந்தைக்கு மூளை முடக்குவாத நோய் இருப்பதோடு, மனவளர்ச்சிக் குறைபாடும் இருந்துள்ளது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, அவர் நிப்மெட்டுக்கு (NIEPMD) வந்துள்ளார்.

ஆழ்ந்த மெளனத்துக்குப் பிறகு, பேசத் தொடங்கிய மாலா, “ரத்னாவை சாகடிக்க, என் கணவர், அம்மா என ஏகப்பட்ட உறவுகள் எவ்வளவோ திட்டம் தீட்டியிருந்தாங்க. `குழந்தையைக் கொன்னுடு, இல்லை... ஏதாவது ஒரு ஆசிரமத்துல விட்டுடு' னு ஆளுக்கொரு யோசனை சொன்னாங்க . இன்னும் சிலர், ‘இவ என்ன தப்பு பண்ணாலோ... அதான் குழந்தை இப்படிப் பொறந்திருக்கு...’ என வார்த்தைகளை வன்மத்தோடு வாரி கொட்டினாங்க. எனக்கு அங்கே இருக்கவே பிடிக்கலை. குழந்தையை அழைச்சுக்கிட்டு கணவரோடு சென்னைக்கு வந்துட்டேன். ரெண்டு வருஷம் கழிச்சு, என் புருஷனும் எங்களை விட்டுட்டுப் போயிட்டாரு.

அப்ப... ரத்னாவுக்கு மூணு வயசு இருக்கும். `அவளைக் கொன்னுட்டு நாமளும் செத்துரலாமா'னு தோணுச்சு... ஒருநாள் அழுதுகிட்டே அவகிட்ட, `ஏம்மா... நாம் செத்துரலாமா?'னு கேட்டேன், அவளுக்கு என்ன புரிஞ்சுச்சுனு தெரியல, கன்னதுல ஓங்கி ஒரு அறை விட்டா. அன்னைக்கு அவ கொடுத்த அறைதான், இன்னைக்கு நாங்க வாழ காரணமா இருக்கு” என்று அவர் சொல்லி முடித்தபோது கண்கள் குளமாகி இருந்தன.

தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார், “பல்வேறு ஆசிரமங்கள்ல இவளைச் சேர்த்துட்டு அங்கேயே நானும் வேலை செஞ்சிருக்கேன். பெரும்பாலான ஆசிரமங்கள் எங்களை `கணக்கு காட்டி பணம் பண்றதுலயே குறியா இருந்துச்சு. சில ஆசிரமங்கள் எங்களை மிகக் கேவலமா நடத்தினாங்க. வீடு கிடைக்கிறதும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. பல ஏமாற்றங்கள், பல்வேறுவிதமான அவமானங்களோட , உறவுகளை இழந்து, போக்கிடம் தெரியாத சூழ்நிலையிலதான் இங்கே வந்து சேர்ந்தேன்” என்று, தான் நிப்மெட்டுக்கு வந்த கதையை விவரித்தார்.

மாலா தற்போது நிப்மெட்டில் பணிபுரிய, ரத்னா அங்கேயே சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரிடம், ``இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில், எப்போதாவது ரத்னா மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதா?” எனக் கேட்டோம்.

“பெத்த பிள்ளையை எப்படிங்க வெறுக்க முடியும்? என் உலகம் இயங்குறதே அவளைச் சுற்றித்தானே! '' என வார்த்தைகளை உதிர்த்தபடி வாஞ்சையோடு ரத்னாவை வாரி அணைத்துக்கொண்டார்.


ரத்னாவை போல அப்துல் ரகுமான் என்ற சிறுவனும் ஆட்டிசம் மற்றும் ஹைப்பர் ஆக்டிவால் பாதிக்கப்பட்டுள்ளவன். நிப்மெட் மையத்தில் சிகிச்சை பெற்றுவருகிறான். அவன் தந்தை அஃப்ரோஷ், வளைகுடா நாடுகளில் வேலைபார்த்தவர், தன் பிள்ளைக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட்டார். அவரிடம், ``உங்களில் உள்ள பலவீனரின் பொருட்டால், உங்களுக்கு உணவு அளிக்கப்படுகிறதா?'’ என்று கேட்டோம. அதற்கு அவர், “ `உங்களில் உள்ள பலவீனர்கள் பொருட்டால், உங்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது' என எங்கள் மார்க்கம் சொல்கிறது. பிறகு எப்படி, நான் அவனை வெறுக்க முடியும்? அவன் மீது அன்பு செலுத்தவும், அரவணைக்கவும்தான் இறைவன் எங்களுக்கு வாழ்வு அளித்துள்ளார். சில சமயம், அவனுடைய நடவடிக்கையால் அவன் மீது கோபம் வந்து அவனை அடிச்சிருக்கேன். உடனே இறைவனிடம், ‘நான் எவ்வளவு தவறு செய்தாலும், என் மீது எவ்வளவு அருள் புரிகிறாயே. அதுபோன்ற மனநிலையை எனக்கும் தருவாயாக’ என மனசு வேண்டும். அவர்களின் உலகம் அற்புதமானதுங்க... குரோதம், பகை, பேராசைனு எதுவும் இல்லை. அது அன்பினால் ஆனது. பிறகு எப்படி நாம அவங்களை வெறுக்க முடியும்?.''

இது, மாலா மற்றும் அப்துல் ரகுமான்களின் கதை மட்டும் அல்ல... மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் அனைவரிடமும் இப்படி ஒரு கதை இருக்கிறது. குழந்தைகளை அவர்கள் கடவுளாகத்தான் பார்க்கிறார்கள்.பேரன்புடன் பழகுகிறார்கள். கடவுள் வாழ தகுதியற்ற உலகுக்கு, நாம்தான் வழிவகுக்கிறோம். பேருந்துகளில், அரசுக் கட்டடங்களில், மால்களில், திரையரங்கங்களில் என எங்குமே அவர்களுக்கான வசதிகள் இல்லை. வீடு தர மறுக்கிறோம், அந்தக் குழந்தைகளைப் பார்த்து பரிதாபப்படுகிறோம் என்ற பெயரில், அவமானப்படுத்துகிறோம். அவர்கள் நம்மிடம் கோருவது ஒன்றே ஒன்றுதான்,‘இந்த உலகம் எங்களுக்குமானதுதான். எங்களையும் அதில் சேர்ந்துக்கொள்ளுங்கள்!’ என்பதுதான்.


ஆம். நம் பாவங்களைக் கழுவ, கடவுளையும் நம் உலகில் சேர்த்துக்கொள்வோம்.


நிப்மெட்

National Institute for empowerment of Persons with Multiple Disabilities-NIEPMD,சென்னை முட்டுக்காட்டில் இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு என அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக பல மருத்துவமனைகள், பள்ளிகள் இருந்தாலும், ஒருங்கிணைந்த நிறுவனமாக இயங்குகிறது நிப்மெட் . Spasticity குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் அல்லாமல், அந்தக் குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் ஒரு குடும்பமாக வாழ ஏற்ற சூழலை இந்த நிறுவனம் ஏற்படுத்தி தருகிறது. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பல ஆய்வுகளையும் செய்துவருகிறது.

- மு.நியாஸ் அகமது


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close